You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அனில் அம்பானி சிறைக்கு செல்வதைத் தவிர்க்க பணம் தந்து உதவிய அண்ணன் முகேஷ் அம்பானி
தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி.
தொலைத் தொடர்பு பெரு நிறுவனமான எரிக்சனோடு, ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தம் ஒன்று முறிந்த பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டை அனில் அம்பானி எதிர்கொண்டார்.
எரிக்சன் நிறுவனத்திற்கு 5.5 பில்லியன் ரூபாய் வழங்க வேண்டியதை நீதிமன்ற காலக்கெடு முடிவதற்கு முன்னால், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை.
தனது சகோதரர் அனில் அம்பானிக்கு முகேஷ் அம்பானி உதவியிருப்பது இவ்விரு சகோதரர்களுக்கு இடையில் நிலவி வந்த நீண்டகால சண்டைகளின் புதிய திருப்பமாக வந்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டபடி கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதிக்குள் எரிக்சன் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தவறிவிட்டது.
அனில் அம்பானி நீதிமன்ற ஆணையை அவமதித்த குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், இன்னும் நான்கு வாரங்களில் பணத்தை செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், சிறை தண்டணை பெற வேண்டியிருக்கும் என்று கூறிவிட்டது.
கடந்த திங்கள்கிழமை கடன் செலுத்தப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்தது.
என்னுடைய மரியாதைக்குரிய அண்ணன் முகேஷுக்கும், அண்ணி நிட்டாவுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். என்னுடைய இந்த இக்கட்டான நிலையில், சரியான நேரத்தில் உதவியிருப்பதன் மூலம் எமது குடும்ப மதிப்பீடுகளுக்கு உண்மையாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் காட்டியுள்ளனர்" என்று அனில் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி பெரும் தொழில் அதிபராக மாறிய முகேஷ், அணில் சகோதரர்களின் தந்தை திருபாய் அம்பானி, 2002ம் ஆண்டு உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டார். இதையடுத்து, அண்ணன் - தம்பி இடையே தந்தையின் தொழில்களை நடத்துவது தொடர்பாக சண்டை ஏற்பட்டது. நீண்டகாலமாக இவர்களிடையே உறவு கெட்டுக்கிடந்தது.
2005ம் ஆண்டு ஏழு மாத கால குடும்ப சண்டைக்கு பின்னர் ரிலையன்ஸ் நிறுவனத்தை அண்ணன் தம்பி இருவரும் பங்கு பிரித்துக்கொண்டனர்.
எரிவாயு ஆதாயங்கள் தொடர்பாக கடந்த காலத்தில் நீதிமன்றப் படியேறி இருவரும் சொத்துத் தகராறில் ஈடுபட்டனர்.
முகேஷ் அம்பானி 54 பில்லியன் டாலருக்கு மேலான மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக புளூம்பர்க் தெரிவிக்கிறது.
பெட்ரோலிய நிறுவனம் முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரை நடத்திவரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் இந்தியாவின் பெரும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
இதற்கு மாறாக, அணில் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 300 மில்லியன் டாலர் மட்டுமே என்று புளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கு நடைபெற்ற மிகவும் ஆடம்பரமான திருமணம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது. அமெரிக்க பாடகர் பயோன்ஸின் இசை நிகழ்ச்சி அப்போது நடத்தப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்