ரகுராம் ராஜன் - ‘முதலாளித்துவத்திற்கு தீவிர அச்சுறுத்தல்’

பட மூலாதாரம், AFP
பொதுமக்கள் இடையே அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வுகளால், முதலாளித்துவம் பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக எச்சரிக்கிறார், இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.
பிபிசி ரேடியோ 4- நிகழ்ச்சியில் பேசிய ராஜன், பொருளாதார சமத்துவமின்மை ஏற்படும்போது, ஏராளமானோர் முதலாளித்துவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவர் என தெரிவித்தார்.
பொருளாதாரத்தை கருத்தில் கொண்டால், அரசுகள், சமூக சமத்துவமின்மையை புறக்கணிக்கலாகாது என்றார். இந்தியாவின் மத்திய வங்கியை வழிநடத்தியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராகவும் திரு.ராஜன் இருந்துள்ளார்.
மார்க் கார்னேவிற்கு பிறகு இங்கிலாந்து வங்கியின் ஆளுனராகும் தகுதி உடையவர் திரு.ராஜன் என சிலர் கருதினர்.
முதலாளித்துவம் பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாகவும், ஏனென்றால், பெரும்பான்மையோருக்கு சமவாய்ப்புகள் கொடுக்கபடுவதில்லை என்றும், அவ்வாறு சம்பவிக்கும்போது, ஏராளமானோர் முதலாளித்துவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபடுவர் என்று தாம் கருதுவதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார். முன்பெல்லாம், சாதாரண கல்வி கற்றோருக்கும் கூட ஒரு நடுத்தர வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருந்ததாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
ஆனால், 2008-ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் அதன் கடுமையான விளைவுகளால், இந்த நிலை மாறிவிட்டது. "இப்போது நீங்கள் உண்மையில் வெற்றி பெற விரும்பினால், உங்களுக்கு நல்ல கல்வி தேவை" என்று ரேடியோ 4-கிடம் அவர் கூறினார்.
"துரதிஷ்டவசமாக, உலக வர்த்தகத்தினாலும், உலக தகவல்களின் சக்திகளாலும் பாதிக்கப்படும் சமூகங்கள், மோசமாகி வரும் பள்ளிகளையும், உயர்ந்து வரும் குற்றங்களையும், உயர்ந்து வரும் சமூக சீர்கேடுகளையும் கொண்டுள்ள சமூகங்களாக மாறி உள்ளதால், உலகப் பொருளாதாரத்திற்கு தங்கள் உறுப்பினர்களை தயார் செய்ய முடிவதில்லை."

பட மூலாதாரம், PUNIT PARANJPE
சமநிலையை மீட்டெடுப்பது.
சமமான வாய்ப்புகளை வழங்காததால்தான் முதலாளித்துவம் செயலிழக்கிறது என்று ரகுராம் ராஜன் நம்புகிறார்.
'சம வாய்ப்பு வழங்கப்படாததால் வீழ்ச்சியுறும் மக்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர்', என்றும் அவர் கூறினார்.
"உற்பத்தியின் அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் பழகும் போது, எதேச்சதிகார ஆட்சிகள் எழும். அச்சமயம் ஒரு சமநிலை தேவைப்படும் போது, வாய்ப்பினை மேம்படுத்த மட்டுமே முடியுமே தவிர, தேர்வு செய்ய முடியாது" என்று கூறுகிறார்.
உலகப் பொருளாதாரம் பற்றி விவாதிக்கையில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் தற்போதைய பேராசிரியரான ராஜன், பொருட்களின் வர்த்தகத்தில் நிர்ணயிக்கப்படும் வரம்புகளின் சவால்களை சுட்டிக்காட்டினார்.
"மற்றவர்களின் பொருட்களுக்கு நாம் தடை விதிப்போமேயானால், நம் பொருட்களுக்கு அவர்களும் தடை விதிப்பார்கள். இப்படியிருக்க, எல்லைகளை கடந்து நாம் பொருட்களை அனுப்பவேண்டிய நேரத்தில் எவ்வாறு அனுப்பு முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












