மலேசியாவுக்கு ராணுவத் தளவாடங்கள் தந்தால் பாமாயில் - பண்டமாற்று முறைக்கு முயற்சி

மலேசியாவிடம் இருந்து பாமாயில் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக ராணுவத் தளவாடங்களை வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஆறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மலேசியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மொஹமத் சாபு தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, துருக்கி, ஈரான் ஆகியவையே மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள கடற்படைக் கப்பல்கள்

தென்கிழக்கு ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளியல் கொண்ட நாடான மலேசியா, தனது பாதுகாப்பு திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பழைய ராணுவத் தளவாடங்களுக்கு மாற்றாக புதியவற்றை வாங்க விரும்புவதாக அமைச்சர் மொஹமத் சாபு தெரிவித்தார்.

நவீன, புதிய ராணுவத் தளவாடங்களை தனது ராணுவத்தில் இணைப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே மலேசியா சிரமப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி குறைக்கப்பட்டது, அந்நாட்டின் கடற்படையில் புதிய கப்பல்களைச் சேர்க்கும் நடவடிக்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மலேசிய கடற்படையில் உள்ள சில கப்பல்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

பண்டமாற்று முறையில் ஆர்வம் காட்டும் மலேசியா

ராணுவத் தளவாடங்களின் விலை மிக அதிகமாக இருப்பது அடுத்தக்கட்ட நகர்வுக்கு பெரும் தடைக்கல்லாக இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் மொஹமத் சாபு, தளவாடங்களின் மதிப்புக்கு இணையாக பாமாயில் அளிப்பது என்ற ஏற்பாட்டின் மூலம் புதிய கதவுகள் திறந்திருப்பதாக தெரிவித்தார்.

மலேசியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நாடுகள், பண்டமாற்று விற்பனைக்கு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தாங்களும் அந்தத் திசையில் நடைபோடத் தயாராக இருப்பதாகவும், மலேசியாவில் மிக அதிக அளவில் பாமாயில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளவில் பாமாயிலை அதிகம் உற்பத்தி செய்யும் இரு நாடுகள்

மலேசியாவும் இந்தோனீசியாவும் உலகளவில் பாமாயிலை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

உலகளவில் நிலவும் பாமாயில் தேவையின் 85 விழுக்காட்டை இவ்விரு நாடுகளும்தான் பூர்த்தி செய்கின்றன.

உணவுக்காக மட்டுமின்றி உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), சோப்பு ஆகியவற்றின் தயாரிப்பிலும் பாமாயில் பயன்படுத்தப் படுகிறது.

கண்காணிப்பு விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் வாங்க விரும்பும் மலேசியா

இந்நிலையில் புதிய ராணுவத் தளவாடங்களை வாங்குதற்கு ஈடாக மலேசியா எந்தளவிற்கு பாமாயிலை பண்டமாற்று முறையில் பயன்படுத்தும் என்பதை தம்மால் தற்போது கணக்கிட முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மொஹமத் சாபு, கடற்படைக்கான கப்பல்கள் தவிர, நீண்ட தூர கண்காணிப்புக்கான விமானங்களை வாங்குவதிலும் மலேசியா முனைப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்கள், நவீன படகுகள் ஆகியவையும் மலேசியாவின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

"தென்சீன கடற்பகுதி சர்ச்சையில் கவனம் செலுத்துவோம்"

மலேசிய அரசு பாதுகாப்புத் துறை தொடர்பில் பத்தாண்டுகளுக்கான கொள்கை அறிக்கையை நடப்பாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.

நாட்டின் கடற்படைத் திறனை மேம்படுத்துதல், தென்சீன கடற்பகுதி சர்ச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக அமைச்சர் மொஹமத் சாபு தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப்பூர்வமாக இந்தக் கடற்பகுதியானது, தனது அதிகாரத்துக்கு உட்பட்டது என சீனா கூறி வருகிறது. உலக வரைப்படத்தில் காணப்படும் ஒன்பது கோடுகளை தனது கோரிக்கைக்கான ஆதாரமாக அந்நாடு சுட்டிக்காட்டுகிறது.

ஆனால், சீனா குறிப்பிடும் சில கடற்பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானவை என மலேசியா, வியட்நாம், புரூனே, பிலிப்பின்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன.

சீனாவால் எந்தப் பிரச்சனையும் இல்லை - மலேசியா

தனது கடற்பிராந்தியத்துக்குள் நுழையும் சீன கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை கப்பல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

எனினும், தங்களுக்கு இதுவரை சீனாவால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை என்றும் அந்நாடு தெளிவுபடுத்தி உள்ளது.

"அதே வேளையில் தென் கிழக்கு பிராந்தியத்தில் அமைதியும், சமநிலையும் நிலவ வேண்டும் எனில் இப்பகுதியில் உள்ள நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

"அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முண்டியடிக்கும் அமெரிக்கா, சீனா போன்ற மிகப் பெரிய சக்திகளால் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நலன்கள் மூழ்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்," என்கிறார் மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மொஹமத் சாபு.

பண்டைக் காலங்களில் பின்பற்றப்பட்ட பண்டமாற்று முறைக்கு மலேசியா புது வடிவம் கொடுக்க முனைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: