தேச துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை

2009ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேல் முறையீடு செய்ய ஏதுவாக இந்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி சென்னையில் ராணி சீதை அரங்கில் I Accuse என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ, இந்திய அரசுக்கு எதிராகவும் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகவும் பேசியதாக அதே ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதியன்று வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

தேசத்துரோகம் (123ஏ), பிரிவினையைத் தூண்டுதல் (153ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு நீதிமன்றம் இந்த வழக்கைப் பதிவுசெய்தது.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த நீதிபதி ஜே. சாந்தி, இன்று தீர்ப்பளித்தார். வைகோவுக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார்.

இது குறித்து வைகோ என்ன கூற விரும்புகிறார் என நீதிபதி கேட்டார். தான் நிரபராதி என வைகோ பதிலளித்தார். இதையடுத்து, வைகோவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகவும் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே சிறையில் இருந்திருந்தால், அந்த நாட்களை கழித்துக்கொள்ளலாம் என்றும் மேல் முறையீடு செய்வதற்கு ஏதுவாக ஜாமீன் வழங்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார்.

I Accuse புத்தக வெளியீட்டு விழாவில் வைகோ பேசியது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தானே சரணடைவதாக கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, ஜாமீனில் செல்ல மறுத்ததால் 52 நாட்கள் சிறையில் இருந்தார்.

இதற்குப் பிறகு இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, வழக்கு தீவிரமடைந்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 19ஆம் தேதி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் வைகோ குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனைக் காலம் ஒராண்டிற்குக் குறைவாக உள்ளதால், மேல் முறையீடு செய்ய ஏதுவாக அவரது தண்டனை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டு, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2009ல் நடந்த கடைசி ஈழ யுத்தத்தில் இலங்கை அரசுக்கு இந்தியா உதவி செய்ததாகக் கூறி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொடர்ச்சியாக கடிதங்களை எழுதினார் வைகோ. அந்தக் கடிதங்களே தொகுக்கப்பட்டு I Accuse என்ற புத்தகமாக வெளிவந்தது.

இந்த வழக்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடுக்கப்பட்டது. இப்போது தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :