சென்னையில் தண்ணீர் இல்லாமல் போவது ஏன்? ஓர் ஆழமான அலசல்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, உலகில் பேரழிவுத் தலைநகராக மாறி வருகிறது - ஓர் ஆண்டில் வெள்ளம் வருகிறது, அடுத்து புயல் தாக்குகிறது, அதையடுத்து வறட்சி ஏற்படுகிறது. அத்துடன் முடியவில்லை. இது ஏன் ஏற்பட்டது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் விளக்குகிறார்.
இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது, சென்னையில் மழை பெய்திருக்கிறது - உண்மையாக வரவேற்கப்பட வேண்டிய முதல் மழை; ஆனால் அது 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. இருந்தாலும், தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்தை நிறுத்தும் அளவுக்கு இருந்தது. சென்னையில் வெள்ளமும், தண்ணீர் பஞ்சமும் ஏற்படுவதற்கு மூலகாரணம் ஒன்றே தான் என்பது வருத்தமானது. வளர்ச்சியின் வேகத்தில் இருந்த சென்னை நகரம் தண்ணீரை சேகரிக்கும் கட்டமைப்புகளின் மீதே உருவானது.
1980 முதல் 2010 வரையில் நகரில் நடைபெற்ற தீவிர கட்டுமானப் பணிகள் காரணமாக, கட்டடங்கள் உள்ள பகுதி 47 சதுர கிலோ மீட்டர் என்பதில் இருந்து 402 சதுர கிலோ மீட்டர் என்ற பரப்பளவிற்கு அதிகரித்தது. அதே காலக்கட்டத்தில் சதுப்புநிலங்களின் பரப்பு 186 சதுர கிலோ மீட்டரில் இருந்து 71.5 சதுர கிலோ மீட்டராகக் குறைந்துள்ளது.
வறட்சி அல்லது கனமழை என்பது இந்த நகருக்குப் புதியதல்ல. இந்தப் பகுதிக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக தண்ணீரை அளிக்கும் வடகிழக்குப் பருவமழை கணிக்க முடியாததாக உள்ளது. சில ஆண்டுகளில் மழை வருகிறது, சில ஆண்டுகளில் பொய்த்து விடுகிறது.
இரண்டு சூழ்நிலைகளையும் சமாளிக்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகள் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும் - நிலம் மட்டுமின்றி தண்ணீர் கிடைக்கும் நிலைக்கு ஏற்ப வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முன்பு இருந்த வேளாண்மைப் பகுதிகள் இப்படித்தான் இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
சமதளப் பகுதிகளில் பள்ளம் தோண்டி, அந்த மண்ணையே கரையாக எழுப்பி பரந்த ஏரிகள் உருவாக்கப்பட்டன. தண்ணீரை தேக்கி, ஓடச் செய்வதற்கான வசதிகளை முதலில் உருவாக்கிவிட்டு, பிறகு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.
இந்த நடைமுறை திறந்தவெளிப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் தருவதாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் நிறைய நிலங்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள், மரங்கள், புறம்போக்கு நிலங்கள், ஊர்ப் பொது நிலங்கள் இருந்தன. ஊர்ப் பொது நிலங்களில் கட்டடம் கட்டுவது சட்ட விரோதமாக இருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன - சில ஏரிகள் 1500 ஆண்டுகால பழமை வாய்ந்தவை.
புவியீர்ப்பு விசைக்கு எதிராக தண்ணீரை கொண்டு செல்வதற்குப் பதிலாக, ஆதி காலத்தில் குடியேறியவர்கள் தண்ணீர் கிடைக்கும் இடத்தில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தையும், நல்ல சிந்தனையும் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நவீன தொழில்நுட்பம் வந்த பிறகு இது குறைந்துவிட்டது.
நகர்ப்புற சிந்தனை வேரூன்றியதும், திறந்தவெளிப் பகுதியைவிட, கட்டமைப்பு செய்த பரப்புகள் மதிப்புமிக்கவையாகக் கருதப்பட்டன. 17வது நூற்றாண்டில் ராயல் சார்ட்டர் மூலமாக சென்னை ஒரு நகரமாக அறிவிக்கை செய்யப்பட்ட போது ``தண்ணீர் வற்றிய நகரமாக'' மாறும் என நாள் குறிக்கப்பட்டதாக சிலர் குறிப்பிடலாம். பிரிட்டிஷ் காலனியாக உருவாகி, நாட்டுப்புறங்களை காலனிமயமாக்கும் நகரமாக வேகமாக சென்னை வளர்ந்தது.
புழல் பகுதியில் பாசனத்துக்கு சிறிய ஏரி ஒன்றை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கினார்கள். 1876ல் சென்னையில் பஞ்சம் ஏற்பட்டபோது, நகருக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்ப இந்த ஏரியை விரிவுபடுத்தினர். அதை செங்குன்றம் அணை என்று பெயர் மாற்றம் செய்தனர். இதுதான் சென்னைக்கான அதிக செலவிலான குடிநீர் திட்டமாக இருந்தது.
குடிநீர் தேவைக்கு தொலைவில் உள்ள நீர் ஆதாரத்தை சார்ந்திருக்கும் நிலையானது, வேகமாக நகரமயமாகி வந்த பகுதிகளை உள்ளூர் குடிநீர் ஆதாரங்களில் இருந்து அந்நியமாக்கிவிட்டது. நகர்ப்புர பணித் திட்டத்தைப் பொருத்தவரை, நகருக்குள் இருந்த நீர் நிலைகளை விடுவித்து, ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வசதியாகக் கருதினர்.
உதாரணத்துக்கு, 1920-களில் 70 ஏக்கர் பரப்பில் இருந்த பழமையான மயிலாப்பூர் குளம் நிரவப்பட்டு, இப்போது பரபரப்பாக இயங்கும் தி.நகர் என்ற குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களைக் கொண்ட பகுதியாக மாற்றப்பட்டது.
அந்தக் குளம் வடக்கில் சுமார் 10 கிலோ மீட்டர் நீளம் கரையைக் கொண்டதாக இருந்தது. அந்தக் குளத்தில் இப்போது எஞ்சியுள்ள பகுதிகள் ஸ்பர்டாங்க் சாலை மற்றும் ஏரிக்கரை சாலை என்று சாலைகளாக மாறிவிட்டன.

பட மூலாதாரம், Getty Images
தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக வளர்வதன் மூலம் பொருளாதார மையமாக சென்னை வளர்ந்து வந்திருக்கிறது. சென்னைக்குப் புதிதாக வந்து குடியேறுபவர்கள் மற்றும் குறைந்த அளவிலான நிலப்பரப்பை அதிக அளவில் பயன்படுத்துவது மட்டுமின்றி, இந்தத் தொழிற்சாலைகள் நகரின் நீர் கட்டமைப்புகளுக்கு சாவுமணி அடிப்பதில் முக்கிய பங்கு வகித்தன.
பயன்பாட்டுக்கு உள்ள நிலம் - அதைப் பயன்படுத்தும் வழிமுறை என்பது மத்திய கால தமிழகத்தில் இருந்த எளிமையான அடிப்படைகளில் இருந்து முற்றிலும் மாறிவிட்டது.
சதுப்புநிலப் பகுதிகளில் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்படாமல் இருந்தது. நீர்நிலைகளுக்கு அடுத்துள்ள பகுதிகளில் அதிக பளு இல்லாத கட்டடங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. நீர்நிலைக்குள் செல்வதற்கு முன்பு நிலத்தில் தண்ணீர் இறங்குவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயன்பாடு காரணமாக நீர்நிலைகளில் உள்ள நீர் குறையும் போது, அருகாமையில் நிலத்தடியில் சேமிக்கப் பட்டிருந்த இந்த நீர் தான் நீர்நிலைகளுக்குச் சென்று நீரைத் தரும். இந்தப் பொது அறிவுகூட இல்லாமல், ஐ.டி.காரிடார் (நகரில் பெருமளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள சாலை) என்ற சாலை, ஏறத்தாழ சென்னையின் மதிப்புமிக்க பள்ளிக்கரனை சதுப்புநிலங்களின் மீதே முழுமையாகக் கட்டப்பட்டன.
சென்னையின் மிகப் பெரிய குடிநீர் ஏரியான - செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேலே உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் - இப்போது ஆட்டோமொபைல் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப் பட்டுள்ளது.
மற்ற நீர்நிலைகளும் கூட இதேபோல பரிதாபகரமான நிலைக்குதான் ஆளாகியிருக்கின்றன.
பெருங்குடி குப்பைக் கிடங்கு, பள்ளிக்கரனை சதுப்புநிலப் பகுதியில் மையப் பகுதி வரை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறது.
மணலி சதுப்புநிலப் பகுதிகள் 1960களில் தமிழகத்தின் மிகப் பெரிய பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மூடப்பட்டுவிட்டது. அலையாத்திக் காடுகளாக இருந்த எண்ணூர் கிரீக் பகுதி, நிலக்கரி சாம்பல் கொட்டும் இடமாக மாற்றப்பட்டுவிட்டது. நகருக்கான மின்சாரம் அந்தப் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்துதான் கிடைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
பல்லாவரம் பெரிய ஏரி சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த ஏரி நெடுஞ்சாலையால் பிரிக்கப்பட்டுவிட்டது. மீதியுள்ள பகுதி அந்தப் பகுதி மக்களின் குப்பைக் கிடங்காக மாறிவிட்டது.
சென்னையில் மக்களின் தேவையில் நான்கில் ஒரு பங்கு அளவிற்கு தான் அரசால் தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதி தேவைகள் தண்ணீரை விற்கும் தனியார் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. அவர்கள் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தை வறண்டு போகச் செய்துவிட்டார்கள்.
நகரின் எல்லையை ஒட்டிய பகுதிகளில், சிறிய அளவில் பொது மக்களும், கால்நடைகளும் வாழும் பகுதிகளில் இருந்து, சென்னையின் தேவைக்காக, கட்டாயப்படுத்தி தண்ணீர் எடுக்கப்படுகிறது. நகரின் தேவைக்கு தண்ணீர் எடுப்பதால், இதுபோன்ற பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பிரச்சினைகள் ஒருபோதும் செய்திகளில் இடம் பெறுவதில்லை.
இயற்கையையும், பொது மக்களையும் சுரண்டாமல் தொழில் செய்யும் வகையில் முதலாளித்துவ சிந்தனையை மாற்றாமல் இந்த உலகம் மாறப் போவதில்லை.
ஆதிக்கம் செலுத்தும் வகையிலான நமது பொருளாதார மாதிரி, தொழில்நுட்பத்தை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பும் இந்த மாதிரி பொலிவிழந்துவிட்டது.
திறந்தவெளி, கட்டமைப்பு செய்யப்படாத நிலம் பயனற்ற நிலம் என்கிறது நவீன பொருளாதாரம். தோண்டுவது, துளையிடுவது, நிரப்புவது, சுரங்கம் உருவாக்குவது, பாதை அமைப்பது அல்லது அதன் மீது கட்டடம் கட்டுவதன் மூலம் அந்த நிலங்களின் மதிப்பைக் கூட்டலாம் என்று நவீன பொருளாதாரம் நம்புகிறது.
நிலப் பயன்பாட்டின் தரத்தைக் குறைக்கும் செயல், உலகெங்கும் நவீன நகரங்களில் பருவநிலை மாற்றத்துடன் மோதலை உருவாக்கும் செயலாக உள்ளது. அவற்றின் ஆபத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.
வெள்ளமாக இருந்தாலும், வறட்சியாக இருந்தாலும் - தண்ணீர் தொடர்பான சென்னையின் போராட்டம் - அதன் செயல்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, நிலம் மற்றும் நீர் பயன்பாட்டு உபயோகத்தை மாற்றாத வரையில், எந்த வகையிலும் ஓயப்போவதில்லை.
இன்னும் அதிகமான வளர்ச்சியும், அதிக கட்டடங்களும் நல்லவையாக இருக்காது. மாறாக நகரின் அளவு குறைந்திட வேண்டும்.
மாநிலத்தின் உள்பகுதிகளில், நிலத்தின் பயன்பாட்டுக்கு உகந்த பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம், நகரில் இருந்து வெளிப் பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்வதை சாத்தியமான, எளிதான செயலாக மாற்ற முடியும்.
இயற்கை தனது பணியை செய்யட்டும் என காத்திருப்பதைக் காட்டிலும், இது சிரமமான விஷயம் என்றாலும், குறைந்த வலியைத் தரக் கூடிய நடவடிக்கையாக இருக்கும்.
(நித்யானந்த் ஜெயராமன் எழுத்தாளர், சமூக ஆர்வலர், சென்னையில் வசிப்பவர்)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












