இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3 பேரிடம் கேரளாவில் விசாரணை

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: '3 ஐஎஸ் தீவிரவாதிகள் கேரளாவில் கைது'
இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளாவில் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட்ட 8 இடங்களில், ஈஸ்டர் பண்டிகை தினமான கடந்த 21-ம் தேதி நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், உள்நாட்டு தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதையடுத்து, இலங்கையில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சோதனையின்போது, தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப் பாக இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் தப்பி இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க கடற் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது." என்கிறது அந்நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: '1500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்திவைப்பு'
தமிழக அரசு 1500 ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.


தினத்தந்தி: 'ஏமாற்றியது 'பானி' புயல்; மழைக்கு வாய்ப்பில்லை'

பட மூலாதாரம், தினத்தந்தி
பானி புயல் ஏமாற்றியது. திசை மாறி செல்வதால் தமிழகத்துக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
அந்நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது:
தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்த பிறகு, கடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்தே வெயிலின் கோரத்தாண்டவம் தொடங்கியது. மார்ச் மாதத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதிலும் இந்த மாதத்தில் சில நாட்களில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது.
பருவமழை போதிய அளவு இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமானதாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த காலகட்டத்தில் கோடை மழையாவது கைகொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் அதற்கான வாய்ப்பும் பெருமளவில் இல்லாமலே போனது.
இந்த சூழ்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புயல் என்றாலே மக்கள் அஞ்சும் அளவுக்கு கடந்த காலங்களில் தமிழகம் பெரும் பாதிப்பை சந்தித்து இருந்தாலும், தற்போது வறட்சி நிலவுவதால் பானி புயலால் போதிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவசர ஆலோசனை கூட்டமும் நடத்தியது. இந்த நிலையில் தமிழக கடற்கரை பகுதிகளில் கடக்கும் என்று கூறப்பட்ட பானி புயல் தற்போது திசை மாறி சென்றுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது. 'புயலோடு மழை வரும்' என்று எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

தினமணி: 'வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு'

பட மூலாதாரம், தினமணி
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், பொட்டனேரி கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுத்தனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
மேச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் கோ.பெ. நாராயணசாமி, வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் அளித்த தகவலின்பேரில், தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சு. இராஜகோபால், கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன். வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகே பொட்டனேரி கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கல்வெட்டின் உயரம் 70 செ.மீ., அகலம் 65 செ.மீ. தடிமண் 10 செ.மீ. ஆகும். இதன் மேல்பகுதி உடைந்துள்ளது. உடைந்த மேல்பகுதி அங்கு காணப்படவில்லை.
எட்டு வரிகளில் வட்டெழுத்துடன் கல்வெட்டுள்ளது.
இதன் காலம் 8-ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். எழுத்தமைவானது 1,200 ஆண்டுளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது. கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும், பின் வட்டெழுத்திலும், 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












