You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூட்டு தல: தலைமைப் பண்புக்காக தரம் தாழ்ந்த புரட்சியா?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை அரும்பாக்கம் சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆயுதங்களுடன் மற்றொரு குழுவை சேர்ந்த மாணவர்களை பேருந்தில் இருந்து விரட்டி, சாலையில் துரத்தி தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைதானார்கள். கல்லூரிக்கு பேருந்தில் வரும் மாணவர்களில் எந்த குழுவை சேர்ந்த மாணவன் `ரூட்டு தல'யாக இருக்கவேண்டும் என்பதில் ஏற்பட்ட வன்முறை அது என்று தெரியவந்தது.
கடந்த மாதம் நடந்த இந்த வன்முறை சம்பவத்திற்கு பின்னர், ரூட்டு தல பிரச்சனையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பான பிற காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
ஒரு மாணவரை அரை நிர்வாணப்படுத்தி மற்றொரு குழு, தங்கள் ரூட்தான் சிறந்தது என சொல்லுமாறு கட்டாயப்படுத்தபடும் காட்சிதான் அது.
இரண்டு வாரங்களாக சென்னையில் ரூட்டு தல மாணவர்கள் பலரையும் சந்தித்து அவர்கள் ஏன் ரூட்டு தலயாக செயல்படுகிறார்கள், இதன்மூலம் எதனை நிரூபிக்க விரும்புகிறார்கள், ரூட்டு தலயாக இருந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்போனோம்.
கல்லூரிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதோடு, காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளதால், ரூட்டு தல மாணவர்கள் பலரும் பேச முன்வரவில்லை. நம்மிடம் பேசிய மாணவர்கள் தங்களது அடையாளத்தை வெளியிடக்கூடாது என கேட்டுக்கொண்டனர். ஒரு சில மாணவர்களுக்கு அரசியல்கட்சிகளின் ஆதரவும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
`ரூட்டு தல' என்பவர் யார்?
பேருந்து அல்லது ரயிலில், தொடர்ந்து ஒரே மார்க்கத்தில் பயணிக்கும் மாணவர் ஒருவர், மற்ற மாணவர்களுக்கு தான் தலைவனாக செயல்படப்போவதாக தானாக அறிவித்துக்கொண்டு, தனக்கு தலைமை பண்பு இருப்பதாக சொல்லி தனக்கு கீழ் ஒரு குழுவை உருவாக்குபவர் `ரூட்டு தல' ஆகிறார். அந்த வழித்தடத்துக்கான தலைவன் என்பதுதான் `ரூட்டு தல' என்று அழைக்கப்படுகிறது.
ரூட்டு தல மாணவரின் கீழ் உள்ள மாணவர்கள் தங்களது ரூட்டுக்கு பிரத்தேயகமான கானா பாடல் வைத்திருக்கிறார்கள். சமயத்திற்கு ஏற்றவாறு பாட்டு எழுதுவதும், பாடுவதும் உண்டு. சில சமயம் பிற ரூட்டு மாணவர்களை வசைபாடி அல்லது தங்களது ரூட்டுதான் சிறந்தது என்ற கருத்தில் பாடுகிறார்கள். பேருந்தில் வரும் பிற கல்லூரி மாணவிகளை பற்றிய பாடல்கள், ரூட்டு தலயாக இருப்பவரை புகழ்வது போன்ற பாடல்களும் உள்ளன.
''ரூட்டு தல இரண்டு ரகம்''
''ரூட்டு தல மாணவர்களில் இரண்டு ரகம். ஒரு சில ரூட்டு தல மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தனக்கு ஒரு குழு உள்ளது என 'கெத்து' (பெருமை) காட்டிக்கொள்வதற்காக செயல்படுகிறார்கள். புதுமையாக உடை அணிந்து, மற்றவர்களை கவருவதற்காக குரலை உயர்த்தி பேசுவது, மாணவர்களுக்கு மத்தியில் கேலி செய்வதோடு இருப்பார்கள். மாணவர்களை ஒருங்கிணைப்பது, தன்னை உயர்ந்த நபராக, பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் தலைவனாக காட்டிக்கொள்ளும் நபர் முதல் ரக ரூட்டு தல மாணவர்கள்,'' என்கிறார்கள்.
''இரண்டாம் ரகத்தை சேர்ந்தவர்கள் ஒரு பேருந்து அல்லது ரயிலில் வரும் மாணவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் கல்லூரி வளாகத்தில் கூட ஒரு ரூட்டு மாணவர்கள் ரூட்டு தல சொல்லும் 'அட்டியில்' (வளாகத்திற்குள் ஒரு ரூட்டு மாணவர்கள் கூடும் இடம்) இருப்பது சில சமயம் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, வெளிநபர்களை கூட்டிவந்து தனக்கு 'மாஸ்' (ஆதரவு) இருப்பதாக காட்டிக்கொள்வது என்ற பாணியில் செயல்படுவார்கள். தங்களது திறமையை காட்டிக்கொள்ள சாமானை (ஆயுதங்களுடன்) வைத்துக்கொண்டு பயணம் செய்வார்கள். கல்லூரியில் சாமான் ஒளித்துவைப்பார்கள்,'' என விவரிக்கிறார் ரூட்டு மாணவர் சந்திரன்.
''அரசியல்வாதிகள் ரூட்டு மாணவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ரூட்டில்வரும் மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக காட்டிக்கொள்கிறார்கள். கல்லூரி தேர்தலில் நிதி கொடுப்பது தொடங்கி அவர்கள் மீது வழக்கு இருந்தால் தீர்த்துவைப்பதாகவும் சொல்கிறார்கள். சில மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அரசியல் சாயத்தோடு இருப்பார்கள். கட்சியின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும். தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கியாக மாணவர்கள் தெரிகிறார்கள். ரூட்டு தல மாணவனிடம் உள்ள மாணவர்களின் ஓட்டும் கிடைக்கும் என்பதால் அரசியல்வாதிகள் கட்சி பேதமில்லாமல் இந்த மாணவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்,''என்கிறார் சந்திரன்.
ரூட்டு தல மாணவர்களுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளதா என திமுக எம்.பி இளங்கோவன் மற்றும் அதிமுக அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டோம்.
வன்முறையை தூண்டும் மாணவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தராது என்று கூறிய இளங்கோவன், ''ஒரு சில சாதி கட்சிகள், கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வந்தால், தங்களது சாதி மாணவர்களுக்கு உதவுவதாக எண்ணி அரசியல் பிரச்சனையாக மாற்றிவிடும் நிகழ்வும் உண்டு. ஆனால் அவர்களை பயன்படுத்தி வன்முறையை தூண்ட வேண்டிய அவசியம் இல்லை,'' என மறுத்துவிட்டார்.
அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ''மற்ற கட்சிகளைப் பற்றித் தெரியாது. கல்லூரிகளில் அதிமுக மாணவர் அணியில் உள்ளவர்கள் கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும் என போதிக்கிறோம். மாணவர்களின் பங்கேற்பு முக்கியம். ஆனால் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களுக்கு ஆதரவு தர மாட்டோம்,''என்றார்.
ரூட்டு தல அரசியல் தலையீடு காரணமாக சென்னையில் பிரதானமான மாநில கல்லூரியில் கடந்த ஆண்டு தேர்தல் நடைமுறைக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூட்டு தலயாக இருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
முன்னாள் ரூட்டு தலையாக இருந்து தற்போது பத்திரிகையாளராக பணிபுரியும் பிரபாகரனை சந்தித்தோம். பத்தாண்டுகளுக்கு முன்னர் 29இ ரூட்டில் தலயாக செயல்பட்டவர்.
''கல்லூரியில் படிக்கும்போது ரூட் தலயாக இருந்தது பெருமையாக இருந்தது. இன்று மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. அதேநேரம், ஏன் தலையாக இருக்கவேண்டும் என மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை யோசிக்கவேண்டியுள்ளது. அவர்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. இளமை ததும்பும் வயதில் தனக்கான ஒரு குழு வேண்டும், தன் சொல்படி ஒரு குழு நடந்துகொள்வது, தன்னை பிறர் மரியாதையோடு விளிப்பது பிடித்திருக்கிறது. ஒரு சாகசக்காரனாக தன்னை மற்றவர்கள் பார்ப்பது இளைஞனுக்கு பிடித்திருக்கிறது,''என்கிறார் பிரபாகரன்.
கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்தான் பெரும்பாலும் ரூட்டு தல பிரச்சனையில் இருக்கிறார்கள் என யோசிக்கவேண்டும் என புதிய கோணத்தை காட்டுகிறார் பிரபாகரன்.
''பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு படித்துமுடித்த பின் என்ன வேலைக்கு செல்ல முடியும் என்ற தெளிவு உள்ளது. கலை அறிவியல் துறை மாணவர்களுக்கு எந்த வேலைக்காக தன்னை தயார் செய்துகொள்ளவேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்துவதில்லை. மூன்று ஆண்டுகள் படிக்கும் காலத்தில் என்ன திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என விளக்கவேண்டும். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அடையாளம் காட்டி, ஊக்குவிக்கவேண்டும். நிச்சயம் தனக்கு வேலை கிடைக்கும் என்ற மனநிலை ஏற்பட்ட மாணவன் எந்த நாளையும் வீணடிக்கமாட்டான். இதை மாணவர்கள் பிரச்சனையாக மட்டுமே பார்க்காமல், கல்வித் துறையில் உள்ள சிக்கல்களை யும் களைய வேண்டும்,''என்கிறார் பிரபாகரன்.
ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைபார்ப்பதாக கூறும் ஜேம்ஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது அடையாளத்தை வெளியிடவேண்டாம் என்ற வாக்குறுதியோடு பேசினார்.
''நான் 23-சி ரூட்டில் தலயாக இருந்தேன். தொடக்கத்தில் ரூட்டு தலயாக இருந்தபோது ஜாலியாக இருந்தது. ஆனால் சீன் போடுவதற்காக தேவையில்லாத பிரச்சனைகளில் நான் தலையிடவேண்டியிருந்தது. காதல் ஜோடி பிரச்சனை, மற்ற ரூட்டு மாணவர்களுக்கும், எங்கள் ரூட்டு மாணவர்களுக்கும் இடையில் சண்டை வந்தால் தீர்ப்பது, பல முறை என் வீட்டில் பொய் சொல்லி காசு வாங்குவேன். பிற ரூட்டு தல எல்லாம் 'லுச்சா' (திறமையற்றவர்கள்) நான் தான் 'மாஸ்', மாணவர்களுக்கு மத்தியில் கெத்தாக காட்டிக்கொள்ளவேண்டும், என்னுடைய பிரச்சனைகளை காட்டிக்கொள்ளக்கூடாது என போராட்டமாக இருந்தது. ஒருமுறை காவல் நிலையம் வரை சென்றது ரூட்டு பிரச்சனை. தீடீரென விலகவும் முடியாமல் தவித்தேன்,''என்கிறார் ஜேம்ஸ்.
மாணவர்கள் முன்வைக்கும் கேள்விகள்
ரூட்டு தல பிரச்சனையில் ஒரு சில மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் வகுப்புக்கு வந்து போவதாக வருத்தப்படுகிறார் சதீஷ்.
பி.ஏ ஆங்கிலம் பயிலும் மாணவர் சதீஷ் பேசும்போது, ரூட்டு தல வன்முறைக்கு ஆதாரமாக இருக்கும் பிரச்சனைகளை களைவதில் அக்கறை குறைவாக உள்ளது என்கிறார் மாணவர் சதீஷ்.
''உண்மையில் அரசாங்கத்திற்கு அக்கறை இருக்கும்பட்சத்தில், ரூட்டு தல விவகாரத்தில் காட்டும் அக்கறையை போல, மாணவ சமூகத்தை பாதிக்கும் விவகாரங்களில் ஏன் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை கல்லூரிகளுக்கு அருகில் இருந்து அகற்றவேண்டும் என முதலில் போராட்டத்தை தொடங்கியவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்தான். நீட்டுக்கு எதிரான போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியது இளைஞர்கள்தான். தமிழகத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என பல்வேறு மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்புகளை தெரிவித்துள்ளோம். தற்போது புதிய கல்விக்கொள்கையில் சீர்கேடுகளை எதிர்த்து குரல் கொடுக்கிறோம். இதனை விடுத்து ஒரு சில மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால், அனைவரையும் கண்காணிப்பது, அச்சத்தில் வைத்திருப்பது எப்படி தீர்வாகும்,'' என கேள்வி எழுப்புகிறார் சதீஷ்.
''ரூட்டில் வரும் மாணவர்கள் யாராவது பணம் கட்டமுடியாமல் இருந்தால், எல்லோரும் பங்கிட்டு கொடுக்கிறோம். ஒருவர் வீட்டில் சுப நிகழ்ச்சி அல்லது துக்க நிகழ்ச்சியாக இருந்தால், எல்லோரும் உதவுகிறோம். நாங்கள் ரத்ததானம் செய்கிறோம். எங்களுக்கு போட்டியாக உள்ள ரூட்டு மாணவர்களைவிட எங்கள் ரூட்டு சிறப்பாக செயல்படவேண்டும். ட்ரெண்டில் இருக்கவேண்டும் என்பதில் என்ன தவறு,'' என்கிறார் அவர்.
ரூட்டு தல மாணவர்களை கையாள்வது எப்படி?
மாணவர்கள் மத்தியில் உள்ள வன்முறை எண்ணங்களை மாற்றுவது குறித்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் (பொறுப்பு) பூர்ணசந்திரிகாவிடம் பேசினோம்.
''ரூட்டு தல கலாசாரம் ஒழிக்கப்படவேண்டும். தற்போது உள்ள ரூட்டு மாணவர்கள் குழுக்கள், ஆரோக்கியமில்லாத அமைப்புகளாக செயல்படுவதாக தோன்றுகிறது. வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வெறும் ஆலோசனை போதாது. அவர்களுக்கு பல வேலைகளை, பொறுப்புகளை வழங்கவேண்டும். அதிக அளவில் விளையாட்டு துறையில் அவர்களை ஈடுபடுத்தவேண்டும். உண்மையான தலைமை பண்பு எது, பல்வேறு துறைகளில் தலைமை வகிக்கும் நபர்கள் யார் என அறிமுகப்படுத்தவேண்டும்,''என்கிறார் பூர்ண சந்திரிகா.
வாழ்வியல் கல்வி, தொழில்கல்வி போன்ற வகுப்புகளை அதிகப்படுத்தினால், அவர்களுக்கான பணிகளில் மாணவர்கள் ஈடுபடும்போது வன்முறைக்கான வாய்ப்புகள் குறையும் என்கிறார்.
''தலைமை பண்பு பற்றிய தெளிவில்லாத மாணவர்களுக்கு, ரூட்டு தல விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதை புரியவைக்கவேண்டும். கல்லூரி காலம் முடிந்துவிட்டால், ரூட்டு தலயாக இருந்தவருக்கு எதுவும் கிடைக்காது என்பதை விளக்கவேண்டும்,''என்கிறார் அவர்.
காவல்துறையினரின் நிலைப்பாடு
அரும்பாக்கத்தில் நடந்த வன்முறையில் கைதான மாணவர்களுடன் ரூட்டு தல மாணவர்களாக, சுமார் 90 பேர் காவல்துரையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
''மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து, அவர்கள் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபடமாட்டோம் என காவல்துறையினரிடம் மாணவர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர்,''என்கிறார் இணை ஆணையர் சுதாகர்.
ரூட்டு மாணவர்களிடம் பேசியதில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு அடையாளம் தேவை என கருதுகிறார்கள் என்கிறார் சுதாகர்.
''பலரும் தன்னை கவனிக்க வேண்டும், மற்றவர்களை ஈர்க்கவேண்டும் என்ற எண்ணத்தால்தான் மாணவர்கள் ரூட்டு தலயாக வேண்டும் என நினைக்கிறார்கள். பல மாணவர்கள் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள், சிலர் குறைந்த மதிப்பெண் பெற்றதால் யாருடைய கவனமும் கிடைக்காமல் இருக்கிறார்கள். தனது இயலாமைகளை விடுத்து தனக்கு ஓர் அடையாளம் வேண்டும் என விரும்புகிறார்கள். மாணவர்களிடம் உள்ள துடிப்பான வேகத்தை சமூக சேவை செய்ய பயன்படுத்தினால் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும். இரவு ரோந்து பணிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்தலாம் என முடிவு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ளோம்,''என்கிறார்.
ரூட்டு தலயாக இருந்தவர்கள் வழக்குகளில் சிக்குவதால் ஏற்படும் பிரச்சனை, அரசு வேலை கிடைக்காமல் போகும் நிலை போன்றவற்றை விளக்கி ஆவணப்படங்களை தயாரித்து வெளியிடவுள்ளதாகவும் சுதாகர் குறிப்பிட்டார்.
ரூட்டு தல பிரச்சனையில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் சிலரின் கை உடைந்துவிட்டதாக வெளியான விவகாரம் குறித்து கேட்டபோது, காவல்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். கழிவறையில் மாணவர்கள் வழுக்கி விழுந்ததால்தான் கை உடைந்துவிட்டதாக சொல்கிறார்கள். வன்முறையில் ஈடுபடும் ரூட்டு மாணவர்கள் மீது சட்டப்படி மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
வேறுவடிவத்தில் ரூட் தல தொடர வாய்ப்பு
ரூட் தல பிரச்னையை காவல்துறையினர் மூலமாக முடிவுக்கு கொண்டுவந்தாலும் அது வேறுவடிவத்தில் தொடர வாய்ப்புகள் உண்டு என்கிறார் சமூக ஆர்வலர் தேவநேயன்.
''ரூட் தல பிரச்சனையில் சிக்கிய மாணவர்கள் பயிலும் கல்லூரியில் படித்தவர்கள் பலர், இன்று அரசியல் தலைவர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், இசை வல்லுநர்கள் என பல துறைகளில் சாதனை நபர்களாக இருக்கிறார்கள். இதே கல்லூரியில் கடந்த காலத்தில் தரமான மாணவர்கள் எப்படி உருவானார்கள்?, தற்போது மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் நிலை ஏன் ஏற்பட்டது?. கல்லூரி செயல்படும் விதத்தில் என்ன மாற்றம் தேவை என்பதை கல்லூரி நிர்வாகத்தினர் யோசிக்கவேண்டும். மாணவர்களிடம் என்ன மற்றம் கொண்டுவரவேண்டும் என எண்ணுகிறோமோ, அதே நேரம் கல்லூரி நடத்தும் விதத்திலும் மாற்றங்கள் தேவை,''என்கிறார் தேவநேயன்.
ஆக்கப்பூர்வமான அரசியல் விவாதங்கள், தேர்தல், கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடக்காதது ரூட் தல முறை வலிமை பெறுவதற்கு காரணம் என்கிறார் தேவநேயன்.
''ரூட் தல மாணவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்களில் பலர் முதல் தலைமுறை மாணவர்கள், அவர்களின் பெற்றோர் சிரமத்திற்கு மத்தியில் கல்லூரிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள். இளம்பருவத்தில் இந்த மாணவர்களின் ஆற்றலை முறைப்படுத்த அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால், அவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்க வாய்ப்பு இருந்தால், அவர்களின் நிலை மாறும். பேராசிரியர்கள் பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். திறன்மிக்க கல்வி நிலையங்களில், அர்ப்பணிப்போடு கல்வி வழங்கும் ஆசிரியர்கள் இருந்தால், மாணவர்களிடம் தெளிவு பிறக்கும்,''என்கிறார் தேவநேயன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்