You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக தேர்தல் அறிக்கை - 15 முக்கிய அம்சங்கள்
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
1. மக்கள் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் கேபிள்/DTH கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்.
2. வருமான வரி விலக்கு வரம்பை 8 லட்சமாக உயர்த்த வேண்டும். நிலையான கழிவை ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும்
3. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றை மேம்படுத்தவும், தேம்ஸ் நதி போல கூவம் நதியில் போக்குவரத்து மற்றும் மகிழ்ச்சி சுற்றுலா மையம் அமைத்து அழகுபடுத்த மத்திய அரசிடம் நிதி ஒதுக்க வலியுறுத்துவோம்..
4. உச்சநீதிமன்றத்தின் மண்டல அளவினை கிளை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென மத்திய அரசிடம் கேட்டுக்கொள்வோம்.
5. சேலத்துக்கு இரவு நேர விமான சேவை ஏற்படுத்த மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.
6. அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் - மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூபாய் 1,500 வழங்கும் திட்டம்
7. இளைஞர்கள், இளம்பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்
8. பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்தல், சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கைவிட மத்திய அரசிடம் கேட்டு கொள்ளப்படும்.
9. கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவது, நீட் தேர்வுக்கு விலக்கு, உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
10. தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழு அளவில் கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
11. பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதை அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
12. இந்திய நதி நீர் வழித்தடங்கள் அனைத்தும் தேசிய மயமாக்கப்படவேண்டும் என அதிமுக வலியுறுத்தும்.
13. மத்திய அரசு அதன் வரி வருவாயில் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தும்.
14. ஈழ தமிழருக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிய பாதுகாப்பு கிடைத்திடவும், அவர் தம் உடமைகளுக்கும் உரிமைகளுக்கும் மத சுதந்திரத்தை பாதுகாக்கவும், மொழி உரிமைகள் உறுதி செய்யப்படவும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவும் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என அதிமுக மத்திய அரசிடம் எடுத்துரைத்து தமிழர் நலன் காக்கும் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும்.
15. நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக மாணவர்கள் கல்விக் கடனை திரும்ப செலுத்த இயலாமல் தவித்து வருவதால் மாணவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் இதர வங்கிகள் மூலம் பெற்ற கல்விக்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
அதிமுக தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அறிவித்தது.
அதிமுகவில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் பி.எச். மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார். 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்