You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தி.மு.க. இளைஞரணி: மு.க. ஸ்டாலின் முதல் உதயநிதி வரை
உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, தி.மு.க. இளைஞரணி மீது ஊடக கவனம் திரும்பியிருக்கிறது. பெரும் கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் தி.மு.கவின் இளைஞரணி துவங்கப்பட்டது ஏன்?
1960ஆம் ஆண்டுகளின் இறுதியில், மு.க. ஸ்டாலின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்தபோது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்தார். இந்த அமைப்பின் பெயரில் பல கட்சி நிகழ்ச்சிகளை நடத்தினாலும், அது கட்சியின் விதிகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை.
இந்த நிலையில்தான், 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க. இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. 1980ஆம் ஆண்டின் மத்தியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், இந்த அமைப்பின் துவக்கம் கட்சியினருக்கு சிறிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்தத் துவக்கவிழாவில் அப்போது முக்கியத் தலைவர்களாக இருந்த எஸ்.எஸ். தென்னரசு, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், துரைமுருகன், தா. கிருஷ்ணன், காவேரி மணியம், தங்க பாண்டியன், வைகோ, பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இது மு.க. ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அணி என விமர்சனங்கள் எழுந்தாலும், அந்தக் கூட்டத்தில் கட்சிக்கும் தலைவருக்கும் தன் விசுவாசத்தை உறுதிசெய்யும் வகையில் பேசினார் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ.
இதற்குப் பிறகு, திருச்சியில் அந்த அணியின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றபோது ஏழு அமைப்பாளர்கள் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டனர். அதில் மு.க. ஸ்டாலினும் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணி உருவாக்கப்பட்டது. வெகு விரைவிலேயே, 1983ஆம் ஆண்டின் இறுதியில் அந்த அமைப்பின் மாநிலச் செயலராக மு.க. ஸ்டாலின் உயர்த்தப்பட்டார்.
இதற்குப் பிறகு, முன்பு தி.மு.கவின் தலைமையகமாக இருந்த அன்பகத்தை இளைஞரணிக்காக கொடுக்கும்படி தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியிடம் ஸ்டாலின் கேட்டபோது, கட்சியில் உள்ள வேறு பல அணிகளும் தங்களுக்கென தனி அலுவலகங்களைக் கேட்டுவருவதால், இளைஞரணிக்காக அந்தக் கட்டடத்தை தர முடியாது எனக் கூறினார் கருணாநிதி.
ஆனால், கட்சிக்காக 10 லட்ச ரூபாய் நிதி திரட்டித் தந்தால், அந்தக் கட்டடத்தைத் தருவதாகவும் தெரிவித்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் சென்று நிதி வசூலித்த மு.க. ஸ்டாலின், ஒட்டுமொத்தமாக 11 லட்ச ரூபாய் திரட்டி கட்சிக்கு அளித்தார். இதையடுத்து அன்பகம் தி.மு.க. இளைஞரணிக்கு வழங்கப்பட்டது. இப்போதுவரை அதன் தலைமையகமாகவும் செயல்பட்டுவருகிறது.
இதற்குப் பிறகு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 60 வயதைத் தாண்டிய நிலையிலும் தி.மு.க. இளைஞரணியின் செயலாளராக மு.க. ஸ்டாலினே பதவிவகித்தார். தி.மு.கவில் உள்ள பல அணிகளில் இளைஞரணி மிக சக்திவாய்ந்த ஒரு அணியாக உருவெடுத்தது. தி.மு.கவின் பேரணிகளில் சீருடை அணிந்து இந்த அணியினர் பங்கேற்றனர்.
தி.மு.கவின் பொருளாளராக மு.க. ஸ்டாலின் உயர்ந்த நிலையில்தான், 2017ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி அந்த அணியின் செயலாளர் பதவி முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலினும் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அவரது பிரசாரம் வெகுவாக கவனிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க பதவி வழங்கப்படும் என்ற பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன.
மே மாத இறுதியில், குறிப்பாக மே 28ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்ட தி.மு.க. உதயநிதியை இளைஞரணித் தலைவராக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்திற்கு அனுப்பியது. இதற்குப் பிறகு எல்லா மாவட்டங்களும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றின.
இளைஞரணி நிர்வாகிகளும் தங்கள் பங்கிற்கு தனித்தனியே கடிதங்களை அனுப்பினர். இந்தத் தீர்மானங்கள் முரசொலியில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்வுகள், உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி பதவியை வழங்குவதில் கட்சித் தலைமைக்கு ஆர்வம் இருப்பதாகவே காட்டின.
ஜூன் 12ஆம் தேதியன்று வெள்ளகோவில் சாமிநாதன் இளைஞரணிச் செயலர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், ஜூன் 22ஆம் தேதி திருப்பூரில் ஒரு போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளகோவில் சாமிநாதன், "இளைஞரணி மாநில செயலாளர் பதவியை தற்போது வரை தான் ராஜினாமா செய்யவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் அந்த பதவிக்கு புதியவரை நியமிக்கலாம்," என்று தெரிவித்தார்.
இதையடுத்து, உதயநிதிக்கு இந்தப் பதவி உடனடியாக வழங்கப்படமாட்டாது என கருத்துகள் நிலவின. இந்த நிலையில்தான் வியாழக்கிழமையன்று அவரை இளைஞரணிச் செயலர் பதவிக்கு நியமித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்