ஜி7 மாநாட்டில் திடீரென கலந்து கொண்ட இரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், முன்னறிவிப்பு ஏதுமின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென இரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாடு பியரிட்சில் நடைபெற்றது.

இரான் - அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மாநாட்டில் இரான் அமைச்சர் கலந்து கொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸ் அதிபரோடு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக இரான் வெளியுறவு அமைச்சர் சாரிஃப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2015 இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு அமெரிக்கா விலகியதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் பி.வி. சிந்து.

"இந்த பதக்கத்தை இன்று பிறந்தநாள் கொண்டாடும் எனது அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன்" என பதக்கம் வென்றபின் சிந்து தெரிவித்தார்.

இதன் மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் பி.வி. சிந்து.

ஆஷஸ் தொடர்: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

ஆஷஸ் தொடரில் அவுட் ஆகாமல் 135 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

ஞாயிறன்று இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.

இந்த போட்டியில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

இதுவே இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் சேஸ் செய்த அதிகபட்ச ரன்களாகும்.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் தகனம்

டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி காலமான முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அருண் ஜெட்லியின் உடல் நேற்று டெல்லி நிகாம்போத் கட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

பாஜக தலைமையகத்திலிருந்து நிகாம்போத் கட் பகுதிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் பாஜக அலுவலகத்திலிருந்து சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

இலங்கை வனப்பகுதியில் காட்டுத்தீ

அமேசான் காட்டுத்தீ குறித்து நாம் கவலைக் கொண்டிருக்கும் வேளையில், இலங்கையிலுள்ள பிரதான வனப் பகுதியிலும் காட்டுத்தீ பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி திகழ்கின்றது.

இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல சுற்றுத்தளம் ஈர்க்கின்றமை விசேட அம்சமாகும்.

எல்ல வனப் பகுதியில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக குறித்த பகுதியிலுள்ள சுமார் 20 ஏக்கருக்கும் அதிகமான நிலப் பரப்பு தீக்கிரையாகியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: