You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக மாணவி சாதனை: நாசா விண்வெளி மையம் செல்லும் 10ஆம் வகுப்பு பெண்
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளிவந்த முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - நாசா செல்லும் தமிழக மாணவி
தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல தேர்வாகியிருப்பதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
'கோ4குரு' என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது.
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே. தான்யா தஸ்னம், சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் முதல் இடம் பிடித்த ஜே. தான்யா தஸ்னம் என்ற மாணவி தமிழகத்தை சேர்ந்தவர். இவர் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கடச்சனேந்தலை சேர்ந்தவர் என்கிறது தினத்தந்தி செய்தி.
இவர் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஜே.தான்யா தஸ்னம் ஒரு வாரம் செலவிட இருக்கிறார். 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றி பார்ப்பதோடு, அங்குள்ள விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடவும் இருக்கிறார் என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - கீழடியில் கிடைத்த பழங்கால தண்ணீர் தொட்டி
கீழடி அகழாய்வு மையத்தில் தண்ணீர் தொட்டி போன்ற ஓர் அமைப்பை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நான்கடி உயரம், ஐந்தடி நீளம் மற்றும் இடண்டடி அகலம் உள்ள இந்தத் தொட்டி தொழில் உற்பத்தி தேவைகளுக்காக நீரைத் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதை அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் செங்கற்களைவிட பெரியதாக உள்ளன.
அதன் அருகில் இரும்புத் துகள்களும் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு இரும்புப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தினமணி - அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெறச் சென்ற நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக, முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மூலமாக புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சில இடங்களில் உள்நோயாளிகளுக்கும் உடனடியாக சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டது. இருப்பினும், அவசர சிகிச்சைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தையும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தையும் வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது..
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்