ஹாங்காங் போராட்டங்கள் தொடங்க காரணமான சந்தேக நபர் விடுவிப்பு

தைவானில் குற்ற விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சான் தொங்-காய் இப்போது தெரிவித்திருக்கிறார்,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தைவானில் குற்ற விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சான் தொங்-காய் இப்போது தெரிவித்திருக்கிறார்,

கொலை செய்ததாக சந்தேகப்படும் குற்றவாளியான சான் தொங்-காய்-யை ஹாங்காங் அரசு விடுவித்துள்ளது.

இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா மற்றும் தைவானுக்கு நாடுகடத்த வழிவகை செய்வதற்கு சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய காரணமாக இருந்த வழக்கு இவரது கொலை வழக்குதான்.

இத்தகைய சட்ட திருத்தம் ஹாங்காங்கில் மக்கள் போராட்டங்களை தூண்டியது.

கடந்த ஆண்டு ஹாங்காங்கிற்கு தப்பி செல்வதற்கு முன்பு, கர்ப்பிணியாக இருந்த தனது காதலியை கொலை செய்ததாக சான் தொங்-காய் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் கடந்த வார நாடாளுமன்ற அமர்வு தடைப்பட்டது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் கடந்த வார நாடாளுமன்ற அமர்வு தடைப்பட்டது.

ஹாங்காங்கும், தைவானுக்கும் நாடு கடத்தும் ஒப்பந்தம் இல்லாத நிலையில், இந்த வழக்கு வந்தபோது, இந்த சட்டத்தை திருத்துவதாக அரசு முன்மொழிந்தது.

காதலியின் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்தார் என்று பணமோசடி வழக்கில் சான் தொங்-காய் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

புதன்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 வயதான சான் தொங்-காய், பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதோடு, தன் மீதான குற்றச்சாட்டை தைவானில் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாடு கடத்த வகை செய்யும் ஒப்பந்தம் இல்லாத சீனப் பெருநிலப்பகுதி, தைவான் மற்றும் மக்கௌவுக்கு குற்றவாளிகளாக சந்தேகப்படுவோரை நாடு கடத்துவதற்கு இந்த சட்டதிருத்தம் அனுமதிப்பதாக அமைந்துவிடும்.

இதனை பயன்படுத்தி தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் நியாயமற்ற விசாரணைகளை சீனப் பெருநிலப்பகுதி அரசு எடுக்கலாம் என்று விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள்.

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதா புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முறையாக ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் நடந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் இந்த மசோதாவை இடைநிறுத்தி வைப்பதாக பிரதேச அரசு அறிவித்தது.

ஆனால், அக்டோபர் மாதம் நாடாளுமன்றம் கூடும்போதுதான் அதிகாரபூர்வமாக இந்த மசோதாவை திரும்ப பெற முடியும் என்ற நிலை இருந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஹாங்காங் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் ஆண்டுக்கூட்ட உரையாற்ற முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இடையூறு ஏற்படுத்தினர்.

நாடு கடத்தும் மசோதா திருத்தம் தொடர்பாக ஹாங்காங்கில் போராட்டாங்கள் தொடங்கினாலும், முழு ஜனநாயகம், குறைவான சீனாவின் தலையீடு ஆகியவற்றை கோரி இந்த போராட்டங்கள் விரிவடைந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :