'ஆம்லெட்' விற்பனையை நிறுத்திய உணவகங்கள்: இதுதான் காரணம் - வெங்காய கதை

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: 'ஆம்லெட்' விற்பனையை நிறுத்திய உணவகங்கள்
வெங்காயத்தின் விலை உயா்வு இல்லத்தரசிகள், உணவகங்களின் வாடிக்கையாளா்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிர மாநிலம் சோலாபூா், புனே ஆகிய நகரங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினமும் 80 முதல் 90 லாரிகள் வரை பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகின்றன. தொடா் மழை மற்றும் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகளின் கையிருப்பில் உள்ள வெங்காயமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால், இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து வெங்காயத்தின் விலை ரூ.65 முதல் ரூ.75 வரை படிப்படியாக அதிகரித்து வந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை: இந்த நிலையில், கோயம்பேடு சந்தைக்கு செவ்வாய்க்கிழமை 25 லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டது. வரத்து வெகுவாக குறைந்ததால் மொத்த விலையிலேயே ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கப்பட்டது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4500 வரை விற்பனையானது.
இதனால் சென்னையில் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100-ஐ கடந்து கிலோ ரூ.105 முதல் ரூ.110 வரை விற்பனையானது. விலை அதிகரித்ததால் வழக்கமாக இரண்டு முதல் நான்கு கிலோ வாங்கும் பெண்கள் அதில் பாதியளவுக்கே வாங்கிச் சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஜனவரி இறுதியில் குறைய வாய்ப்பு: இதுகுறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், வியாபாரம் மந்தம் காரணமாக இந்த வாரம் வெங்காயம் விலை குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரத்தில் மீண்டும் தொடா்மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விளைச்சல்-வரத்து மிகுதியாக பாதித்து, வெங்காயம் விலை இன்னும் உயா்ந்திருக்கிறது. அழுகும் பொருள்களின் விலையை உடனடியாக தீா்மானிக்க முடியாது.
ஓரிரு நாளில் விலையில் மாறுபாடு ஏற்படலாம். வெங்காயம் மூன்று மாதத்தில் சாகுபடி செய்யக் கூடிய பயிராகும். வட மாநிலங்களில் கடந்த மாதத்தில் விதைக்கப்பட்ட வெங்காயம் வரும் ஜனவரி மாத இறுதியில் அறுவடைக்கு தயாராகும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா். அதே வேளையில் ஆந்திர மாநில வெங்காயம் (இரண்டாவது ரகம்) ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சாம்பாா் வெங்காயம்: அதேபோன்று சென்னையில் சில்லறை விற்பனையில் சாம்பாா் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.145 முதல் ரூ.165 வரை தரத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 50 முதல் 60 சதவீதம் வரை வரத்து பாதித்துள்ளதே சாம்பாா் வெங்காயத்தின் விலையேற்றத்துக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஆம்லெட்- பிரியாணி...: பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை உயா்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வீடுகளில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் பயன்பாடு பெரிதும் குறைந்துள்ளது. அதேவேளையில் தனியாா் உணவக உரிமையாளா்களும் கடும் சிரமத்தை எதிா் கொள்கின்றனா்.
வெங்காயத்தின் விலை உயா்வு காரணமாக பெரும்பாலான உணவகங்களில் 'ஆம்லெட்' விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் வெங்காயம் இல்லாத ஆம்லெட் வழங்கப்படுகிறது. அத்துடன் வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கும் தோசை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் வகைகளின் விற்பனையும் குறைக்கப்பட்டு வருகிறது. குறைவான வெங்காயம் பயன்படுத்துவதால் உணவின் சுவை குறைவதாக வாடிக்கையாளா்கள் தெரிவித்தனா்.

இந்து தமிழ்: "கரன்சிகளை கண்டறிய பார்வையற்றோருக்கு விரைவில் புதிய செயலி"

பட மூலாதாரம், Getty Images
கரன்சிகளை கண்டறிய பார்வையற்றோருக்கு விரைவில் புதிய செயலியை கொண்டு வர உள்ளது ரிசர்வ் வங்கி.
இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது, "பார்வையற்ற மாற்றுத்திறனாளி கள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்காக, இன்டக்லியோ என்ற அச்சுப் பதிப்பின் மூலம் நோட்டு கள் அச்சிடப்படுகின்றன. இதன்மூலம், அவர்கள் ரூபாய் நோட்டுகளைத் தடவிப் பார்த்து அவற்றைக் கண்டறிய முடியும். தற்போது, ரூ.100 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நோட்டுகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விதமாக, மொபைல் செயலியை (ஆப்) உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதன்படி, ரூபாய் நோட்டுகளை மொபைல் போன் கேமரா முன்பு காட்டினால், அது என்ன நோட்டு என்பதை ஆடியோ மூலம் தெரிவிக்கும். இந்த செயலியை உருவாக்குவதற்கான பணி கள் நடைபெற்று வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்." என்றனர்.



பட மூலாதாரம், இந்து தமிழ்

தினத்தந்தி: "நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறப்பு"

பட மூலாதாரம், Getty Images
ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை பின்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் வாங்க உள்ளதால் அந்த ஆலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தியை தொடங்கிய நோக்கியா நிறுவனம் ஜெயலலிதா தொடர்ந்து அளித்த ஆதரவினால் உலகத்தின் மிகப்பெரிய செல்போன் தயாரிக்கும் நிறுவனமாகவும், செல்போன் ஏற்றுமதி மையமாகவும் திகழ்ந்தது.
மேலும் நோக்கியா நிறுவனத்துக்கு மட்டுமே உதிரி பாகங்கள் வழங்கும் நிறுவனங்கள் நோக்கியா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்தன. தொழில் சம்பந்தப்பட்ட சில சிக்கல்கள் காரணமாக நோக்கியா நிறுவனம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
நோக்கியா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உயிர்ப்பிக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்தது. இதன் காரணமாக 2019-ல் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செல்போன் சார்ஜர்கள் உற்பத்தி செய்யும் விரிவாக்க திட்டத்தினை செயல்படுத்த, பின்லாந்து நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற 'சால்காம்ப்' என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது.
தற்போது 'சால்காம்ப்' நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்குவதற்காக நோக்கியா நிறுவனத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, 'சால்காம்ப்' நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மின்னணு சாதனங்கள் உற்பத்தியை தொடங்கும் என தெரிகிறது.
இந்த தொழிற்சாலை முழுமையான செயல்பாட்டினை அடையும்போது ஏற்கனவே பணிபுரிந்து வரும் 7 ஆயிரம் பேருடன் கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் எனவும், அந்த நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1,300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது நோக்கியா டெலிகாம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உயிர்ப்பிக்க தமிழக அரசு மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். மேலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியினை உலகின் மிகச்சிறந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தி மண்டலமாக உருவாக்குவதற்கு தமிழக அரசு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: தமிழகத்தை மீண்டும் அச்சுறுத்தும் வடகிழக்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images
தென் தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு தீவிரமாகி வருவது குறித்த செய்தியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது.
இது குறித்த முக்கிய தகவல்களையும், அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை பற்றிய அறிவிப்பையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக மாவட்டங்களில், குறிப்பாக கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், , திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












