You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி 1987-88ல் டிஜிடல் படம் எடுத்து இமெயில் அனுப்பினாரா: கேலி செய்யும் சமூக ஊடகம்
"1987-88ல் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்தி அத்வானியை புகைப்படம் எடுத்தேன். அப்போது ஒரு சிலரிடம் மட்டுமே இ-மெயில் வசதி இருந்தது. நான் எடுத்த புகைப்படத்தை இ-மெயில் மூலம் டெல்லிக்கு அனுப்பினேன். அடுத்த நாளே அப்புகைப்படம் வெளியானதை பார்த்து வியந்துவிட்டார் அத்வானி" என்று இந்தி மொழி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோதி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மோதியின் இந்த கூற்று அடங்கிய 40 வினாடி நீளமுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
80களிலேயே தன்னிடம் டிஜிட்டல் கேமரா இருந்ததாக பிரதமர் மோதி அதில் கூறியுள்ளார்.
80களில் இ-மெயில் வசதியே வந்திருக்கவில்லை. மேலும், ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்ததாக கூறும் மோதி அப்போதே டிஜிட்டல் கேமரா வைத்திருந்தாரா என்று சமூக ஊடக வாசிகள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இ-மெயில் வசதி 1990களில்தான் வந்தது என்றும், பிரதமர் மோதி எப்படி அப்போதே மின்னஞ்சல் அனுப்பினார் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
அதே போல டிஜிட்டல் கேமராக்கள் 1987-88ல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
தொழில்நுட்பம் மற்றும் மின்சாதன பொருட்கள் குறித்து மதிப்பாய்வு செய்யும் பிரபல அமெரிக்க வலைதளமான CNETல், முதல் டிஜிட்டல் கேமரா 1988ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் அது விற்பனை செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னர் 1990ஆம் ஆண்டுதான் டைகாம் மாடல் 1 என்ற டிஜிட்டல் கேமரா விற்பனைக்கு வந்ததாகவும் அந்த வலைதளம் கூறுகிறது.
1977-78ல் இ-மெயில்?
பிரிட்டனை சேர்ந்த கணிணி விஞ்ஞானியான சர் டிம் பெர்னர்ஸ் லீ, www எனப்படும் வர்ல்ட் வைட் வெப்-ஐ 1989-ம் ஆண்டு உருவாக்கினார்.
1991ஆம் ஆண்டுதான் பெர்னர்ஸ் லீ தனது www மென்பொருளை வெளியிட்டார். பின்னர் இது பிற உலக நாடுகளில் அறிமுகமானது.
இந்தியாவில் இணைய சேவையை அரசின் விதேஷ் சன்சர் நிகாம் லிமிட்டட் (VSNL) நிறுவனம் 1995ல்தான் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்ததாகவும், மோதி அளவற்ற பொய் சொல்வதாகவும் ட்விட்டர் வாசிகள் பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக பாலகோட் தாக்குதல் நாள் அன்று காலநிலை சரியில்லாமல் இருந்ததால், தாக்குதல் தேதியை மாற்றிவைக்கலாமா என்று ஆலோசனை கூறப்பட்டபோது, மேகங்கள் சூழ்ந்திருப்பதால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் ரேடார்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கும் என்று வல்லுநர்களுக்கு தாம் யோசனை அளித்ததாகவும் மோதி கூறியிருந்தார்.
இந்த கருத்தும் பெரும் கேலி கிண்டலுக்கு உண்டானது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்