ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உயிருக்கு போராடிய அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை

நாளேடுகளில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.
தி இந்து தமிழ் - ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நோயுற்ற அண்ணனுக்கு ஆம்புலன்ஸ் தராததால் செங்கற்களை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டியில் அண்ணனை சிகிச்சைக்காக தங்கை அழைத்துச் சென்றதாகவும், ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தி இந்து தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சிறிதுகாலமாக உடல் நலம் பாதித்த நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்துள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட அவரது தங்கை விழுப்புரத்திலிருந்து அண்ணனைப் பார்க்க வந்தார்.

அவரது உடல் நிலையைப் பார்த்து பதறிப்போய் பக்கத்தில் 4 கி.மீ.தொலைவில் உள்ள புதுவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்டபோது, செங்கல் சூளை தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேறு வழியில்லாத நிலையில், கையில் பணமும் இல்லை என்பதால் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் அண்ணனை படுக்கவைத்து உடன் வேலைச் செய்யும் நபர் ஒருவரை அழைத்துக்கொண்டு தானே தள்ளுவண்டியை இழுத்துச் சென்றுள்ளார் . வழியெங்கும் அவரைக்கடந்துச் சென்ற வாகன ஓட்டிகள் யாரும் உதவ முன்வரவில்லை.
ஆனால் அதை புகைப்படமும், வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்று இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர் - பி.ஃஎப். சந்தாதார்களுக்கு புது வசதி அறிமுகம்

பி.ஃஎப். எனப்படும் சேமநல நிதியில் பணம் எடுக்க யு.ஏ.என். எண் பெறுவதற்கு இனிமேல் பணியாற்றும் நிறுவனத்தை சார்ந்திருக்க தேவையில்லை, நீங்களே உங்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளலாம். இதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும்.
அதில் தொழிலாளரின் பி.ஃஎப்., எண் மாறும், அவர் எத்தனை நிறுவனம் மாறினாலும், அவரது ஓய்வு காலம் வரை யு.ஏ.என். எண் மாறாது.
தற்போது பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவை யு.ஏ.என். அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவதால், அந்த நம்பர்தான் அவரது பணி ஓய்வு காலம் வரை இணையதளத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.

தினதந்தி - கீழடி அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த ரூ. 12 கோடியில் அருங்காட்சியகம்

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு தினமாக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாக தினதந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, 62 ஆண்டுகளுக்கு பின்பு முதன் முறையாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு தினம் அரசு விழாவாக நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா கொந்தகை கிராமத்தில் ஒரு புதிய உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
“இதன் மூலம் தமிழர்களின் பண்டைய பண்பாடு மற்றும் தொன்மை குறித்து மக்கள் அறிந்து கொள்ள முடியும்” என்று கூறியதாக தினதந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்து - மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, நகர்புற வேலைவாய்ப்பின்மை 8.9% இருப்பதாக தெரிவித்துள்ளது. 8.3% என்ற அளவில் இருப்பதாக கணிக்கப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பின்மையைவிட இது சற்று அதிகமாகும் என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் 8.5% என அதிகரித்தது. இது 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்த வேலையில்லா திண்டாட்டத்தைவிட அதிகம் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகள் காட்டுகின்றன என்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












