மகளின் திருமணத்தில் மாட்டுக்கறி விருந்து: 10 ஆண்டு சிறையும், விடுதலையும்

உணவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராக்ஸி ககடேகர்
    • பதவி, பிபிசி குஜராத்தி

"குற்றம் சுமத்தப்பட்டப்பின் நான் மனதளவில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்தேன்; மன அழுத்தத்துக்கு ஆளானேன். ஏற்கனவே எனக்கு தீவிர பணக்கஷ்டம் இருந்தது தற்போது எனது மன நிம்மதியும் போய்விட்டது." இது 42 வயது சலிம் மக்ரானியின் வார்த்தைகள். அவருக்கு வழங்கப்பட்ட 10 வருட சிறைதண்டனையை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகு அவர் பேசிய வார்த்தைகள் இவை.

தனது மகளின் திருமணத்தில் மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டதற்காக சலீமிற்கு இந்த ஜூலை மாதம் தோராஜி செஷன்ஸ் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது.

வர்த்தக நோக்கத்திற்காக மிருகங்களை வதை செய்யும் குற்றம் அவர் மீது சுமத்தப்படவில்லை. தனது மகளின் திருமண கொண்டாட்டத்தில் பிரியாணி செய்யும்போது அவர் மாட்டுக்றியை பயன்படுத்தியதாகத்தான் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது

நீதிபதி ஆர்.பி.தொலாரியா மக்ரானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், 10,000 செலுத்தி சொந்த பிணையில் செல்லலாம் என்றும் அறிவித்தார்.

அவர் சிறையிலிருந்து செப்டம்பர் 20ம் தேதி விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் உள்ளார். சிறையிலிருந்து வந்து, தனது வயதான பெற்றோர், குழந்தைகள், மற்றும் மனைவியை கண்டவுடன் ஏதோ புதியதொரு வாழ்க்கை கிடைத்தது போல் உணருவதாக அவர் குறிப்பிட்டார். சிறையில் இருக்கும்போது தனது குடும்பத்தை மீண்டும் சந்திக்கமுடியும் என்ற நம்பிக்கை முழுவதும் போய்விட்டதாக அவர் கூறுகிறார்.

`தற்போது அதிகமாக போராட வேண்டும்`

பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய மக்ரானி, "இந்த வழக்கிற்கு முன் என் வாழ்க்கையில் ஒரே ஒரு பிரச்சனைதான் இருந்தது. அது பணப்பிரச்சனை. ஆனால் தற்போது எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலும் சேர்ந்து கொண்டது. என்னை குற்றவாளி என்று சொன்னவுடன் நானும் எனது குடும்பமும் ஆடிப் போய்விட்டோம். இந்த சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ள எங்களுக்கு அதிகமான தைரியம் தேவைப்பட்டது." என்கிறார் மக்ரானி.

மக்ரானியின் வாழ்க்கை மட்டுமல்ல இந்த வழக்குக்கு பிறகு அவரின் குடும்பத்தினரின் வாழ்க்கையும் மாறிவிட்டது. தற்போது தனது குடும்பத்தினருக்கு பெரும் கடன் இருப்பதாகவும், அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்த வழக்குக்கு முன் மக்ரானி தினக்கூலி வேலை செய்து தினமும் 200-300 ரூபாய் வரை சம்பாதித்து வந்தார். ஆனால் தற்போது அவருக்கு அந்த வேலை மீண்டும் கிடைக்குமா என்று சந்தேகமாக இருப்பதாகவும், வேறு வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஆறு பேர் கொண்ட அவரின் குடும்பத்தில் மக்ரானிதான் சம்பாதிக்கும் ஒரே நபர். தனது வழக்கிற்கான செலவை தனது உறவினர்கள் ஏற்றுக் கொண்டாலும் மக்ரானி அதை தற்போது திரும்பிக் கொடுக்க வேண்டும். "நான் இப்போது வந்துவிட்டேன். எனக்காக செலவு செய்த பணத்திற்கு நான்தான் பொறுப்பேற்க வேண்டும். அது பெரிய தொகை. அதை திரும்பிக் கொடுக்க நான் இரண்டு மடங்கு வேலை செய்ய வேண்டும்." என்கிறார் மக்ரானி

மேலும், "என் மீது குற்றம் சுமத்தப்பட்ட பிறகு நான் முற்றிலுமாக உடைந்துவிட்டேன். ஆனால் நான் அல்லாவை நம்பினேன். அவர்தான் எனக்கு புதிய உயிர் கொடுத்தார். நான் எப்போது என்னுடைய வயதான பெற்றோர் குறித்து கவலைப்பட்டு கொண்டிருப்பேன். அவர்களால் வேலைக்கு செல்ல முடியாது. என்னுடைய குடும்பத்தார் என்னை தொடர்ந்து சமாதானம் செய்தனர்." என்கிறார் அவர்.

ஒரு பக்கம் மகளின் திருமணம் மறுபக்கம் தந்தையின் கைது

மக்ரானி, அவரின் திருமண நாளன்று கைது செய்யப்பட்டார். அதன்பின் எட்டு மாதங்களுக்கு அவர் தனது மகளை பார்க்கவேயில்லை. தற்போதும் கூட "எனது கைது குறித்து நினைக்கும்போது மிகவும் வருத்தமடைகிறேன்" என்கிறார் அவர்.

ஆனால் தனது மகள் தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு மக்ரானி மகிழ்ச்சியடைகிறார். நான் கைது செய்யப்பட்டவுடன் எனது உறவினர்கள் கூடி எனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

சலீமிற்கு எதிராக என்ன வழக்கு தொடரப்பட்டது?

மாட்டுக்கன்று (சித்தரிப்பு)

பட மூலாதாரம், Getty Images

குஜராத் ராஜ்கோட்டில் உள்ள தோராஜியில் வசிக்கும் மக்ரானி, கன்றுக்குட்டி ஒன்றை திருடி, கொன்று, அதை மாட்டுக்கறி பிரியாணியாக தனது மகளின் திருமணத்தின்போது பரிமாறியதாக மக்ரானி மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவரின் பக்கத்து வீட்டுக்காரர் சட்டார் கொலியா தனது கன்றுக்குட்டி தொலைந்துபோன பிறகு மக்ரானி மீது வழக்கு தொடுத்தார்.

குஜராத்தில் புதியதாக கொண்டுவரப்பட்ட விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2017-ன் படி முதன்முதலாக கைது செய்யபட்டவர் மக்ரானி.

பசு வதைக்கும், பசுக்களை வாகனங்களின் எடுத்து செல்வதற்கும் அந்த சட்டத்தின்படி கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

"கீழ் நீதிமன்றம் மக்ரானி குற்றம் செய்ததாக கூறி அவருக்கு10 ஆண்டு சிறைதண்டனை வழங்கியது. எனினும் இதில் எந்த வர்த்தக நோக்கமும் இல்லை என்பதாலும், அவர் சந்தையில் மாட்டுக்கறியை விற்கவில்லை என்பதாலும் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது," என மக்ரானியின் வழக்குரைஞர் பிபிசியிடம் தெரிவித்தார்

சலீம் மகளின் திருமணம் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அவர் மீது புகார் தெரிவித்த பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :