ஆந்திரா அரசு மது விற்பனை: தமிழகத்தைப் போல செய்யப்படும் முயற்சி பலன் அளிக்குமா?

மது

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தீப்தி பத்தினி
    • பதவி, பிபிசி தெலுங்கு

அது 2017 டிசம்பர். ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நிடமாரூ கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான வரலட்சுமியும், 27 பெண்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற மதுக் கடைகள் மற்றும் மது அருந்தும் அறைகள் இருக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை. அதன் பிறகு அவர்கள் அந்தக் கிராமத்தில் இருந்த மீன்பிடி குளத்தில் குதித்துவிட்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர் என்றாலும், இன்றைக்கு அந்தக் கிராமத்துக்கு அருகில் ஒரு மதுக் கடையும் கிடையாது.

''நாங்கள் 16 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அதில் சுமார் 400 பெண்கள் பங்கேற்றனர். பொறுமை இழந்த நாங்கள், எங்கள் கிராமத்தில் மதுக் கடையை அனுமதிப்பதைவிட, உயிரை விடவும் தயார் என்று அறிவித்துவிட்டு, மீன்பிடி குளத்தில் குதித்தோம்,'' என்கிறார் வரலட்சுமி.

கிராமத்தில் சட்டவிரோத மதுக் கடை இருந்ததால் கல்லூரி செல்லும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததை பெண்கள் பார்த்தனர். அதனால்தான் மதுக் கடைகளுக்கு எதிராகப் போராட அவர்கள் தெருவுக்கு வந்தனர் என்று அவர் கூறினார்.

இது நிடமாரூ கிராமத்தில் நடந்த சம்பவம் மட்டுமல்ல. அதே மாவட்டத்தில் 2018ல் அச்சயம்மாவும், சிவட்டம் கிராம மக்களும் முன்னெடுத்த போராட்டம் 10 மதுக் கடைகளை மூடும் நிலையை உருவாக்கியது.

வரலட்சுமி மற்றும் அச்சயம்மாவைப் போல ஏராளமான பெண்கள் பல ஆண்டுகளாக மதுவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

''முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் மாநிலத்தில் மதுவுக்குத் தடை விதிப்பதற்கு முன்பு மதுவுக்கு எதிரான போராட்டத்திலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். மாற்றத்தை என் கண்காளால் கண்டிருக்கிறேன். மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பிள்ளைகளின் கல்விக்கு அல்லது சொத்துகள் வாங்க தங்கள் பணத்தை செலவிட்டனர். மீண்டும் மதுக் கடைகள் வந்ததால், பிரச்சனை மறுபடியும் தொடக்க நிலைக்குப் போய்விட்டது,'' என்று வரலட்சுமி வருத்தம் தெரிவிக்கிறார்.

ஜெகன் மோகன்

கடந்த சில ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக நடந்து வந்த போராட்டங்கள், சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரத்துக்கான பொருளாக மாறியது. முதல்வராகப் பொறுப்பேற்ற ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கை அமல் செய்வதற்கான செயல் திட்ட வரைவை 2019 அக்டோபர் 2ம் தேதி வெளியிட்டார்.

ஆந்திராவில் படிப்படியாக மதுவிலக்கு அமல்

புதிய மதுக் கொள்கையின்படி, 2019 அக்டோபர் 1ம் தேதியில் இருந்து மாநில அரசுக்கு சொந்தமான ஆந்திரப் பிரதேச டிரிங்க்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மூலமாக மதுக் கடைகள் நடத்தப்படும். சொல்லப்போனால், மாநிலத்தில் மதுக் கடைகளின் எண்ணிக்கையும் 20 சதவீதம் குறைக்கப்பட்டன.

தற்போதைய 4,380 எனும் எண்ணிக்கையில் இருந்து கடைகள் எண்ணிக்கை 3,500 ஆகக் குறைக்கப்பட்டது. அத்துடன் மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரமும் மாற்றப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்றிருந்த நிலையில், அது மாற்றப்பட்டு, காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மது குடிப்பக வசதியும் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் மது குடிப்பகங்கள் மூடப்பட்டிருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"கடந்த காலத்தில் மதுக் கடைகளுக்கு அருகில், மது குடிப்பகங்கள் இருந்தன. முதல்வரின் உத்தரவை அடுத்து கிராமங்களில் உள்ள மது குடிப்பகங்கள் அனைத்தையும் மூடிவிட்டோம்,'' என்று கலால் அதிகாரிகள் தெரிவித்தனர். சொல்லப்போனால், மது வகைகள் மீதான கலால் வரியும் உயர்த்தப் பட்டுள்ளது. மது விலக்கு படிப்படியாக அமல் செய்யப்படவுள்ளது.

அரசே மதுக் கடைகளை நடத்துவதால், கிராமங்களில் மது குடிப்பகங்களை ஊக்குவிக்கும் முயற்சிகள் இருக்காது என்று ஜன சைத்தன்ய வேதிகா அமைப்பைச் சேர்ந்த வி. லட்சுமண ரெட்டி கூறினார். மதுக் கொள்கையை உருவாக்க ஆந்திரப் பிரதேச அரசுக்கு லட்சுமண ரெட்டி ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.

''அரசே நடத்தும் கடைகளில், அரசு நியமிக்கும் அலுவலர்கள் பணியாற்றுவார்கள். எனவே, அதிகபட்ச விற்பனை விலைக்கும் அதிகமாக விற்கும் கேள்வியே எழாது. லாபத்தை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, சட்டவிரோத விற்பனை என்ற கேள்விக்கும், கடைகளின் அருகில் மது குடிப்பதற்கான அறைகள் ஏற்பாடு செய்வது என்பதற்கும் இடம் இருக்காது,'' என்று லட்சுமண ரெட்டி விளக்கினார். இந்த ஏற்பாட்டின் மூலம் 16,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

அரசின் கண்காணிப்பில் மதுக் கடைகள் செயல்பாடு மற்றும் மது விற்பனை

இந்த நடைமுறை டெல்லி, தமிழகம், கேரளம் மற்றும் ராஜஸ்தானில் ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்த மாநிலங்களில் அரசே மதுக் கடைகளை நடத்தி வருகின்றன.

இந்த மாதம் 3ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரையிலான நாட்களில் கேரளாவில் ரூ.487 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்திருப்பதாக கேரள மாநில டிரிங்க்ஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. 2018ல் இதே காலக்கட்டத்தில் ரூ.457 கோடி அளவுக்கு விற்பனை இருந்துள்ளது.

மது விலக்கு தொடர்பாக கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 2014ல் அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக 713 பார்கள் மூடப்பட்டன. அரசு மட்டுமே மதுக் கடைகளை நடத்தும் என்று வரையறை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மதுக் கடைகள் திறந்திருக்காது. இருந்தபோதிலும், 2018ல் இடதுசாரி அரசு இந்த அறிவிக்கையை ரத்து செய்தது. முந்தைய அரசின் சில நிபந்தனைகளை புதிய அரசு தளர்த்தியது. மது விலக்கு அமல் செய்யப்பட்டதால் சுற்றுலா துறை மூலமான வருமானம் பாதிக்கப்பட்டது.

மது

பட மூலாதாரம், Getty Images

''மதுவிலக்கு அமல் செய்வதால் நல்ல பலன்கள் கிடைத்ததாக உலகில் எங்குமே தகவல்கள் இல்லை. மதுவிலக்கு அமல் செய்தால், சட்ட விரோத சாராயம் மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் பழக்கம் அதிகரித்துவிடும். கள்ளச் சந்தை தொழிலுக்கு ஊக்கம் தருவதாக அது அமைந்துவிடும். எனவே அதைத் தடை செய்வதற்குப் பதிலாக, அரசின் கட்டுப்பாட்டில் அந்தக் கடைகளை நடத்துவதே நல்லதாக இருக்கும்,'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மூலம் மதுக் கடைகள் நடத்தப்படுகின்றன. 2003ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த முடிவை எடுத்தார். இன்றைய நிலையில் 5,152 மதுக் கடைகளை டாஸ்மாக் நடத்தி வருகிறது. 2014-15 ஆம் ஆண்டில் மது விற்பனை மூலம் கிடைத்த வருமானம் ரூ.24,164 கோடி. 2018-19ல் அது ரூ.31,157 கோடியாக உயர்ந்துள்ளது.

முழு மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்கள்

குஜராத், மிசோரம், நாகாலாந்து மற்றும் பிகார் மாநிலங்களில் முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ளது. பிகாரில் 2016ல் முழு மதுவிலக்கு அமல் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், பிகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம் 2016-ன் கீழ் பாட்னா உயர்நீதிமன்றத்தில் 2.08 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

மது பாட்டில்

பட மூலாதாரம், Getty Images

2,629 வழக்குகளில் மட்டுமே வழக்கறிஞர் விவாதங்கள் முடிவடைந்துள்ளன. செப்டம்பர் 2019ல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பிகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தின் கீழ் 1.67 லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்குப் பரிசோதனைகள்

ஹரியாணா மாநிலத்தில் 1996ல் முழு மதுவிலக்கு அமல் செய்து பரிசோதிக்கப்பட்டது. ஆனால் 1998ல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் அரசு ரூ.1200 கோடி அளவுக்கு வருவாயை இழந்துள்ளது என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலமும் முழு மதுவிலக்கு பரிசோதனையில் ஈடுபட்டது. 1993ஆம் ஆண்டு நெல்லூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஏலத்தை பெண்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து அந்த இயக்கம் தொடங்கியது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமாதேவி தெரிவித்தார்.

``பெண்கள் ஒரே ஒரு முழக்கத்தை மட்டுமே முன்வைத்தனர். மதுவால் ஏராளமானவர்கள் துன்புற்றுள்ளனர். பல குடும்பங்கள் அழிந்துள்ளன. நெல்லூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அங்கிருந்து தொடங்கிய அந்த இயக்கம் கிருஷ்ணா, குண்டூர் மற்றும் வேறு பல மாவட்டங்களுக்கும் பரவியது. மதுவிலக்கு அமல் செய்வதாக என்.டி. ராமாராவ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். 1994ல் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பே மதுவிலக்கு அமல் கோப்புதான்,'' என்று ரமாதேவி தெரிவித்தார்.

இருந்தபோதிலும் 1997ல் அதை சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார். 16 மாதங்கள் மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் அரசுக்கு ரூ.1200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மதுவால் கிடைக்கும் வருமானத்துக்காக, மக்களின் நலன்களைப் பற்றி கவலைப்படாமல் சந்திரபாபு நாயுடு மதுக் கடைகளை திறந்துவிட்டார் என்று ரமாதேவி குற்றஞ்சாட்டுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

``மது விலக்கு அமலுக்கு வந்தபோது, அந்த சூழ்நிலைக்குப் பழக சில மாதங்கள் தேவைப்பட்டன. விஷ சாராயம் குடித்து சிலர் உயிரிழந்தனர். எனவே, அரசு மதுவிலக்கை ரத்து செய்துவிட்டது. ஆனால், உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால், மதுவிலக்கு அமலில் இருந்த மாதங்களில், குற்றச் செயல்களின் எண்ணிக்கை, குறிப்பாக குடும்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தருந்தது,'' என்கிறார் ரமாதேவி.

மது விற்பனையும், மாநிலத்தின் வருவாயும்

ஆந்திர அரசு 2018-19ல் மது விற்பனையால் கிடைக்கும் வரி மூலம் ரூ.6,222 கோடி வருவாய் ஈட்டியது. அரசின் மொத்த வருமானம் ரூ 1,05,062 கோடி. மாநில பிரிவினைக்குப் பிறகு ரூ.16,000 கோடி கடன் ஏற்பட்டது. இருந்தபோதிலும் இதனால் உடனடி தாக்கம் ஏற்பட்டிருக்காது என கலால் துறை அதிகாரிகள் கூறினர். கலால் துறையின் மூலம் 2019-20ல் ரூ.8,158 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி என்று அறியப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்குப் பிறகு, மாநில அரசுகள் தங்கள் வருவாய்க்கு, பெட்ரோல் மீதான விற்பனை வரியை 15-16 சதவீதம் அளவுக்கும், மது விற்பனையில் 10-15 சதவீதம் அளவுக்கும் சாந்திருக்க வேண்டியுள்ளது என்று சமீபத்தில் வெளியான இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

மது பாட்டில்

பட மூலாதாரம், Getty Images

மதுவிலக்கு தொடர்பாக ஆந்திர அரசின் முடிவு குறித்து மது உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். 2019 ஜூலையில் நடந்த யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிதி செயல்பாடு கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசம் பற்றி பேசப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு பிராண்ட் மது வகைகளை உற்பத்தி செய்கிறது. அதன் வருமானத்தில் 3-4 சதவீதம் ஆந்திராவில் இருந்து கிடைக்கிறது.

''இப்போதைக்கு முழு மதுவிலக்கு இல்லை என்பதால் அரசின் முடிவு வரவேற்புக்கு உரியது. இப்போதைக்கு, சில்லரை வியாபாரத்தை அரசே எடுத்துக் கொண்டுள்ளது. அரசு மதுக் கடைகள் மூலம் விற்பனை நடப்பது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு கலவையான கலவையான உணர்வைத் தருகிறது. இந்த நடைமுறை பல மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது. அந்த மாநிலங்களில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசத்தில் எங்கள் அணுகுமுறையை உருவாக்கிக் கொள்வோம். இப்போதைக்கு கலால் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. மது குடிப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் அரசே நடத்தும் மதுக் கடைகள் தொடர்பாக நாங்கள் சரியான அணுகுமுறையை மேற்கொண்டால், ஆந்திராவில் எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன,'' என்று யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் கிரிபாலு கூறினார்.

ரேடிக்கோ கெய்தான் லிமிடெட் என்பது மற்றொரு நிறுவனம். 2018-19 ஆம் ஆண்டுக்கான அதன் நிதிநிலை அறிக்கையில், மாநிலங்களில் மதுவிலக்கு அமல் செய்யப்படுவதால் ஐ.எம்.எப்.எல். விற்பனையில் எதிர்மறை தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

''வரலாற்றுப்பூர்வமாகப் பார்த்தால் இந்தியாவில் மதுவிலக்கு நீடித்து இருந்தது கிடையாது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துவிட்ட பிறகு, மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுகளுக்கு முக்கியமானதாக உள்ளது,'' என்று ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மதுவிலக்கும், பக்கத்து மாநிலங்களுக்கு உற்சாக வாய்ப்பும்

தெலங்கானாவில் மதுக் கடை உரிமங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கெடு அக்டோபர் 16ஆம் தேதி முடிந்தது. கடந்த ஆண்டைவிட இப்போது 10 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று மாநில கலால் துறை துணை ஆணையர் சி. விவேகானந்த ரெட்டி தெரிவித்துள்ளார்.

''புதிய வியாபாரிகள் விண்ணப்பங்களை வாங்கியிருக்கிறார்கள். முதல் மூன்று நாட்களில் இதற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது,'' என்று அவர் கூறினார்.

மாநில எல்லையில் உள்ள நலகொண்டா, மகபூப்நகர், கம்மம் மாவட்டங்களில் அதிகபட்ச எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டுள்ளன. மதுக் கடைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான உரிமக் கட்டணம் ரூ.2 லட்சம். மாநிலத்தில் மொத்தம் 2,216 மதுக் கடைகள் இருக்கும்.

அரசியல் செயல் திட்டமும் சமூக மாற்றமும்

சமூக நீதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் எய்ம்ஸ் நடத்திய ஓர் ஆய்வில், இந்தியாவில் மொத்தம் 16 கோடி பேருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அவர்களில் 3 கோடி பேர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையில் ஆந்திராவில் மட்டும் 6 சதவீதம் பேர் உள்ளனர்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மறுவாழ்வுக்காக இதுவரை அரசின் சார்பில் ஒரு மறுவாழ்வு மையம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று லட்சுமண ரெட்டி கூறுகிறார்.

மதுவுக்கு எதிரான போராட்டங்கள் ஆந்திராவில் மட்டும் நடக்கவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் மதுவுக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன.

Liquor

தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மகாராஷ்டிர அரசு 2015ல் எழுதிய ஒரு கடிதத்தில், தற்கொலைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மது அடிமைப் பழக்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தேர்தலை ஒட்டி, மதுவிலக்கை தேர்தல் பிரசாரத்தில் சேர்க்காவிட்டால், தேர்தலையே புறக்கணிக்கப் போவதாக பல இடங்களில் பெண்கள் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

ஆந்திர அரசின் முடிவு எப்படி அமல் செய்யப்படுகிறது என்பதைப் பொருத்து அதன் வெற்றி அமையும் என்று வரலட்சுமியும், அச்சயம்மாவும் கூறுகின்றனர்.

''முழு மதுவிலக்கு வரப்போகிறது என்று இப்போது சொல்வது வாய்வீச்சாக இருக்கிறது. நகரங்களில் இதை உறுதியாக அமல்படுத்த வேண்டும்.''

அனுமதியின்றி மது குடிக்கும் அறை வசதிகள் செய்திருந்ததாக 2,872 வழக்குகளும், சட்டவிரோதமாக மது உற்பத்தி செய்ததாக 4,778 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் நாராயண சுவாமி தெரிவித்துள்ளார்.

``நிர்ணயிக்கப்பட்ட நேர இடைவெளியில், அரசே மதுக் கடைகளை நடத்தினாலே போதுமானது. புதிய மது குடிப்பகங்கள் திறக்காமல் இருந்தால் போதும். மது கிடைக்காமல் போவதால், கிராமங்களில் மது குடிக்கும் பழக்கம் குறைந்துவிடும். அதை கவனமாக, உறுதியாக அமல் செய்தால் போதுமானது,'' என்கிறார் அச்சயம்மா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :