3 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்; சபாநாயகருக்கு எதிராக திமுக மனு

பட மூலாதாரம், ARUN SANKAR
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு அவர்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து அவைத்தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளது திமுக.
அதிமுகவின் மூன்று எம்எல்ஏகள் கட்சி விதிகளுக்கு புறம்பாக நடப்பதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என அரசு கொறடா கொடுத்த புகாரின் பேரில், தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால், மூவரும் ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.
பயப்படவேண்டாம்: பிரபு
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மக்களவை தேர்தலின்போது அமமுக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்தனர். இந்த மூவரும் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதற்கான ஆதரங்கள் இருப்பதாக கூறி அரசு கொறடா அவைத் தலைவரிடம் ஏப்ரல் 26ம் தேதி புகாரளித்தார். அதன் மீது தற்போது அவைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிமுகவுக்கு எதிராக தான் இதுவரை எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்று கூறும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தற்போதுவரை அந்த கட்சியின் உறுப்பினராக, எம்எல்ஏ-வாக நீடிப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்கிறார். ''நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சொல்கிறார்கள். இவர்கள் இடைத்தேர்தலில் எதிர்பார்த்தது போல முடிவுகள் வரவில்லை என்றால், பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, நாங்கள் மூவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் என்று பயப்படுகிறார்கள். நான் அதிமுகவில்தான் இருப்பேன். அவர்கள் பயப்பட தேவையில்லை,''என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அவைத்தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை உறுதிப்படுத்திய அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன், மூன்று எம்எல்ஏகளும் அமமுக வேட்பாளர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரித்தார்கள் என்பதாலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள், மற்ற கட்சிக்கு பிரச்சாரம் செய்தது கட்சிக்கு புறம்பானது என்பதாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
அதிமுக அரசின் பெரும்பான்மைக்கு சிக்கல்வருவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதிமுக கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், சட்டப்படி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எதற்காக இந்த நடவடிக்கை?
தமிழகத்தில் மே மாதம் நான்கு தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைதேர்தலுக்கான பிரசாரத்திற்கு அரசியல்கட்சிகள் தயாராகும் வேளையில், ஆளும் அதிமுக தனது ஆட்சியை தக்கவைக்க, மேலும் மூன்று எம்எல்ஏகளை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஏப்ரல் 26ம் தேதி, தமிழக அரசின் தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன் திடீரென மூன்று அதிமுக எம்எல்ஏகள் அதிமுகவுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என அவைத்தலைவர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார்.
தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் 2019மக்களவை தேர்தல் முடிவுகள் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏகளை நீக்குவதற்கு செய்யப்பட்ட முடிவு விவாதங்களை தோற்றுவித்துள்ளது.
அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோரை தகுதிநீக்கம் செய்தால், இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக இல்லாவிட்டால்கூட, ஆட்சியை தக்கவைக்க இந்த எண்ணிக்கை குறைப்பு உதவும் என அதிமுக நம்புவதாகவும் கருத்துக்கள் எழுகின்றன.
இந்த மூன்று எம்எல்ஏகளும் ஊடகங்களிடம் தங்களுக்கு அதிமுக ஆட்சி மீது நம்பிக்கையில்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதில் தவறில்லை என்று கருதுவதாகவும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Facebook
தமிழக அரசியல் நகர்வுகளை கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஜி.சி.சேகர், இடைத்தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக இல்லாமல் போனால், சட்டமன்றத்தில் தங்கள் பெரும்பான்மைக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க அதிமுக எடுத்த முடிவுதான் மூன்று எம்எல்ஏகளின் தகுதிநீக்கத்திற்கான நடவடிக்கை என்கிறார்.
அதிமுக இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் நான்கு தொகுதிகளுக்கு குறைவாக பெற்றால், சட்டமன்றத்தில் 118 உறுப்பினர்கள் தன்னுடன் இருப்பதாக நிரூபிக்கவேண்டும். அந்த எண்ணிக்கை குறைந்தால், அல்லது எம்எல்ஏகள் ஆதரவு இல்லாமல்போனால், ஆட்சிக்கு உத்தரவாதம் இல்லாமல் போகும் என்பதால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிகையை குறைக்கவழிவகுகிறது அதிமுக என்கிறார் சேகர்.
''இடைத்தேர்தலில் சாதகமான முடிவுகள் வராமல் போனால், அதிமுக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நேர்ந்தால், தனக்கு பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டும் என்பதற்காக இப்போது தயாராகிறது. ஒருவேளை 22 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்தால், சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, ஒரு சில எம்எல்ஏகள் தினகரன் அணியுடன் சேர்ந்துவிட்டால் சிக்கல் பெரிதாகும் என அதிமுக எண்ணுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், தனது ஆட்சியை தக்கவைக்க, அதிமுக யோசித்து செயல்படுகிறது,'' என்கிறார்.
மேலும் சட்டமன்ற முடிவுகள் வந்தபின்னர் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் இருக்கும் என்பதால், அதிமுக சாதகமான சூழலை ஏற்படுத்திக்கொள்ள தற்போது வேலைசெய்கிறது என்கிறார்.
மூன்று எம்எல்ஏகளை தகுதிநீக்கம் செய்வதாக அறிவிப்பதன் மூலம், அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும் நிகழ்வாகவும் இதை பார்க்கவேண்டும் என்கிறார் பத்திரிகையாளர் மணி. ''அதிமுகவில் மேலும் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என டிடிவி தரப்பு கூறுகிறது. இந்த மூன்று எம்எல்ஏக்கள் பதவிகளை பறிப்பதன்மூலம், மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்யமுடியும் என அதிமுக நினைக்கிறது,''என்கிறார் மணி.

பட மூலாதாரம், ARUN SANKAR
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பல அமைச்சர்கள் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தினார்கள் என்று கூறும் மணி, ''துணைமுதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோதி சொன்னதால்தான் கட்சிக்கு மீண்டும்வந்தேன் என வெளிப்படையாகக் கூறினார். தற்போது அமைச்சர்கள் பலரும் மோதியால் தான் கட்சி வழிநடத்தப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக பேசுகிறார்கள்.
அதன்உச்சமாக, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மோதி தான் எங்கள் டாடி என்றார். இதனால், ஒருவேளை பாஜக வெற்றிபெற்றால், அதன் செல்வாக்கை கொண்டு ஆட்சியை தக்கவைக்கமுடியும் என அதிமுக நம்புகிறது. சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட, மக்களவை முடிவுகளை அதிமுக அதிகமாக நம்பியிருக்கிறது,''என்கிறார் மணி.
ஆனால் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் எம்எல்ஏகளின் பதவிநீக்கம் செய்வதற்கான பரிந்துரை சட்டப்படி எடுக்கபட்ட முடிவுதான் என வாதாடுகிறார். ''நாங்கள் ஆட்சியை தக்கவைக்கவேண்டும் என கூறுவதெல்லாம் முகாந்திரம் இல்லாமல் வைக்கப்படும் குற்றச்சாட்டு. கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஆதாரங்களை சேமித்து கொறடா கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் உடனடியாக எதையும் சொல்லமுடியாது என்பதால் ஆதரங்களை திரட்டி கொறாடா பதவி நீக்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்,'' என்கிறார் ஜெயக்குமார்.
இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் தனது கட்சிக்கு சாதமாக இருக்கும் என உறுதியாக நம்பும் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியை தக்கவைப்பதற்கும், இந்த மூன்று எம்எல்ஏகளின் பதவி பறிப்பிற்கும் முடிச்சு போடக்கூடாது என்கிறார்.
''பதவிநீக்கம் குறித்து முடிவு செய்ய அவைத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரின் முடிவில் யாரும் தலையிடமுடியாது. எங்கள் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயரை உருவாக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள், ஆட்சியை காப்பற்றவே பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்ததாக தேவையற்ற கருத்துக்களை பரப்பிவருகிறார்கள். எங்கள் ஆட்சி நிலையான ஆட்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை,''என்கிறார் ஜெயக்குமார்.
அவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
அதிமுகவின் மூன்று எம்எல்ஏகளின் தகுதிநீக்கம் தொடர்பாக அவைத்தலைவர் நோட்டீஸ் அளித்த சில மணிநேரத்தில், தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவை பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனுவை சட்டப்பேரவை செயலாளரிடம் அளித்தபின் செய்தியாளரிகளிடம் பேசிய திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி,இன்னும் 15 நாட்களுக்குள் மனுவிற்கான பதில் கிடைக்கும் என்று கூறினார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், பேரவை தலைவரிடம் அளித்துள்ள மனுவில் 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வரவுள்ள நிலையில் சட்டமன்றத்தின் பெரும்பான்மையினை மாற்றியமைக்கும் விதத்தில் இவ்வாறான முடிவுகளை சட்டமன்றப் பேரவைத் தலைவர் எடுப்பது, தமிழக சட்டமன்ற மாண்பிற்கு கேடாய் விளைந்திடும் என்று கூறியுள்ளார். மேலும் மக்களாட்சியில் ஒரு சட்டமன்றப் பேரவைத் தலைவர், இவ்வாறு நடந்துகொண்டால் அது அவர் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்று உணர்த்துகிறது என்றும் ஸ்டாலின் தனது மனுவில் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












