ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு: மத்திய அரசின் ஆட்சேபனையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ரஃபேல்

பட மூலாதாரம், Getty Images

ரஃபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு எழுப்பிய முதல் கட்ட ஆட்சேபனையை இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை என முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஊடகங்களில் வெளியான ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்கக் கூடாது என்று மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது.

மத்திய அரசின் ஆட்சேபனை குறித்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த ஆட்சேபனையை நிராகரித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, மறுசீராய்வு மனுதாரர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி மூன்று நீதிபதிகளும் கருத்தொருமித்து இந்த தீர்ப்பை வழங்கியிருப்பது நிறைவளிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் ஒரு முடிவுக்கு வரவில்லை என்பதையும், நீதிமன்றத்தின் இறுதி முடிவு அரசுக்கு பின்னடைவாக இருக்கலாம் என்பதையும் காட்டுகிறது என்று வழக்குரைஞர் டாக்டர் பி.கே.அகர்வால் தெரிவித்தார்.

பல்வேறு விசாரணைகளில் அரசு முன்வைக்கும் வாதங்கள் நீதிமன்றத்தால் ஏற்கப்படுவதில்லை. அரசின் மனு இன்று நிராகரிக்கப்பட்டிருப்பது அதற்கு மற்றொரு ஆதாரம் என்றும் அகர்வால் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :