You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ப. சிதம்பரம் பூமிக்கு பாரம்: தமிழக முதலமைச்சரின் பேச்சுக்கு கண்டனம்
ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார், அவர் அமைச்சராக இருந்ததே பூமிக்கு பாரம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக மேட்டூர் அணை செவ்வாய்க் கிழமையன்று திறக்கப்பட்டது. அணையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார். இதற்குப் பிறகு அமைச்சர்கள் செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உடனிருக்க செய்தியாளர்களைச் சந்தித்தார் அவர்.
அணை திறப்பு, விவசாயத்திற்கான உதவி ஆகியவை குறித்து பேசிவந்த அவரிடம் செய்தியாளர் ஒருவர், அ.தி.மு.க. குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் விமர்சனம் பற்றி கேள்வியெழுப்பினார்.
"தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக்கினால்கூட அதனை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என ப. சிதம்பரம் கூறியிருக்கிறாரே" என அந்தக் கேள்வி அமைந்தது.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "ப. சிதம்பரம் பூமிக்குத்தான் பாரம்" என்று கூறினார். "என்ன திட்டத்தைக் கொண்டுவந்தார் ப. சிதம்பரம்? அவர் எத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தார்? இந்த நாட்டுக்கு என்ன பயன்? பூமிக்குத்தான் பாரம்" என்று கூறிவிட்டுச் சிரித்தார்.
மேலும், "எவ்வளவு ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். தேவையான நிதியைக் கொடுத்தாரா, புதிய தொழிற்சாலைகளை அமைத்தாரா, புதிய திட்டத்தைக் கொண்டுவந்தாரா, காவிரி நதி நீர் பிரச்சனையையாவது தீர்த்தாரா, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையைத் தீர்த்தாரா, பாலாறு பிரச்சனையைத் தீர்த்தாரா? எந்தப் பிரச்சனையைத் தீர்த்தார்? அவருடைய சுயநலம்தான் அவருக்கு முக்கியம். நான் முதலமைச்சரான பிறகு எத்தனை முறை சேலத்திற்கு வந்திருக்கிறேன். எவ்வளவு திட்டங்களை அறிவித்திருக்கிறேன்? ஆனால் அவர் மத்திய அமைச்சர் ஆன பிறகு எந்த திட்டத்தையாவது மக்களுக்காக அறிவித்தாரா அல்லது தமிழக மக்களைச் சந்தித்தாரா?" என்று கேள்வியெழுப்பினார்.
ப. சிதம்பரத்தின் பேச்சை பொருட்படுத்த வேண்டியதில்லையென்றும் அவரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.
அவரது இந்தப் பேச்சிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நிதியமைச்சராக இருந்தபோது தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட ப. சிதம்பரம் கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டுள்ள கே.எஸ். அழகிரி, ப. சிதம்பரம் படிப்படியாக எப்படி பொறுப்புகளைப் பெற்றார் என்பதை வரலாறு என்று கூறி எடப்பாடி பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.
பதவிக்கு வந்தபோது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்; கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறிய வேண்டாம் எனவும் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.
ப. சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரமும் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்திருக்கிறார்.
"இது முதல்வர் சொல்லக்கூடிய வாசகமா இது? அவரைப் பற்றிய வீடியோக்களை நான் காட்டவா? இந்தியாவில் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்த, ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் பட்டம் பெற்ற ஒருவரை, சரித்திர விபத்தால் முதலமைச்சர் ஆனவர் இப்படிச் சொல்லலாமா? அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். நாளை காலை சாமி கும்பிடும்போது அவரது மனசாட்சி உறுத்தும்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்