'ரூட்டு தல' மோதல்: இரண்டு மாணவர்கள் இடைநீக்கம்; காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் நேற்று பேருந்தில் இரு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென காவல்துறை எச்சரித்திருக்கிறது.
ஜூலை 23ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர்.
அந்தப் பேருந்திற்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பல மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களையும் துரத்தித் துரத்தி இந்த கும்பல் வெட்டியது. காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் அங்கு வருவதற்குள் அந்தக் கும்பல் ஓடிவிட்டது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் அரிவாளுடன் ஒருவரை ஒருவர் வெட்டியும், தாக்கிக்கொண்டும் அராஜகம் செய்தனர். முக்கிய குற்றவாளிகள் (மாணவர்கள்) கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்து கொண்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை பாரி முனை பகுதியில் இருந்து பேருந்தில் வரும் மாணவர்களுக்கும் பூந்தமல்லியிலிருந்து பேருந்தில் வரும் மாணவர்களுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே மோதல் இருந்துவந்ததும் செவ்வாய்க் கிழமையன்று கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இரு தரப்பும் இது தொடர்பாக மோதிக்கொண்டதாகவும் தெரியவந்தது.
இதன் காரணமாகத்தான் பேருந்தில் வந்த ஒரு தரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் ஏழு மாணவர்கள் காயம் அடைந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
பேருந்தில் இப்படித் தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களிலும் ஊடங்களிலும் ஒளிபரப்பானது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் எஸ். மதன், எஸ். சுருதி ஆகிய இருவரையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. விசாரணை முடியும்வரை கல்லூரிக்குள் வரக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், STR/AFP/Getty Images)
இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்து விளக்கமளித்த பச்சையப்பன் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் அருள் மொழிச் செல்வன், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். "இம்மாதிரி சம்பவங்கள் நடக்க மாணவர்களின் பின்னணியும் ஒரு காரணம். அவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் நாங்கள் ஆலோசனைகள் கொடுக்கிறோம். காவல்துறை குறிப்பிட்ட இருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம்" என அருள்மொழிச் செல்வன் கூறினார்.
கல்லூரிக் கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன், காவல்துறை அதிகரிகள் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து முதல்வரைச் சந்தித்து விவாதித்தனர். இதற்குப் பிறகு அக்கல்லூரியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடந்தது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கிழக்கு மண்டலத்தின் இணை ஆணையர் சுதாகர், இம்மாதிரி செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டத்ததின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாகத் தெரிவித்தார்.
"மாணவர்கள் என்பதால் இவர்கள் மீது முன்பு கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இடைநீக்கத்தோடு முடிந்துவிடும். ஆனால், இனி இந்த மாணவர்கள் மீது 'History Sheets' உருவாக்கவிருக்கிறோம். அவர்கள் பாதுகாப்புப் பத்திரங்களில் கையெழுத்திட்டுத் தர வேண்டும். பாதுகாப்புப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலத்திற்குள் அவர்கள் ஏதாவது குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டால், பாத்திரத்தில் மீதமிருக்கும் காலத்தை அவர்கள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்." என்றார் சுதாகர்.
இந்த மாணவர்களின் செயல் என்பது கல்லூரி தொடர்பானது அல்ல என்றும் இது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருப்பதால் அவர்களை ரவுடிகள் என்று கருதியே நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
பேருந்துகளில் மாணவர்கள் பேருந்து தினம் என்ற பெயரில் தொல்லை தருவது குறித்து கேட்டபோது, இனிமேல் பேருந்தின் மேற்கூரையில் எந்த ஒரு மாணவர் ஏறினாலும் ஓட்டுனர் பேருந்தை எடுக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக காவல்துறையை அழைக்கும்படி கூறப்பட்டிருப்பதாகவும் காவல்துறை இணை ஆணையர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












