You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் பதற்றம்: போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படையினர் இடையே மோதல்; பலர் காயம்
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரின் ஸ்ரீநகர் சௌரா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டம் வெடித்தது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதால் வன்முறை ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தது இருவர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இணையம், செல்பேசி போன்ற தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறையின்போது, கண்ணில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த ஒருவரை தாம் பார்த்ததாக அப்போது களத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஸாதா குறிப்பிட்டார். மேலும் ஒருவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இதில் மொத்தமாக எத்தனை பேர் காயமைடைந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
பெல்லட் குண்டுகளால் காயமடைந்த பலர் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதில் இருந்து போராட்டங்களுக்கான முக்கிய பகுதியாக சௌரா மாறி வருகிறது.
மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
முஸ்லிம் பெரும்பான்மையினை கொண்ட காஷ்மீர், இந்து பெரும்பான்மை கொண்ட ஜம்மு இரண்டும் ஒரு யூனியன் பிரதேசமாகவும், கலாசார மற்றும் வரலாற்று ரீதியாக திபெத்துக்கு நெருக்கமாக உள்ள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கும்.
இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்து அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொலைதொடர்பு வசதிகள் முடக்கப்பட்டன. எனினும், ஒருசில பகுதிகளில் தொலைபேசி சேவைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்