You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? - விரிவான தகவல்கள்
'புகை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு' , ' புகை உயிரைக் கொல்லும்' - இது நாம் அனைவருக்கும் தெரிந்த வாசகம். இதனை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் இந்த முகேஷ் கதையை திரையரங்குகளில் திரையிடுகிறார்கள்.
இப்போது ஏன் இந்தக் கதை என்கிறீர்களா?
காரணமாகதான் முகேஷின் நுரையீரல் எப்படி புகையால் பழுதடைந்ததோ... அதுபோல பூமியின் நுரையீரல் பழுதடைந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மிக மிக மோசமாக.
தெளிவாகவே சொல்லி விடலாம்.
பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு.
என்ன நடக்கிறது?
பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.
2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரிக்கிறது.
பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
#PrayForAmazon ஹாஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.
ஏன் காட்டுத் தீ?
அமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதுதான். ஜூலை - அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாக அதாவது மின்னல்வெட்டின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
இயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.
இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.
பொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்" என்ற தொனியில் பதில் அளித்தார்.
மேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ்சாட்டினார்.
"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை" என்றார்.
பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போதே, "பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன்" கூறி இருந்தார்.
பழங்குடிகள்
இந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டு அழிப்பு ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசானில் வாழும் பழங்குடிகள்தான்.
ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசான் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசானுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறார்கள்.
அமேசானுக்கு எதிரான நடவடிக்கையை தங்களுக்கு எதிரான நடவடிக்கையாக கருதும் இவர்கள் பொல்சனாரூ அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
ஏன் நாம் கவலைக் கொள்ள வேண்டும்?
அமேசானில்தானே காட்டுத்தீ. இதற்காக நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா?
இதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கின் ட்வீட்தான் பதில், 'நம் வீடு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது' என்கிறார்.
இந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன. இதுவொரு சர்வதேச நெருக்கடி என ட்வீட் செய்துள்ளார்.
நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசான் உயிருடன் இருக்க வேண்டும்.
பிற செய்திகள்:
- ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா? - ரகோத்தமன் பேட்டி
- பாலத்திலிருந்து இறக்கப்பட்ட தலித் சடலம்: தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை
- பிக்பாஸ் கதவை உடைத்து சேரனை தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது - இயக்குநர் அமீர்
- கஜகஸ்தான் அரசுக்கு எதிராக களம் இறங்கிய கூகுள் நிறுவனம் - ஏன் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்