லோக்பால் பதவிக்கு நீதிபதி பி.சி.கோஸ் நியமனம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

பினாகி சந்திர கோஸ்

பட மூலாதாரம், NHRC

படக்குறிப்பு, பினாகி சந்திர கோஸ்

இந்தியாவில் முதல் முறையாக ஊழல் தடுப்புப் பதவியான லோக் பால் பதவி நிரப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் லோக் பாலாக நீதிபதி பினாகி சந்திரகோசினை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளில் ஒருவர் பி.சி.கோஸ்.

லோக் பால் பதவிக்கு பி.சி.கோஸ்-ஐ நியமித்து குடியரசுத் தலைவரின் செயலகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு 9.22 மணிக்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ தளத்தால் பகிரப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பினாகி சந்திர கோஸ், 2017ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார்.

மறைந்த தமிழக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆனால், இந்த தண்டனைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, நீதிபதி குமாரசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா இயற்கையாக மரணம் அடையும் வரை தீர்ப்பு வெளியாகவில்லை. பிறகு, சிறிது காலம் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவி வகித்தார். பிறகு பன்னீர்செல்வத்தை பதவியை விட்டு நீக்கிவிட்டு, சசிகலாவை முதல்வர் பதவிக்கு அதிமுக சட்டமன்றக் குழு தேர்வு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பி.சி.கோஸ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயிரோடு இல்லாத ஜெயலலிதாவை விடுவித்து மற்றவர்களின் தண்டனையை உறுதி செய்தது.

நீதித்துறை உறுப்பினர்கள்

நீதிபதி பி.சி.கோஸ்-ஐ லோக் பால் பதவிக்கு நியமிக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உத்தரவில், அந்த அமைப்புக்கான பிற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி லோக் பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள்:

நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பிரதீப் குமார் மொஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய்குமார் திரிபாதி.

நீதித்துறை சாராத உறுப்பினர்கள்

தினேஷ்குமார் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மஹேந்தர் சிங், இந்திரஜீத் பிரசாத் கௌதம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசிக் காலத்தில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் பால் அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய அமைப்பில் பங்கேற்று பிறகு வெளியே வந்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கி டெல்லி மாநில ஆட்சியையும் கைப்பற்றினர்.

ஆனால், பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் லோக் பால் நியமிக்கப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :