Man vs Wild நரேந்திர மோதி: "நான் என்னுடைய வாழ்வில் பயத்தை உணர்ந்ததே இல்லை"

டிஸ்கவரி சேனலின் பிரபல Man vs Wild நிகழ்ச்சியில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொண்டு பியர் கிரில்ஸுடன் பல சாகசங்களில் ஈடுபட்டதை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மழையிலும், குளிரிலும் பியர் கிரில்ஸுடன் பயணிக்கிறார்.

பாஜக தொண்டர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரதமர் கலந்து கொள்ளும் இந்த ஷோவை இந்தியா முழுவதும் பெரிய திரைகளில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பியர் கிரில்ஸ் உடன் ஜிம் கார்பட் பூங்காவில் நரேந்திர மோதி பயணப்பட்ட போது, பியர் கிரில்ஸின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் நரேந்திர மோதி. அதனை 5 தகவல்களாக இங்கே தொகுத்துள்ளோம்.

  • பிரதமர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்த மோதி, "நான் பிரதமர் என்பதை என்றும் தலையில் ஏற்றி கொண்டதில்லை. மக்களின் கனவுகளை பூர்த்தி செய்வதே எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது," என்றார்.
  • பயம் குறித்து கேள்வியெழுப்பிய பியர் கிரில்ஸ், "நான் இதுவரை என்னுடைய வாழ்வில் பயத்தை உணர்ந்ததே இல்லை. பதற்ற நிலை என்றால் என்ன என்பதை என்னால் பொதுமக்களுக்கு விளக்க முடியவில்லை. காரணம், என்னுடைய மனோநிலை மிகவும் நேர்மறையாக இருக்கிறது. அனைத்தையும் நேர்மறையுடன் எதிர்கொள்கிறேன். அதனாலே நான் ஏமாற்றம் அடைவதில்லை," என்றார் நரேந்திர மோதி.
  • "நான் இந்த பயணத்தை விடுமுறையாக கருதினால், கடந்த 18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இதுவாகத்தான் இருக்கும்."
  • தனது குழந்தை பருவம் குறித்து பேசிய மோதி, "குடும்பத்தில் வறுமை இருந்தாலும் இயற்கையுடன் எங்கள் குடும்பம் ஒன்றியிருந்தது. வறுமையிலும் பள்ளிக்குச் செல்லும்போது நான் சுத்தமாக தோற்றமளிப்பேன். நிலக்கரியை சூடாக்கி அதை ஒரு செப்பு கிண்ணத்தில் வைத்து பள்ளிச்சட்டையை சலவை செய்வேன்," என்றார்.
  • வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து பேசிய நரேந்திர மோதி,"என்னுடைய வாழ்க்கை குறித்து ஒரு முடிவெடுக்க நினைத்தேன். ஒரு ஆன்மிக உலகத்தை பார்க்க எண்ணினேன். அதற்காக, வீட்டைவிட்டு வெளியேறி இமய மலைக்குச் சென்றேன். எனக்கு இயற்கை மிகவும் பிடிக்கும். இமய மலையில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கினேன். அது ஒரு அற்புதமான அனுபவம்," என்றார்.

நரேந்திர மோதியின் அறியாத பக்கங்கள் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் பலரும் நரேந்திர மோதியின் கருத்துகளை பதிவிட்டு சமூக ஊடகங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

அதே சமயம் மோதியை கிண்டல் செய்து பதிவுகளும், மீம்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: