You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்பேத்கர் சிலை உடைப்பு: சம்பவம் தொடர்பாக வேதாரண்யத்தில் 51 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யன்யத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக புதிய சிலை இன்று காலை நிறுவப்பட்டது. இந்த கலவரம், சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமைன்று மாலை வேதாரண்யத்துக்கு பாண்டியராஜன் என்பவர் தன்னுடைய வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இந்த வாகனம் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (24) என்பவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, பாண்டியராஜனின் காரை ஓட்டிவந்த ஓட்டுனர் அருகில் இருந்த காவல்நிலையத்திற்குள் சென்றார். இதற்குப் பிறகு அங்கு வந்த ராமச்சந்திரன் தரப்பினர் கார் மீது தாக்குதல் நடத்தினர். அவரது வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினர். காவல் நிலையம் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
தீயை அணைக்க தீயணைப்பு வாகனம் வந்தபோதும், தாக்குதல் நடத்திய கும்பல் தீயை அணைக்க அனுமதிக்காததால், அந்த கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
இதற்குப் பிறகு அங்கு வந்த பாண்டியராஜன் தரப்பினர், அப்பகுதியில் சாலையின் நடுவில் இருந்த அம்பேத்கர் சிலையின் தலையை வெட்டினர். பிறகு மொத்தமாக அடித்து நொறுக்கினர். அப்போது வேதாரண்யம் காவல் நிலையத்தில் 3 காவலர்களே இருந்ததால், நடவடிக்கை ஏதும் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் நொறுக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக இன்று காலையில் புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. வேதாரண்யத்தில் இருந்த சிலை நொறுக்கப்பட்டதும், வேறு எங்காவது நிறுவுவதற்குத் தயாரான நிலையில் சிலை இருக்கிறதா என தேடப்பட்டது. அப்போது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆறடி உயரத்தில் ஒரு சிலை தயாராக இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த சிலை இரவோடு இரவாக வேதாரண்யத்திற்குக் கொண்டுவரப்பட்டு, காலை ஆறரை மணியளவில், அதே பீடத்தில் நிறுவப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக வேதாரண்யத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 51 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 60 பேர் நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு போதும் என்றாரா அம்பேத்கர்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்