காஷ்மீர் மசோதாக்கள் நிறைவேறிய பின்னர் கள நிலவரம் என்ன? #GroundReport

பட மூலாதாரம், BIJU BORO/Getty Images
- எழுதியவர், ஜூபர் அகமத்
- பதவி, பிபிசி செய்தியாளர், ஸ்ரீநகர்
"இந்த செய்தியை கேட்டவுடன் இரண்டு முறை நான் கழிவறைக்கு செல்ல வேண்டியதாயிற்று."
காஷ்மீரிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முஸ்லிம் தலைவரின் பதில் இதுதான். இந்திய அரசமைப்பின் பிரிவு 370 பற்றிய முடிவை அரசு அறிவிப்பதற்கு முன்னால் அவர் பெரும் பதற்றமாக தென்பட்டார்.
பிபிசிக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், "நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லா காஷ்மீர் மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது எப்படி நடந்தது என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. சிறிது காலத்துக்கு பின்னர், எரிமலை வெடிக்கும் என்றே தோன்றுகிறது," என்று அவர் கூறினார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசமைப்பு சட்டத்தின் உறுப்புரை 370 பற்றிய அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், காஷ்மீர் பள்ளதாக்கில் பல்வேறு அனுமானங்கள் தோன்றியிருந்தன.
மாநிலம் பிரிக்கப்படும் என்றும், பிரிவு 35ஏ அகற்றப்படும் என்றும் அச்சம் நிலவியது.

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/Getty Images
ஆனால், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த பிரிவு 370-இன் சரத்துகள் ரத்து செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
வெளியில் இருந்து பார்த்தால் காஷ்மீர் பள்ளதாக்கு அமைதியாக இருப்பதுபோல தோன்றுகிறது. "ஒரு சில வன்முறை சம்பவங்களை தவிர எங்கும் அமைதி நிலவுகிறது," என்று மூத்த கால்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரசமைப்பு சட்ட நிபுணர் சஃபார் ஷா பிபிசியிடம் தெரிவிக்கையில், இந்திய அரசின் முடிவு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்தார்.
"என்னை பொறுத்தவரை இந்த முடிவு அரசமைப்பை மீறுவதாகும். உறுப்புரை 35ஏ-யை உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம் என்பதால், வழக்கு மூலம் இந்த முடிவை மாற்றிவிட முயற்சி செய்யலாம்".
இந்த முடிவு பெரும் அதிர்ச்சியளிப்பதாக கூறும் சஃபார் ஷா, "இது எதிர்கால காஷ்மீர் தலைமுறைகளால் மறக்கப்படாது," என்று கூறியுள்ளார்.
மக்களிடம் காணப்படும் கோபம் எந்நேரத்திலும் வன்முறையாக வெளிப்படலாம் என்பதை காவல்துறையினர் ஒப்புக்கொள்கின்றனர்.

பட மூலாதாரம், ANADOLU AGENCY
ரஷித் அலி மருந்து கடை நடத்தி வருகிறார். அவர் இது பற்றி குறிப்பிடுகையில், "இந்த பள்ளதாக்கு முழுவதும் திறந்தவெளி சிறையாக மாறியுள்ளது. தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரும், பாதுகாப்பு படையினரும் எங்கும் நிறுத்தப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் ஊரடங்கு சட்டம் அமலிலுள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து மக்கள் வெளியே வருவது கடினம். இவை அனைத்தும் இல்லாமல் இருக்கின்றபோது மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவார்கள்," என்கிறார்.

பட மூலாதாரம், DANIEL
தெலங்கானா போல புதிய மாநிலங்களை பிரிப்பது இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கும் முடிவ ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை பறிக்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை ஸ்ரீநகரிலுள்ள பல இடங்களை நான் சந்தித்தேன். மூலை முடுக்குகளில் எல்லாம் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய கட்டடங்கள் மற்றும் சாலைகளுக்கு வெளியே தடுப்பரண்கள் காணப்படுகின்றன.
போர் நிகழும் இடத்திலிருந்து வேறுபட்டு ஸ்ரீநகர் தோன்றவில்லை. கடைகளும், சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளும், கல்லூரிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு தேவையான உணவு மற்றும் பிற பொருட்களை மக்கள் வாங்கி வைத்துள்ளனர். ஆனால், கடைகள் விரைவில் திறக்காவிட்டால் அவர்களுக்கு சிரமம்தான்.
தொலைபேசி, செல்பேசி மற்றும் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
டெல்லியிலிருந்து வந்துள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் தகவல் தொடர்புக்காக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் சற்று தளத்தப்படுவதற்கும், தொலைபேசி மற்றும் செல்பேசி சேவைகள் மீட்கப்படுவதற்கும் வாயப்பே கிடையாது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் இருந்து வெளியேற விரும்பும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் காஷ்மீர் மக்களால் பேருந்து நிலையங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
கட்நத 6ம் தேதி திங்கள்கிழமை தொடங்கி நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அவர்களின் உடைமைகளோடு பேருந்துகளுக்காக காத்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது, குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஓரிடத்தில் பேருந்துகளை தேடி கொண்டு தொழிலாளர்கள் வந்தனர். இரண்டு நாட்களாக காஷ்மீர் பள்ளதாக்கை விட்டு சென்றுவிட முயல்வதாகவும், ஆனால் முடியாமல் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
"இரண்டு நாட்களாக நாங்கள் எதுவும் சாப்பிடவில்லை. எங்களது செல்பேசி இணைப்பு இல்லாததால் குடும்பத்தினருக்கும் அழைத்து பேசவும் இல்லை. எனவே கவலையடைந்துள்ளோம்," என்று ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் மக்கள் பேசத் தயங்குகின்றனர். துணிவுடன் பேச முற்பட்டவர்கள் அரசின் முடிவால் கோபம் அடைந்துள்ளனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருக்கு பக்கத்தில் நின்றிருந்த குழு ஒன்றின் மத்தியில் நின்றிருந்த காஷ்மீர் இளைஞர் ஒருவர் இந்த முடிவை ஏற்று கொள்ள முடியாது எனறு அச்சமின்றி முழங்கினார்.
காஷ்மீரில் பரவலாகியிருக்கும் போர் குணத்தால், காஷ்மீரை சேராதவர்கள் இங்கு துணிச்சலுடன் குடியேறமாட்டார்கள் அல்லது சொத்துகளை வாங்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












