'இந்தி படிப்பவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கிறது' - இந்தி பிரச்சார் சபா

பட மூலாதாரம், Frédéric Soltan
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி கட்டாயம் என புதிய கல்விக் கொள்கையின் வரைவில் முன்னர் குறிப்பிட்டிருந்த நடுநிலை வகுப்புகளில் உள்ள பள்ளி மாணவர்கள் இந்தி படிப்பது கட்டாயம் என்பதை மத்திய அரசு திருத்தியுள்ளது.
மாணவர்கள் விருப்பப்படும் ஏதோவொரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாக படிக்கலாம் என்ற திருத்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கட்டாயமாக இந்தியை திணிக்காதீர்கள் என தமிழக அரசியல்தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கும் வேளையில், விருப்பப்படுவோர் இந்தியை படிக்க தமிழகத்தில் எந்தவித தடையும் இல்லை என்பதற்கு சான்றாக உள்ளது சென்னையில் உள்ள இந்தி பிரச்சார் சபா.
தமிழகத்தில் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினர் விருப்பத்துடன் இந்தியை படிப்பதற்கான வாய்ப்பை தரும் இந்தி பிரச்சார் சபாவில் இந்தி மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்தி பிரச்சார் சபாவில் இந்தி மொழியின் அடிப்படை தொடங்கி இந்தி பண்டிட்டாக ஒருவர் தன்னை வளர்த்துக்கொள்ள எட்டு தேர்வுகள் எழுதவேண்டும்.
இந்தி மொழியை தென் இந்தியாவில் பரப்புவதற்காக, 1918ல் காந்தி மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரால் சென்னையில் தொடங்கப்பட்ட தக்ஷிண பாரத் இந்தி பிரச்சார் சபா, தற்போது கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் செயல்பட்டு வருகிறது.
இந்தி பிரச்சார் சபாவில் தேர்வு எழுத மாணவர்களுக்கு கற்பிக்கிறார் ஆசிரியர் அலமேலு சொக்கலிங்கம்.

பட மூலாதாரம், BSIP
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 மாணவர்களை இந்தி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் ஆசிரியர் அலமேலுவிடம் பேசினோம். எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் இந்தி கற்பதற்கு குழந்தைகளை அனுப்புவதாக கூறுகிறார் அலமேலு.
''தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியை குழந்தை கற்கவேண்டும் என்ற விருப்பத்தில் பல பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்கிறார்கள். எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தில் கிடைத்தாலும், அவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியை கற்றுக்கொண்டால் உதவியாக இருக்கும் என பெற்றோர் எண்ணுகிறார்கள். வெளிமாநிலங்களில் ஆங்கிலம் புரியாதவர்களிடம் இந்தியில் பேசலாம் என்று எண்ணுகிறார்கள்,'' என்கிறார் ஆசிரியர் அலமேலு.
ஏழாம் வகுப்பு மாணவி அகிலாவின் பெற்றோர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தோடு இந்தி மொழியை தங்கள் மகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தில் இந்தி டியூஷனுக்கு அனுப்புகிறார்கள்.


''என் மகள் தற்போது 'மதியமா' தேர்வு எழுதவிருக்கிறார். இது இரண்டாவது தேர்வு. இந்தி படித்துமுடித்த பின்னர், அவளுக்கு விருப்பம் இருந்தால், பிரெஞ்சு,ஜெர்மன் போன்ற மொழிகளை கற்பதற்கு வசதிகளை ஏற்படுத்தி தருவோம். மொழி என்பது விளையாட்டு, ஓவியம் போன்ற ஒரு நல்ல ஹாபி. எதிர்காலத்தில் வட இந்தியாவில் வேலை கிடைத்தால் இந்தி மொழி பயன்படும் என்பதால் இந்த மொழியை படிக்க வைக்கிறோம்,'' என்கிறார் தாய் வித்யா மகேஷ்.
இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக இந்தி பிரச்சார் சபாவின் செயலர் ஜெயராஜிடம் பேசினோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிர்க்கரித்துள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்களை தந்தார் ஜெயராஜ்.
''2014ல் எங்கள் சபாவில் 4 லட்சத்து 92,000 இந்தி தேர்வு எழுதினார்கள். 2018ல் 5 லட்சத்து 70,000 பேர் தேர்வு எழுதியுள்ளார்கள். பெரும்பாலும் மாணவர்கள் படிப்பதற்கு பெற்றோரின் விருப்பம் காரணமாக அமைகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்தி படிக்க அனுப்புகிறார்கள். எங்கள் சபாவில் படிக்க வயது வரம்பு இல்லை என்பதால் பள்ளி படிப்பு முடித்த பின்னர், அல்லது பணிக்கு செல்லுபவர்கள்கூட தேர்வு எழுதுவார்கள். விருப்பம் இருப்பவர்கள் இங்கு கற்றுக்கொள்கிறார்கள்,''என்கிறார் ஜெயராஜ்.

ஆரம்ப காலங்களில், 1960களில் இருந்து கட்டாய இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் போராடி வருவதால், இந்தி மொழி வெறுப்பு தமிழர்களுக்கு இருப்பதுபோல ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறும் எழுத்தாளர் அ.மார்க்ஸ், இந்தி மொழி திணிப்புக்கு தமிழகம் எதிரானது என்றும் இந்தி மொழியை மக்கள் வெறுப்பதில்லை என்கிறார்.
''பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தி படிக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு தமிழகம் எதிர்ப்பு குரல்களை எப்போதும் பதிவு செய்துவருகிறது. விருப்பத்தோடு இந்தி படிப்பதை இங்கு யாரும் தடுப்பதில்லை. தாய்மொழிக்கு அங்கீகாரம் இல்லாமல் போனால், தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதேசமயம் இந்தி உள்ளிட்ட எந்த மொழியை கற்பதற்கும் இங்கு தடை இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்தி டியூஷன், பிரச்சார் சபா , கல்லூரிகளில் இந்தி மொழி துறை இயங்குகின்றன. ஆனால் கட்டாயமாக படிக்கவேண்டும் என்பதை தமிழகம் ஒரு போதும் அனுமதிக்காது,''என்கிறார் மார்க்ஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












