You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ப. சிதம்பரம் கைது: அமித்ஷா, பசுமை வேட்டை, நீட் தேர்வு - சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் 3 விஷயங்களும் அதன் பின்னணியும்
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு (புதன்கிழமை) சிபிஐ அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார் .
ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று காலை முதலே சிதம்பரம் ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்தார். பல விஷயங்கள் அவர் குறித்து சமூக ஊடகங்களில் பகிரவும், விவாதிக்கவும்பட்டது.
அதில் சில விஷயங்களை மட்டும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
'அமித்ஷா - சிதம்பரம்'
"சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது அமித்ஷா கைது செய்யப்பட்டார். இப்போது அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது சிதம்பரம் கைது செய்யப்படுகிறார்." இப்படியாக ஒரு கருத்து சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
நடந்தது என்ன?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ப சிதம்பரம் இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த போது அமித்ஷா கைது செய்யப்பட்டார். அப்போது அமித் ஷா குஜராத் மாநில அமைச்சராக இருந்தார். ஷொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல், அமிதஷா குஜராத்துக்குள் இரண்டு அண்டுகள் உள்நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஷொராபுதீன் வழக்கு பின்னணி?
குற்றப்பின்னணி உடையவர் என சொல்லப்படும் ஷொராபுதீன் ஷேக் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறை என்கவுண்டர் ஒன்றில் கொல்லப்பட்டார். அவருக்கு லஷ்கர் இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது.
ஐதராபாத்தில் இருந்து மஹாராஷ்டிராவில் உள்ள சங்லிக்கு ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கௌஸர் பி, மற்றும் கூட்டாளி துல்சிராம் பிரஜாபதி ஆகியோர் குஜராத் காவல்துறையால் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
பின்னர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் காவல்துறை இணைந்து எடுத்த ஒரு கூட்டு நடவடிக்கையில் அஹமதாபாத் அருகே ஒரு என்கவுன்டரில் ஷொராபுதீன் கொல்லப்பட்டார். சில நாள்கள் கழித்து பனஸ்கந்தா மாவட்டத்தில் குஜராத் ஐபிஎஸ் அதிகாரி டிஜி வஞ்சாராவின் கிராமத்தில் ஷொராபுதீன் மனைவி கௌசர்பியும் கொல்லப்பட்டார்.
2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற ஷொராபுதீன் ஷேக் என்கவுண்டர் போலியானது என்றும், இதில் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட துல்சிராம் பிரஜாபதியும், 2006ஆம் ஆண்டு குஜராத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டார். அஹமதாபாத்தில் இருந்து ராஜஸ்தான் செல்லும் வழியில் துல்சிராம் தப்பிக்கமுயன்றதாகவும் அவரை தடுக்கும் முயற்சியில் காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
2014-ல் எப்படி நிலைமை மாறியது?
சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 மே மாதத்தில் விசாரணைக்கு ஆஜாராகுமாறு அமித் ஷாவுக்கு சம்மன் அனுப்பினார். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க கோரிய அமித் ஷாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
2014-ல் மத்தியில் ஆட்சி மாறியது. நரேந்திர மோதி நாட்டின் பிரதமாரானார். அதிலிருந்து இந்த வழக்கின் போக்கு முற்றிலுமாக மாறியது.
அதன் பின்னர் சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் 2014 ஜூன் 26 ஆம் தேதியன்று உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாற்றப்பட்டார்.
இதன்பிறகு வழக்கு நீதிபதி லோயாவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிபதி லோயாவின் நீதிமன்றத்தில் அமித் ஷா ஆஜராகவேயில்லை. 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் நீதிபதி லோயா இறந்தார். அவரது மரணம் தொடர்பான பல்வேறு ஊகங்களும் சர்ச்சைகளும் தொடர்கின்றன.
நீதிபதி லோயாவின் மரணத்திற்கு பிறகு சொராபுதீன் வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.வி. கோசவி, புலனாய்வு நிறுவனங்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறி, 2014 டிசம்பரில் அமித் ஷாவையும், குலாப்சந்த் கட்டாரியா, விமல் படானி, அகமதாபாத் மாவட்ட வங்கியின் தலைவர் அஜய் படேல் மற்றும் இயக்குநர் யாஷ்பால் ஷர்மா ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தார்.
'நீட் - நளினி சிதம்பரம்'
"நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதடினார்" - சமூக ஊடகங்களில் பகிரப்படும் மற்றொரு செய்தி இது.
நடந்தது என்ன?
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு 22 ஆகஸ்ட் 2017 உச்ச நீதின்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, " மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. இது போல பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது இயலாது" என்று மத்திய அரசு தனது வாதத்தினை முன்வைத்தது.
அதனைக் கேட்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை துவங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையானது 'நீட்' தேர்வு அடிப்படையில்தான் நடக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
'நீட்' தேர்வுக்கு விலக்கு விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய பிரபல வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்து இருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம், "நீட் தேர்வு விவகாரத்தில் நடைபெற்ற குழப்பங்களுக்கு எல்லாம் தமிழக அரசுதான் முழு பொறுப்பாளியாகும். அதுதான் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான நம்பிக்கையை முதலில் அளித்தது.
இனி நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கை எல்லாம் நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெற இந்த தீர்ப்பு வழி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை." என்றார்.
'பசுமை வேட்டையும் சிதம்பரமும்'
'பசுமை வேட்டை என்ற பெயரில் சட்டீஸ்கர் பழங்குடி மக்களுக்கு எதிராக செயல்பட்டார் சிதம்பரம்' - இது மற்றொரு ஃபேஸ்புக் பதிவு.
நடந்தது என்ன?
இந்திய உள்துறை அமைச்சராக இருந்த போது மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் 'பசுமை வேட்டை - க்ரீன் ஹண்ட்'.
பெருநிறுவனங்களின் சுரங்க தொழிலுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என அருந்ததி ராய் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆனால், இது ஊடகங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் சூட்டிய பெயர். அரசு ஆப்ரேஷன் க்ரீன் ஹண்ட் என்று எந்த நடவடிக்கைக்கும் பெயர் சூட்டவில்லை என்றார். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், "கிரீன் ஹண்ட் என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.
கிரீன் ஹண்ட் என்ற பெயரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக 50,000 துணை ராணுவ படையினர் களம் இறக்கப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்