புர்கா அணிந்த 'காங்கிரஸ் ஊழியர்' வாக்கு மோசடியில் ஈடுபட்டது உண்மையா? #BBCFactCheck

புர்கா அணிந்தவர்

பட மூலாதாரம், Twitter grab

    • எழுதியவர், உண்மை சரிபார்ப்புக் குழு
    • பதவி, பிபிசி நியூஸ்

புர்கா அணிந்து ருக்கும் ஒருவர், வாக்கு மோசடியில் ஈடுபட்டார் என்றும் அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கும் வகையில் இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 29ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தப் புகைப்படங்களில் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.

"ஷாமினா என்ற பெயரில் கள்ள ஓட்டு போடுவதற்கு முற்பட்டபோது புர்கா அணிந்திருந்த காங்கிரஸ் ஊழியர் பிடிபட்டார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

"நரேந்திர மோதி ஃபார் 2019பிஎம்" போன்ற வலதுசாரி ஃபேஸ்புக் பக்கங்கள் பல இந்த புகைப்படத்தை 9,200க்கு மேற்பட்ட முறை பகிர்ந்துள்ளன.

இதற்கு முன்னரும் இதே புகைப்படம், ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

இதனுடைய உண்மை தன்மையை கண்டறியுமாறு பிபிசியின் வாட்ஸ்அப் வாசகர்கள் அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த புகைப்படத்தின் உண்மைத் தன்மை

இந்த புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது தவறு என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

இந்திய மக்களவைத் தேர்தலுக்கும், இந்த புகைப்படங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவை 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

புர்கா அணிந்தவர்

பட மூலாதாரம், Vikrant Kamik

செய்திகளில் புகைப்படங்கள்

இந்த புகைப்படங்கள் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது என்பதை ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் கண்டுபிடித்தோம்.

அந்த புகைப்படங்கள் வைத்து வெளியான செய்திக் கட்டுரையை இங்கே பார்க்கலாம்.

2015ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியன்று Schoop Whoop-ல் வெளியானதொரு கட்டுரையில், உத்தர பிரதேசத்திலுள்ள ஆசாம்கார் மாவட்டத்தில் கோயில் ஒன்றின் மீது மாட்டிறைச்சியை எறிந்ததாக பிடிபட்ட ஆர்.எஸ்.எஸ் ஊழியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை
இலங்கை

செய்தியின் தலைப்பு, "புர்கா அணிந்த ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர் கோயிலின் மீது மாட்டிறைச்சியை எறிவதை வெளிப்படுத்தும் ஃபேஸ்புக் பதிவு" என்பதாகும்.

அந்நேரத்தில் புர்கா அணிந்திருந்த இந்த மனிதரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின என்று பிற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பின்னர் இந்த சம்பவத்தோடு தொடர்புடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

இந்தப் புகைப்படங்களில் இருப்பவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

ஆனால், இந்தப் புகைப்படங்களுக்கும் இப்போது நடைபெற்று கொண்டிருக்கிற 2019 மக்களவைத் தேர்தல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை பழைய செய்திகள் தெளிவுப்படுத்துகின்றன.

பிற கருத்துக்கள்

புர்கா அணிந்தவர்

பட மூலாதாரம், Prashant Chahal

2019 இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்ற பின்னர், தவறான கருத்துக்களோடு இதே புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இந்த புகைப்படங்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் முசாஃபர்நகரில் எடுக்கப்பட்டவை என்று சில ஃபேஸ்புக் குழுக்கள் தெரிவித்த நிலையில், மற்றவை அதே மாநிலத்தின் சஹாரான்பூரில் எடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தன.

புர்கா அணிந்தவர்

பட மூலாதாரம், Akash Gupta

"முஸ்லிம் பெண்களின் புர்காவை அணிந்து கொண்டு வாக்களிக்க சென்ற வழியில் கையும் களவுமாக பிடிபட்ட பாஜக செயற்பாட்டாளர்கள்" என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :