You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“பிரித்தானியராக இருப்பது காலனியாதிக்க குற்ற மனப்பான்மையை சுமப்பதே”
- எழுதியவர், ராஜ் பில்க்
- பதவி, பிபிசி ஆசிய வலையமைப்பு
1919ம் ஆண்டு நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையில் உயிர் தப்பிய மூன்று பேரின் வம்சாவளியை சேர்ந்த ஒருவர், ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக பிரிட்டன் அரசின் மன்னிப்பு பயனில்லாதது என்று தெரிவித்திருக்கிறார்.
"பிரித்தானியராக இருப்பது என்பது காலனியாதிக்க குற்ற மணப்பான்மையை சுமப்பதை குறிக்கிறது" என்று நம்புவதாக 37 வயதான டாக்டர் ராஜ் சிங் கோலி கூறியுள்ளார்.
எவ்வித ஆயுதங்களும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கானோரை கொன்றதற்காக பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டும் என்று இந்த வாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு ரக்பி வர்த்தகரான ராஜ் சிங் கோலி இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.
"இந்த படுகொலை சம்பவம் பிரிட்டன்-இந்திய வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய வடு" என்று பிரதமர் தெரீசா மே விவரித்திருந்தார்.
1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஜாலியன்வாலா பாக்கில் நிகழ்ந்த படுகொலையின்போது மிதிபட்டு இறந்த உடல்களுக்கு இடையில் பல மணிநேரங்களாக சிக்கிக்கொண்ட பால்வந்த் சிங்தான், டாக்டர் கோலியின் உறவினர் ஆவார். "இப்போது மன்னிப்பு கேட்பது என்பது பயனில்லாதது என நான் நினைக்கிறேன். விரும்பப்படாத செயலாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.
"துப்பாக்கிச்சூடு தொடங்கியபோது, இரண்டு பேர் (உறவினர்கள்) எப்படியோ தப்பித்தார்கள். சுவர் ஏறி தப்பித்தார்களா அல்லது எஞ்சிய திறந்திருந்த பிற நுழைவாயில்கள் மூலம் வெளியேறினார்களா என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை" என்று டாக்டர் சிங் கோலி தெரிவித்தார்.
இந்த படுகொலைக்கு பின்னர் டாக்டர் ராஜ் சிங் கோலியின் குடும்பம் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றது.
"பர்மா ராணுவ காவல் துறையில் துணை உதவி ஆணையராக பணிபுரிந்த எனது கொள்ளுத் தாத்தாவிடம், அவரது மகன்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது" என்கிறார் டாக்டர் சிங் கோலி.
"பின்னர் அவர்கள் இந்தியாவை விட்டு சென்றார்கள்" என்று டாக்டர் சிங் கோலி விளக்கினார்.
முறையே 1997 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரிட்டன் மகாராணியும், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனும் நடந்ததற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.
ஆனால், கோலியின் 78 வயதான தாய் ஜகீத் கவுரை பொறுத்தவரை கவலை தெரிவித்தது போதுமானதாக இல்லை.
"இந்த படுகொலையை நடத்த அரசு அனுமதி அளித்ததோ, இல்லையோ, அவர்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறு என்பதை அங்கீகரித்து, பிரிட்டன் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவிக்கிறார்.
"இந்த படுகொலை நடந்த பின்னர், வாழ்க்கை முழுவதும் எனது பாட்டி அழுதார். அவர் தனது மகன்களை மீண்டும் பார்க்கவில்லை. வருவாய் ஈட்டி வந்த குடும்ப நபர்கள் கொல்லப்பட்டவுடன் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டன" என்கிறார் அவர்.
"பிரிட்டனை சேர்ந்த சீக்கியரின் ஒரு பகுதியாக இருப்பது என்பது காலனியாதிக்க குற்ற மனப்பான்மையை நீங்கள் சுமப்பதாக பொருள்படுகிறது என்று டாக்டர் ராஜ் சிங் கோலி மேலும் கூறினார்.
"இது வினோதமாக தோன்றலாம். ஆனால், பிரித்தானியராக இருக்கின்ற என்னுடைய உணர்வு, பிரிட்டன் எவ்வாறு இருந்தது, என்ன கற்றுக்கொண்டது, இப்போது எவ்வாறு உள்ளது ஆகியவற்றை மையமாக கொண்டது" என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்