உ.பி. மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு தரம் குறைந்ததா? - பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், சமீர் ஆத்மஜ் மிஸ்ரா
    • பதவி, பிபிசிக்காக லக்னோவிலிருந்து

மதிய உணவு திட்டம், அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் அரசின் சாதனைப் பட்டியலிலும் இடம் பெறுவதுண்டு. ஆனால் அதன் குறைபாடுகள் மற்றும் ஊழல் காரணமாக சர்ச்சைகளில் இடம் பெற்றுள்ளது உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டம்.

உணவின் தரம், சமைப்பதில் காட்டப்படும் அலட்சியம் மற்றும் ஊழல் போன்றவற்றுக்காக மட்டுமல்ல, உணவு கொடுக்கும் போது மாணவர்களிடம் சாதி மத பாகுபாடு காட்டுவது போன்ற செய்திகளும் தொடர்ந்து வெளிவருகின்றன.

கடந்த மாதம் மிர்சாபூரில் உள்ள பலியா மாவட்டத்தில் தலித் மாணவர்களுக்கு தனி உணவு வழங்குவதாக செய்தி வந்தது. சத்தான உணவு என்ற பெயரில் மாணவர்களுக்கு சப்பாத்தியும், உப்பும் மட்டுமே வழங்கப்பட்டது.

பலியாவில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்றார். இது பொய்யான தகவல் என்றும், சில எதிர் கட்சித் தலைவர்களால் பரப்பப்பட்ட ஆதாரமற்ற செய்திகள் என்றும் தெரிவித்தார். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு எதிராக குற்றம் சாட்டிய மிர்சாபூர் அதிகாரிகள், அரசின் பணிகளைத் தடுத்ததாக குற்றம் சாட்டினார்கள், அதுவும் அந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றம் சாட்டினார்கள்.

மதிய உணவு திட்டம் என்பது இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் இயக்கப்படும் ஒரு திட்டமாகும். இது 1995 ஆகஸ்ட் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பகட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளின் பெற்றோருக்கு தானியங்கள் வழங்கப்பட்டன, ஆனால் 2004 ஆம் ஆண்டு முதல், உச்சநீதிமன்ற உத்தரவின் படி, ஆரம்ப பள்ளிகளில் சமைத்த உணவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமல்ல, மதரசாக்களிலும் மதிய உணவு வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது.

மதிய உணவு திட்டத்தில் பரிமாறப்படும் உணவு என்ன?

அரசு கொடுக்கும் புள்ளிவிவரங்களின்படி, உத்தரபிரதேசத்தில் சுமார் 1,68,768 பள்ளிகள் உள்ளன, அங்கு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த பள்ளிகளின் மூலமாக மாநில அரசு, ஒரு கோடியே 80 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குகிறது. .

வாரத்தின் ஒவ்வொரு நாளும், குழந்தைகளுக்கு உணவில் என்ன வழங்கப்படும் என்பதற்கான மெனு தயார் செய்யப்பட்டு, அது அனைத்து பள்ளிகளிலும், வளாகத்தில் உள்ள பெரிய கரும்பலகையில் எழுதப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்புகள் உள்ளன. உணவு சமைப்பதற்காக பிரத்யேகமாக சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அண்மை நாட்களில், மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பலவிதமான முறைகேடுகள் பற்றிய செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில், குழந்தைகள் மோசமான உணவைப் பெறுவதாக, பெற்றோர்கள் கோபமடைந்துள்ளனர். பழைய சாதம் மற்றும் அழுகிய வாழைப்பழங்கள் பகல் உணவில் கொடுக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பால் என்ற பெயரில் தண்ணீராக ஒரு பானம் கொடுக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்தத் திட்டத்திற்காக உத்தரப்பிரதேச மாநில அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் செலவழிப்பது மட்டுமல்லாமல், திட்டத்தை கண்காணிப்பதற்காகவும் செயல்படுத்துவதற்காகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் தலைமையில் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர, சமூக தணிக்கை முறையும் அமலில் இருக்கிறது.

குறைபாடு எங்கே?

இவ்வளவு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், மதிய உணவு திட்டம் ஏன் வெற்றிகரமாக செயல்படவில்லை என்பதற்கான காரணங்களை மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் கெஹன்ஸ் கூறுகிறார், "உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதிய உணவு திட்டம் நகரங்களில் சிறப்பாக செயல்படுகிறது, ஏனெனில் அங்கு கண்காணிப்பு நன்றாக உள்ளது மற்றும் பல்வேறு நிலையிலான அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அதைக் கண்காணிக்கிறார்கள்''.

"கிராமங்களில் இந்த திட்டம் முற்றிலும் நம்பிக்கையின் பெயரிலேயே செயல்படுகிறது. இதற்குக் காரணம், எந்தவொரு பொருளும் சரியான நேரத்தில் அங்கு சென்று சேர முடிவதில்லை. அதோடு, பொருட்களுக்கு உரிய நேரத்தில் பணம் செலுத்தப்படுவதில்லை, இதனால் பொருட்கள் விநியோகத்தில் அலட்சியம் காட்டப்படுகிறது. இதைத் தவிர, கிராமத் தலைவர்கள், அதிகாரிகள், சமையல்காரர்கள் என மூன்று தரப்பினரும் இந்த திட்டம் ஒழுங்காக செயல்படுத்தப்படாததற்கு ஓரளவிற்கு பொறுப்பு என்று சொல்லலாம்" என்கிறார் சித்தார்த் கெஹன்ஸ்.

லக்னோ, மதுரா போன்ற சில நகரங்களில் அக்ஷயபத்ரா போன்ற அமைப்புகளால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், மதிய உணவு திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் அத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு முதல் நான்கு சதவீதத்திற்கு மேல் இல்லை என்றும் சித்தார்த் கெஹன்ஸ் கூறுகிறார்.

உண்மையில், கிராமங்களில் இந்த அமைப்பு முக்கியமாக கிராமத் தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியரின் விருப்பப்படி செயல்படுகிறது. அதே நேரத்தில், நகர்ப்புறங்களில் கண்காணிப்பு அதிகமாக இருப்பதால், ஒழுங்காக செயல்படுத்தப்படுகிறது, எனவே தான் மதிய உணவு திட்டம் தொடர்பான புகார்கள் பொதுவாக கிராமப்புறங்களிலிருந்து அதிக அளவில் வருகின்றன.

மதிய உணவு திட்டத்தை கண்காணிக்கும் பறக்கும் படை

இத்திட்டத்தை கண்காணிக்க 2010 முதல் ஐ.வி.ஆர்.எஸ் அடிப்படையிலான முறையை அரசு செயல்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மதிய உணவு ஆணையத்தின் இயக்குனர் விஜய் கிரண் ஆனந்த் என்பவரிடம் பேசினோம். "இந்த முறையின் கீழ், ஒவ்வொரு பள்ளி நாளிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் அல்லது கல்வியாளரின் மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பு விடப்படுகிறது. அந்த சமயத்தில், ஆசிரியர் அன்று எத்தனை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப்படுகிறது என்ற தகவலை சொல்வார்.

அவர்களின் மொபைல் போன்களில் உள்ள எண்களை அழுத்தி மதிய உணவு பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் மதிய உணவு தயாரிக்காத பள்ளி எது என்பது போன்ற தரவுகள் தினசரி அடிப்படையில் குறிக்கப்படுகின்றன " என்று அவர் விரிவாக விளக்கினார்.

இதைத் தவிர, மதிய உணவு திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க மேலதிக வழிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை தவறாமல் சரிபார்த்து, மதிய உணவின் தரத்தை சோதிக்கும் பொறுப்பும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் உத்தரபிரதேசத்தில் புதிய அடிப்படைக் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற சதீஷ் திவேதி, மதிய உணவு திட்டத்தைக் கண்காணிக்க பறக்கும் படை போன்ற சிறப்பு குழு உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பகல் உணவில் குழந்தைகளுக்கு ரொட்டி மட்டுமே தயாரிக்கப்பட்டது என்றும், காய்கறிகளுக்கு பதிலாக உப்பு கொடுக்கப்பட்டதாகவும் பகன் ஜெய்ஸ்வால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

பிபிசியிடம் பேசிய சதீஷ் திவேதி, "இந்த குழு மண்டல நிலையில் செயல்படும், திடீரென்று அதிரடியாக எந்தப் பள்ளிக்கும் நேரில் சென்று பார்வையிட முடியும். இதற்கு அவர்கள் யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை, மதிய உணவையும், அதன் தரத்தையும் பரிசோதித்து, அது குறித்து அரசிடம் நேரடியாக புகாரளிக்க முடியும்" என்று கூறுகிறார்.

தவறுகளுக்கு பொறுப்பு யார் என்பதை அந்த குழு கண்டறிந்து அறிக்கையில் கூறும் நிலையில், அதற்கு ஏற்ப கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பள்ளி ஊழியர்களோ, கிராமத் தலைவர் அல்லது மாவட்ட அளவிலான அதிகாரியாக இருந்தாலும் சரி, யாரும் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது."

மதிய உணவு திட்டத்திற்கான பட்ஜெட் போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், குழந்தைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி சத்தான உணவை வழங்க வேண்டும் என்பதோ, கீழிருந்து மேல் மட்டம் வரையிலான குழந்தைகளுக்கும் இந்தத் திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதும் இந்த திட்டத்தில் இல்லை என்பதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவை அனைத்தையும் மீறி, புதிய கண்காணிப்பு அமைப்பு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: