You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை அனுராதா விபத்து: “அ.தி.மு.கவை போலீஸ் காப்பாற்ற பார்க்கிறது” - மக்கள் குற்றச்சாட்டு
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா. 31 வயதான இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
திங்கட்கிழமை காலை பணிக்குச் செல்வதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் இவர் சறுக்கி கீழே விழுந்துள்ளார்.
அந்த வழியே பின்னால் வந்த லாரி இவரின் கால்களின் மீது ஏறி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ராஜேஸ்வரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றொருவரான விஜயானந்தும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போதிவர்தன் - தாமரை இல்ல திருமண நிகழ்ச்சிக்காகவும், கோவையிலிருந்து சேலம் செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமியை வரவேற்பதற்காகவும் ஞாயிற்றுக்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க கொடிக் கம்பங்கள் சாய்ந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சாலையோரத்தில் நடப்பட்டு இருந்த அதிமுக கொடி கம்பம் ராஜேஸ்வரி செல்லும்போது சரிந்து விழுந்ததாகவும், அதைத் தவிர்ப்பதற்காக அவர் வாகனத்தை நிறுத்த முயற்சிக்கையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், 'அ.தி.மு.க வின் விளம்பர வெறியால் மேலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார்' எனக் கடுமையாக விமர்சித்து ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.
ஆனால் காவல்துறையினர், கொடி கம்பத்திற்கும் விபத்திற்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஒட்டுநர் முருகன் மீது, கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்த சிங்காநல்லூர் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், 'காவல்துறையினர் விபத்து குறித்து பாரபட்சமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காயமடைந்த ராஜேஸ்வரியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற வடிவேல் என்பவரை காவல்துறையினர் இரவு வரை காவல்நிலையத்தில் வைத்திருந்தனர்' எனக் குற்றஞ்சாட்டினார்.
இச்சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் சேலத்தில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகையில், 'பேனர் வைக்கக்கூடாது என மட்டுமே நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. கொடிக்கம்பங்கள் வைப்பது குறித்து எனக்குத் தெரிந்தவரை எந்த உத்தரவுமில்லை' எனப் பதிலளித்துள்ளார்.
படுகாயமடைந்த ராஜேஸ்வரியின் இடது காலில் முக்கிய நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரியவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்