You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நோயாளிகளுக்கு தனது விந்தணுவை செலுத்தி 49 பேருக்கு தந்தையான மருத்துவர் மற்றும் பிற செய்திகள்
ஹாலாந்தில், மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளின் அனுமதி இல்லாமல் தனது விந்தணுவை செலுத்தியதன் மூலம் 49 குழந்தைகள் பிறந்துள்ளது உறுதியாகியுள்ளது.
டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் ஹாலந்தின் ரோட்டர்டாம் நகருக்கு அருகில் உள்ள அவரது மருத்துவமனையில் ஜேன் கார்பெட் தனது நோயாளிகளை கர்ப்பமாக்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று நீதிபதி டிஎன்ஏ முடிவுகளை வெளியிட்டதும் இந்த செய்தி உறுதியானது. 2017இல் அவர் தனது 89ஆம் வயதில் மரணமடைந்தார்.
குழந்தைகளில் ஒருவர் தனது தந்தை கார்பெட் என்று தற்போது தெரியவந்தவுடன், இந்த விஷயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு சில குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர்களின் மூலம் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு குழந்தைக்கு மருத்துவரின் உருவ ஒற்றுமை இருந்தது.
ரத்து செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள்
நிதிச் சிக்கலில் சிக்கித் தவித்துவரும் இந்தியாவின் முன்னணி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தமது பன்னாட்டு விமானப் பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிறுவனம் பிழைத்திருக்குமா என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது. 100 கோடி டாலருக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவித்துவரும் இந்த நிறுவனம் கடனில் மூழ்கி மூடப்படுவதை தவிர்ப்பதற்காக நிதியுதவியை எதிர்பார்க்கிறது.
விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகளை வழங்க விரும்பும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் குறைந்தது 20 விமானங்கள் வைத்திருக்கவேண்டும்.
விரிவாக படிக்க: சர்வதேச விமானங்களை ரத்து செய்ததா ஜெட் ஏர்வேஸ்?
"கடனை செலுத்தாத விவசாயிகளை கைது செய்வதை சட்டவிரோதம் ஆக்குவோம்"
கடனை செலுத்தாத விவசாயிகளை கைது செய்வது சட்டவிரோதம் என்று ஆக்குவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேனியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் வரலாறு பிரதமர் மோதிக்குத் தெரியவில்லை என்றும், தமிழர்கள் விரும்பாததை அவர்கள் மீது திணிக்க முடியாது என்றும் கூறினார். பெரியார், கருணாநிதி ஆகியோர் புத்தகங்களை மோதிக்குப் பரிசளிக்க விரும்புகிறேன் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேலும் பேசிய அவர், "நரேந்திர மோதி அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் நாங்கள் பொய் சொல்ல வரவில்லை. எங்களால் 15 லட்சம் தரமுடியாது. அது இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடும்.
மேற்கு மாவட்டங்களில் திமுக ஏன் வலிமையடையவில்லை?
வேறெங்கோ சோதனை நடத்திவிட்டு அதனை திமுக-வோடு முடிச்சுப் போடுகிறார்கள் என்று பேசியுள்ளார் திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஆ.ராசா.
திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான அவர் பிபிசிக்கு அளித்த நேர்க்காணல்.
கே: மேற்கு மாவட்டங்களில் திமுக இன்னும் வலிமையடையவில்லை என்ற விமர்சனம் உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கும், பொதுவாகவே பலமான கட்சியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா. ஏன், மேற்கு பகுதிகளில் நீங்கள் இன்னும் கவனம் செலுத்தவில்லையா?
ப: மேற்கு மாவட்டங்களில் திமுக பலமாக இல்லையோ என்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதற்கு காரணம் போன தேர்தலில் நடந்த பணப்பட்டு வாடா.
அதனால் மேற்கு மாவட்டங்களில் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் வெற்றிபெறவில்லை. போனமுறை 80-90 சதவீதம் பணப்பட்டுவாடா நடந்தது. மக்கள் ஒரு மயக்கத்தில் ஓட்டு போட்டு விட்டனர்.
ஆனால், இந்த முறை நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. போன முறை அதிமுக கையாண்ட குறுக்கு வழியினால், பணப்பட்டுவாடவினால் ஏற்பட்ட விளைவு. அந்த விளைவே நிரந்தரம் என்றோ, அதுதான் மேற்கு மண்டலத்தின் படிந்த படிவு என்றோ முடிவுக்கு வரக்கூடாது. அதை மட்டுமே அடிப்படையாக வைத்து மேற்கு மாவட்டங்களில் திமுக வலிமையாக இல்லை என்பது தர்க்க ரீதியாக சரியாக இருக்காது.
திமுக - இதுவரை சாதித்ததும், சறுக்கியதும் - 7 சுவாரஸ்ய தகவல்கள்
எந்த தொகுதி திமுகவின் கோட்டை?
மக்களவை தேர்தல்களில் திமுகவின் கோட்டையாக விளங்குவது வடசென்னை தொகுதிதான்.
சி.குப்புசாமி மூன்று மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றதும் இந்த தொகுதியில்தான்.
இதுவரை 10 மக்களவை தேர்தல்களில் திமுக இங்கே வெற்றி பெற்றுள்ளது.
1989,1991,2014 மக்களவை தேர்தல்களில் மட்டுமே இங்கே திமுக தோல்வியை தழுவியுள்ளது.
திருப்பத்தூரில் ஒன்பது முறை திமுக வென்றுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் எட்டு முறை வென்றுள்ளது.
மத்திய சென்னையில் ஏழு முறையும், தென்சென்னையில் ஏழு முறையும் வென்றுள்ளது.
பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரிலும் ஏழு முறை வென்றுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்