தேர்தலில் வாக்காளர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா? - சட்டபேரவையில் வெடித்த மோதல்

பட மூலாதாரம், tndipr
இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமலர் - தேர்தலில் வாக்காளர்களை ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதா? - சட்டபேரவையில் வெடித்த மோதல்
தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் க.பொன்முடி, கடந்தாண்டு முதல்வர் அளித்த பதிலுரையில் முடிவு எடுப்பதில் மக்கள் தெளிவானவர்கள் என்றும், அதை நிரூபிக்கும் வகையில் இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக அணியை மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்றும் பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "எப்படி வெற்றி பெற்றீர்கள் என்பதை மட்டும் நீங்கள் சொல்லவில்லை. உண்மைக்கு மாறான வாக்குறுதிகளை எல்லாம் சொல்லித்தான் வெற்றி பெற்றீர்கள். அதையும் நீங்கள் கூறினால், நன்றாக இருக்கும்," என்றார்.
வரக்கூடிய காலங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறிய மு.க.ஸ்டாலின், அப்படி வரும்போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றும், சொன்னதை அல்ல, சொல்லாததை செய்வோம் என்றார்.
தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே விவாதம் தொடர்ந்த நிலையில், குறுக்கிட்டு பேசிய செல்லூர் ராஜூ, வாய் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்றெல்லாம் பேசமாட்டேன். ஏனென்றால் நான் கலைஞரின் பிள்ளை என்று ஸ்டாலின் கூறுவார். தேர்தல் அறிக்கையில் 5 பவுனுக்குக் கீழே கடன் இருந்தால், கூட்டுறவு வங்கியில் மட்டுமல்ல, பொது வங்கியில் கடன் இருந்தாலும் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார். இதை நிறைவேற்ற முடியுமா?என்றார்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு கேளுங்கள். அனைத்துக்கும் பதில் அளிக்கிறோம்," என்றார்.


பட மூலாதாரம், PHILIPPE HUGUEN
டைம்ஸ் ஆஃப் இந்தியா - குழந்தையை கடத்துவது எப்படி? சிறையில் முடிந்த பட்டதாரி இளைஞர் கடத்தல் திட்டம்
திரைப்படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் சினிமா பாணியில் திட்டம் தீட்டி 3 வயது குழந்தையை கடத்திய நபரை சென்னை போலீஸார் 8 மணி நேரத்தில் கண்டுபிடித்து குழந்தையையும் மீட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் 33 வயதான பட்டதாரி முகமத் கலிமுல்லா. இவருக்கு சினிமா தயாரிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசை. அதற்காக, தன்னுடைய தோழி அம்பிகாவின் உதவியை நாடியுள்ளார். அம்பிகா வேலை செய்யும் வீட்டில் வளரும் 3 வயது குழந்தையை கடத்த திட்டமிட்டு, செயல்படுத்தியுள்ளனர். குழந்தையின் பெற்றோரிடம் 60 லட்ச ரூபாய் பிணை தொகை கேட்டுள்ளனர்.
இதற்காக, கலிமுல்லா கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பல்வேறு இணைய தளங்களில், குழந்தை கடத்துவது எப்படி என்று ஆராய்ந்துள்ளார். ஆனால், குழந்தை கடத்தப்பட்டு சிலமணி நேரங்களிலேயே சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர். 8 மணி நேரத்தில் குழந்தையை மீட்டதற்காக குழந்தையின் பெற்றோர் போலீஸாருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.


தினமணி - பொறியியல் கலந்தாய்வில் 25 கல்லூரிகளில் மட்டுமே 50% சேர்க்கை
பொறியியல் மாணவர் சேர்க்கை இன்னும் இரண்டு சுற்றுகளில் முடிவடைய உள்ள நிலையில், 25 பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகள் மற்றும் ஒருசில பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பியிருக்கின்றன.இரண்டாம் சுற்று முடிவில் அரசுப் பொறியயில் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 3,820 இடங்களில் 2,398 இடங்கள் நிரம்பியிருக்கின்றன.
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள 2,163 இடங்களில் 2,016 இடங்கள் நிரம்பியுள்ளன.


பட மூலாதாரம், tndipr
இந்து தமிழ் திசை - சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியாரின் படம் திறப்பு
சட்டப்பேரவைக் கூட்ட அரங்கில், விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் முழுஉருவப்படம் நேற்று திறக்கப்பட்டதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய பேரவைத் தலைவர் ப.தனபால், திராவிடக் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அவர் என்றும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவர் என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில், பேரவை தலைவர் ப.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், ராமசாமி படையாட்சியார் மகன் எஸ்எஸ்ஆர் ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












