"காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி" - திருமாவளவன்

திருமாவளவன்

பட மூலாதாரம், Facebook

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி" - திருமாவளவன்

மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதி என்றும், கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி என்றும் திருமாவளவன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பேசியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழீழ படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், "பா.ஜனதாவின் சனாதன கொள்கையில் தீவிர எதிர்ப்பு கொண்டதால் தான் நான் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தேன். கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியதற்கு ஒருபடி மேல் சென்று பயங்கரவாதி என்று கூறியிருக்க வேண்டும்.

காந்தியும் ஒரு இந்து தீவிரவாதி தான். அவர் மூச்சுக்கு 300 முறை ஹேராம் என்பார். அவருக்கு முற்பிறவி, கர்மவினை மீது நம்பிக்கை உண்டு. கர்மவினை மீது யார் நம்பிக்கை கொண்டாலும் அவர் ஒரு இந்து தீவிரவாதி தான். காந்தியை கொன்ற கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி" என்று அந்த செய்தி மேலும் விவரிக்கிறது.

இலங்கை

தமிழ் இந்து: "181 தொலைபேசி சேவை"

181 தொலைபேசி சேவை

பட மூலாதாரம், Getty Images

பெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 தொலைபேசி சேவை அழைப்பின் மூலம் கடந்த 5 மாதங்களில் வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை உட்பட 5 ஆயிரம் முக்கிய அழைப்புகள் பதிவாகியுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை கடந்த ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட்டது. குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் 181 இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் காவல்துறை, மருத்துவம், சட்டத்துறை உள்ளிட்டவற்றை அணுகி பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான தீர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 181 தொலைபேசி சேவை மையம் தொடங்கப்பட்டதில் இருந்து மார்ச் வரையிலான 5 மாதத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 985 அழைப்புகள் வந்துள்ளன" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினமணி: "வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க சிறப்பு கருவி"

வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க சிறப்பு கருவி

பட மூலாதாரம், Getty Images

வாகனத்தின் இருப்பிடத்தைக் கண்டறியும் வாகன கண்காணிப்புக் கருவியை அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறைத் திட்டமிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில் பொது மற்றும் சரக்கு வாகனங்கள் என 4 லட்சம் வாகனங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதனைச் சீரமைக்கும் வகையில் பல்வேறு நெறிமுறைகளை போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் பகுதியாக தற்போது வாகனத்தின் இருப்பிடத்தை அறியப் பயன்படும் கருவியான விஎல்டி (வெகிக்கிள் லொகேஷன் டிவைஸ்) எனப்படும் வாகன கண்காணிப்புக் கருவியை அறிமுகப்படுத்தப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கருவியின் மூலம் வாகனத்தின் இருப்பிடம், செல்லும் வேகம், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேரம் உள்ளிட்டவற்றை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்க முடியும். இதனுடன் அவசர கால உதவி கோரும் பொத்தான் அமைக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தும் பட்சத்தில் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்கப்படும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "ஏசி வெடிக்கவில்லை"

திண்டிவனத்தில் ஏசி வெடித்ததால் தந்தை, தாய், மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"திண்டிவனம் அருகே இரவில் தூங்கும்போது ஏசி வெடித்ததில் தந்தை, தாய், மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்ததாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளிவந்தது.

ஆனால், அதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சொத்து பிரச்சனையின் காரணமாக தனது தாய், தந்தை மற்றும் தம்பியை அவர்களது சொந்த மகனே திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, ஏசி வெடித்து விபத்து நேர்ந்ததை போன்று நாடகமாடியது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :