You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீவிர பாதுகாப்பு வளையத்தில் கோவை: தயார் நிலையில் காவல்துறையினர்
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளதால், அங்கு அதிக எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தமிழக காவல்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஐந்து நபர்கள் என மொத்தம் ஆறு பேர் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் அவர்கள் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் மத்திய உளவுத்துறையிலிருந்து தமிழகக் காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாகக் கோவை மற்றும் சென்னை ஆகிய கடலோர மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
''தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். கோவை மாவட்டத்தில் முன்னர் தீவிரவாத சம்பவங்கள் நடந்ததால், அங்கு இன்னும் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் காவல்துறையினர் உள்ளனர். இதுவரை யாரையும் நாங்கள் கைதுசெய்யவில்லை,'' என பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும், மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும், இதுவரை சந்தேகிக்கப்படும் நபர் என யாருடைய புகைப்படங்களையும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
''காவல்துறையினர் சாதாரண உடையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசின் உளவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சோதனையை நடத்துகிறோம்,'' என அந்த அதிகாரி தெரிவித்தார்.
''இலங்கையைச் சேர்ந்தவர்கள் கடல் வழியாக வரக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் கடலோர காவல் படையினர் மீனவ மக்களோடு இணைந்து செயல்படுகிறார்கள். சந்தேகப்படும்படியான நபர்களை கண்டால் அல்லது தகவல்கள் கிடைத்தால் மீனவர்கள் காவல்துறைக்கு தெரிவிக்கும் விதத்தில் அவர்களோடு சந்திப்புகள் நடந்தன,'' என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் பேசிய சென்னை மற்றும் கோவை மாநகர ஆணையர்கள், வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதால், மக்களும் ஒத்துழைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல பேருந்து, ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறை பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க சந்திப்புகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அனைத்து மதத்தினரும் காவல்துறையிடம் கலந்துரையாடி அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்க்கும் முயற்சிகள் நடந்தன.
பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர ஆணையர் சுமித் சரண், "அனைத்து இந்து, இஸ்லாமிய அமைப்பினைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசினோம். மத நல்லிணக்க கூட்டங்களை தொடர்ந்து நடத்தவுள்ளோம். மக்கள் சந்தேகமாக கருதும் விஷயங்களைப் பேசி தீர்த்துக்கொண்டால், வதந்திகள் பரவுவதைத் தவிர்க்கலாம். தேவையற்ற வன்முறைகளை தவிர்க்க இந்த சந்திப்புகள் உதவும். மக்கள் மத்தியில் இணக்கம் ஏற்படும் என்பதால் இந்த சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது தீவிரவாத ஊடுருவல் தொடர்பான விசாரணை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கமுடியாது என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்