You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணமதிப்பிழப்பின்போது ஆயிரக்கணக்கானோர் இறந்த செய்தி வெளியாகவில்லை என பிபிசி கூறியதா? #BBCFactCheck
- எழுதியவர், உண்மை கண்டறியும் குழு
- பதவி, பிபிசி
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடைமுறை படுத்தப்பட்டபோது, ஆயிரக்கணக்கானோர் இறந்த தகவல் வெளியாகவில்லை என்று பிபிசி கூறியதாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அரசு 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இந்திய ரூபாய்த் தாள்களில் அதிக மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது.
வாட்ஸ்-ஆப் பயனாளிகளிடம் இருந்து பல திரைக்காட்சி படங்களை (ஸ்கிரீன்ஷாட்) பிபிசி பெற்றுள்ளது. ஆனால், அவற்றில் உள்ள செய்தி முற்றிலும் தவறானது.
இந்திய ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக பிபிசி எந்த செய்தியும் வெளியிடவில்லை.
பண மதிப்பிழப்பு தோல்வியடைந்த பின்னர் மக்கள் ஏன் கோபமடையவில்லை?
பண மதிப்பிழப்பு தோல்வியடைந்த பின்னர் மக்கள் ஏன் கோபமடையவில்லை? என்பதை புரிந்துகொள்ள பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரவ்லெட் பகுப்பாய்வு ஒன்றை மேற்கொண்டார்.
அதில் ஜஸ்டின் ரவ்லெட் இவ்வாறு எழுதினார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத நாணயம் செல்லாது என்று சற்றும் எதிர்பாராத அறிவிப்புக்கு பின்னர், மக்கள் மிகவும் கோபமடைந்தனர்.
நாட்டிலுள்ள 120 கோடி மக்களும் வங்கிகளில் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஒரு கட்டத்தில் உண்டானதுபோல இருந்தது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பலரது வாழ்க்கை சீர்குலைந்தது. உணவுக்குக்கூட பல மக்களிடம் பணம் இருக்கவில்லை.
அப்போது ஏற்பட்ட பணப்புழக்க பற்றாகுறையால் ஒரு கோடி பேர் மிகவும் அல்லல்பட்டதாக நம்பப்படுகிறது.
பண மதிப்பிழப்புக்கு பின்னர், பணப்புழக்கம் மீட்டெடுக்கப்பட்ட பின்னர் மக்கள் அரசுக்கு எதிராக குரலெழுப்புவர் என்ற பொதுவான பார்வை இருந்தது.
இந்த திட்டம் தோல்வியடைந்த பின்னரும், மக்கள் ஏன் கோபமாக இல்லை?
அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களின் விவரங்களை சாதாரண மனிதர் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பது இதற்கான காரணங்களில் ஒன்று.
பணக்கார வர்க்கத்தினரிடம் இருந்து, கறுப்பு பணத்தை மீட்டெடுப்பதற்குரிய நடவடிக்கை இதுவென நம்பச் செய்து ஏழை மக்களின் ஆதரவை பெற பிரதமர் நரேந்திர மோதியின் அரசு முயற்சித்தது இன்னொரு காரணம்.
இந்திய ரிசர்வ வங்கியின் தரவுகள் இந்த கொள்கை தோல்வியாக முடிந்துள்ளதை காட்டுகிறது. ஆனால், நரேந்திர மோதி கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது.
"கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கே இந்த நடவடிக்கை," என்று தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த கொள்கை அறிவிக்கப்பட்டு பல வாரங்களுக்கு பின்னர், வங்கிகளிடம் வந்தடையும் பழைய ரூபாய் தாள்கள் அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், அரசு புதிய கருத்தை கூற தொடங்கியது.
"டிஜிட்டல் இந்தியாவை" உருவாக்கவே இந்த முயற்சி என்று பின்னர் இந்திய அரசு கூறியது.
நன்மைகளா அல்லது இழப்புகளா?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி நடத்திய ஐந்தாண்டு ஆட்சியின் நிறைவிலும், பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு, மோதியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நன்மைகள் மற்றும் சேதங்களையும் மதிப்பிட்டுள்ளது. இதில், கலவையான முடிவுகளை இந்த குழு கண்டறிந்தது.
இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை வரி வசூல் செய்வதை மேம்படுத்த உதவியுள்ளது.
பண மதிப்பிழப்பு டிஜிட்டல் பண பரிவாத்தனைகளை மேம்படுத்தியுள்ளது. ஆனால், இவ்வாறு பரிமாற்றம் செய்யப்படும் பணத்தொகையில் இப்போது வீழச்சி காணப்படுகிறது. .
2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 99 சதவீத செல்லாத பழைய ரூபாய் தாள்கள் வங்கிகளிடம் திரும்பி வந்துவிட்டன. இதனால், மக்களிடம் கறுப்பு பணம் இருக்கிறது என்று கூறுவது சரியானதல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.
இதற்கு மாறாக மக்களிடம் கறுப்பு பணம் இருந்தாலும், அதனை சட்டபூர்வ சொத்தாக மாற்றுகின்ற வழிகளை அவர்கள் கண்டறிந்திருந்தனர்.
கள்ளப் பணப் புழக்கத்தை பண மதிப்பிழப்பு ஒழித்ததா?
ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி, கள்ளப் பணப் புழக்கம் ஒழிக்கப்படவில்லை.
இந்தியா புதிதாக வெளியிட்ட 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களை கள்ளத் தனமாகத் தாயரிப்பது மிகவும் கடினம் என்று அரசு கூறியது.
ஆனால், "ஸ்டேட் பேங் ஆப் இந்தியா" வங்கியின் பொருளாதார நிபுணர்களின்படி, இந்த புதிய ரூபாய் தாள்களை கள்ளத் தனமாகத் தாயரிக்க முடியும். புதிதாக வெளியான ரூபாய் தாள்கள் போலியாக தயாரிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
பண மதிப்பிழப்புக்கு பின்னர், இந்திய பொருளாதாரம் டிஜிட்டல்மயமானது என்று இன்னொரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இதற்கு உறுதியான எந்தவொரு சான்றையும் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கவில்லை.
பணமில்லாத பரிவர்த்தனையில் இந்திய மொதுவான வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், 2016ம் ஆண்டு இறுதியில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், மிக பெரிய வளர்ச்சி காணப்பட்டது.
ஆனால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பிவிட்டது.
சிறந்த தொழில்நுட்ப உள்கட்டமைப்பால் பணமில்லாத பரிவர்த்தனைகளில் வளர்ச்சி ஏற்படுமே ஒழிய, பண மதிப்பிழப்பால் அல்ல என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னரும், டிஜிட்டல் மூலம் அல்லாமல் பணமாகவே மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் குறைந்தபாடில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்