கிராமப்புற மாணவர்களை அறிவியல் நிபுணர்களாக்க உழைக்கும் பெண் #iamthechange

காணொளிக் குறிப்பு, கல்வி முறையில் மாற்றம்! - மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்கும் பெண்
    • எழுதியவர், ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்
    • பதவி, பிபிசி தமிழ்

(Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 11வது அத்தியாயம் இது.)

எவ்வித அடிப்படை வசதியும் இன்றி ஊரக பகுதிகளில் இருக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பம் ஒரு எட்டாக் கணியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், நகர்ப்புறங்களில் தனியார் பள்ளிகள், தேசிய மற்றும் சர்வதேச பாடத்திட்டங்களில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு நிகரான வாய்ப்புகள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தன் நோக்கம் என்கிறார் சூரிய பிரபா.

அதை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள அவர், அதற்காக லாப-நோக்கமற்ற 'யூ கோட்' எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

சூரிய பிரபா

அந்த நிறுவனத்தின் மூலமாக தற்காலம் மட்டுமின்றி, எதிர்காலத்துக்கும் தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

Presentational grey line

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

Presentational grey line

பள்ளிக் கல்வி பாடத்திட்டத்திலேயே இதை சேர்க்க வேண்டிய அவசியம் இன்று உள்ளது எனக் கூறும் சூரிய பிரபா, அதன் மூலமாக புதுமை படைக்க விரும்பும் நாளைய படைப்பாளிகளை ஊக்குவிக்க முடியும் என நம்புகிறார்.

2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் 'யூ கோட்' ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், தற்போது சூரிய பிரபா, அவரது கணவர் உள்பட ஆறு பேர் பணியாற்றி வருகிறார்கள்.

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பின்தங்கிய அரசுப் பள்ளிகளில், குறிப்பாக தமிழ் வழி கல்வியில் பயிலும் மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் பயன்பெறும் வகையில் இரண்டு தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வையும், இலவச பயிற்சி வகுப்புகளையும் இவர் எடுக்கிறார்.

"இலவசமாக பயிற்சி வழங்குகிறேன் என்றவுடன் என்னை சந்தேக கண்ணோடு பார்த்தார்கள். தயங்கிவாறுதான் பின் அனுமதி கொடுத்தார்கள்," என்கிறார் சூரிய பிரபா.

சூரிய பிரபா

தொடர்ந்து பேசிய அவர், "என் சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள கம்பம். தேனி கலைக்கல்லூரியிலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திலும் நுண்ணுயிரியல் பிரிவில் பயின்று பட்டம் பெற்றேன். திருமணம் நடந்தது, குழந்தைகள் பிறந்தது. சென்னையில் குடியமர்ந்தேன். பின்னர் சமூகத்திற்கு பயன் தரும் வகையில் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். கணவர் கார்த்திக் மென்பொருளாக்கத் துறை வல்லுநர் என்பதால் அவ்வப்போது நவீன தொழில்நுட்பம் குறித்து என்னிடம் பகிர்ந்துகொள்வார்," என்றார்.

இதுதான் தன் முயற்சிகளுக்கு ஆரம்பமாக அமைந்தது எனக் கூறும் அவர், "படிக்கும் குழந்தை எங்கு படித்தாலும் வாழ்க்கையில் சாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால், அந்த குழந்தை எது குறித்தெல்லாம் படிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, ரோபோடிக்ஸ் சொல்லிக் கொடுப்பதற்கான அடிப்படை உபகரணங்களை வாங்குவதற்கு மட்டுமே பல லட்சங்கள் செலவிட வேண்டும் என்ற நிலையில், ஒரு பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த குழந்தையால் அதற்கு மாதம் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து படிக்க முடியுமா?" என்று கேள்வியெழுப்புகிறார் சூர்யபிரபா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

.