"இலங்கையில் இன்று தாக்குதல் நடத்துவதாக எவ்வித அச்சுறுத்தலும் இல்லை" - பாதுகாப்புப் பிரிவு

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார்.

வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கோட்டை ரயில் நிலையம் மற்றும் நாவல உள்ளிட்ட பகுதிகளின் மீது இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிக்கையொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதிக்குள் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமக்கு கிடைக்கும் அனைத்து விடயங்கள் குறித்தும் தாம் அவதானம் செலுத்துவதாக தெரிவித்த போலீஸ் ஊடகப் பேச்சாளர், இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியதாக குறிப்பிட்டார்.

எனினும், புலனாய்வு பிரிவினருக்கு இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் வழமை போன்று தமது செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை பாதுகாப்பு பிரிவினர் ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர், பாதுகாப்பு பிரிவின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முப்படையினர், போலீஸார், சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திற்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இதன்படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஏற்பட்ட அமைதியின்மையை கருத்தில் கொண்டு, நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இலங்கையில் கடந்த 21ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் உடன் அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.

9 நாட்கள் அமுல்படுத்தப்பட்டிருந்த அந்த தடையுத்தரவு மீண்டும் நீக்கப்பட்ட நிலையில், நீர்கொழும்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சில மணித்தியாலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன.

கண்டி - திகன பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இன வன்முறை சம்பவத்தின் போதே சமூக வலைதளங்கள் முதல் முறையாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :