You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி எண்ணெய் கப்பல்கள் இரண்டு ஐக்கிய அரபு எமிரேட் கடலோரம் நாச வேலையால் சேதம் - அமைச்சர் தகவல்
ஐக்கிய அரபு எமிரேட் கடலோரத்தில், சௌதி எண்ணெய்க் கப்பல்கள் இரண்டு நாசவேலையால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக சௌதி எண்ணெய் வளத்துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி கூறியுள்ளார்.
அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், ஃபுஜைரா துறைமுகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் எண்ணெய் கப்பல்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும் ஐக்கிய அரபு எமிரேட் தெரிவித்துள்ளது. ஆனால் யாருக்கும் உயிரிழப்போ, காயங்களோ இல்லை.
இந்த சம்பவங்கள் கவலையளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக கூறியுள்ள இரான், இது குறித்து முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளது.
அந்த பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச அளவில் பயன்படுத்தக் கூடிய ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் அந்த பகுதியின் வழியாகதான் செல்கிறது.
தனது படைகளுக்கும், கடல் வழிப் போக்குவரத்துக்கும் இரானால் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருப்பதற்கு உறுதியான அறிகுறிகள் இருப்பதாக கூறி அந்தப் பகுதியில் கடந்த சில நாள்களில் அதிக போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது அமெரிக்கா.
ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று இரான் தெரிவித்துள்ளது.
இரானின் எண்ணெயை வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து அந்நாட்டின் முக்கிய இறக்குமதியாளர்களுக்கு மேற்கொண்டு விதிவிலக்கு அளிக்க முடியாது என்று கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, ஹார்மூஸ் ஜலசந்தியை பயன்படுத்துவதில் இருந்து தாங்கள் தடுக்கப்பட்டால், அந்த நீர்த்தடத்தை மூடிவிடப்போவதாக இரான் தெரிவித்திருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட் கடற்பகுதிக்கு உட்பட்ட ஓமன் வளைகுடாவில் ஞாயிறன்று இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
"அடையாளம் காணப்படாத நான்கு வர்த்தக கப்பல்கள் நாச வேலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஆனால் உயிரிழப்புகளோ, ரசாயனங்கள் கசிவோ ஏற்படவில்லை." என ஐக்கிய அரபு எமிரேட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஃபுஜெய்ரா துறைமுகத்தில் தீ விபத்து மற்றும் வெடி விபத்துக்கள் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை, "ஆதாரமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத" செய்தி என்று கூறி அமைச்சரகம் மறுத்துள்ளது.
தாக்கப்பட்ட கப்பல்களில் செளதியின் இரண்டு எண்ணெய் கப்பல்களும் அடங்கும் என ஃபாலி தெரிவித்துள்ளதாக செளதியின் அதிகாரபூர்வ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
"இரண்டு கப்பல்களில் ஒன்று அமெரிக்காவில் உள்ள செளதி நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ராஸ் டனுரா துறைமுகத்தில் செளதியின் கச்சா எண்ணெயை நிரப்ப சென்றிருந்தது" என மேலும் தெரிவித்தார்.
"அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலால் எந்த ஒரு உயிரிழப்பும் அல்லது எண்ணெய கசிவும் ஏற்படவில்லை. ஆனால் இரண்டு கப்பல்களுக்கும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன."
ஆனால் ஏற்பட்ட சேதங்களை காட்டும் எந்த ஒரு புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
தனியார் டேங்கர் உரிமையாளர் மற்றும் ஆபரேடர்களுகான கூட்டமைப்பான இண்டர்டாங்கோ, "இந்த ஆயுதங்களால் கப்பல்களில் இரண்டு துளைகள் ஏற்பட்டுள்ளன என்பதை காட்டும் புகைப்படங்களை பார்த்ததாக தெரிவித்துள்ளது." என ராயடர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
யார் மீது குற்றம்சுமத்தப்படுகிறது?
செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டு எந்த ஒரு குழுவின் மீதும், நாட்டின் மீதும் குற்றம்சுமத்தவில்லை.
கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை பாதிக்கும் நோக்கிலும், உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் விநியோகிப்பதை தடுக்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஃபாலி தெரிவித்துள்ளார்.
"கடல் வழி போக்குவரத்து மற்றும் எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பு சர்வதேச நாடுகளின் பொறுப்பாகும். மேலும் எரிபொருள் சந்தையில் இம்மாதிரியான தாக்குதலால் வரக்கூடிய ஆபத்தை தடுப்பது, அது சரவ்தேச பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தும் ஆபத்தை குறைப்பது என அனைத்தும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பாகும்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்."
இம்மாதிரியான சம்பவங்கள், கடல் போக்குவரத்து பாதுகாப்பில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மொசவி தெரிவித்ததாக செய்தி முகமை ஒன்று தெரிவித்துள்ளது. ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வெளிநாட்டு முவர்களின் சதிகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்று அவர் இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை கேட்டுக்கொண்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்