பாலகோட் தாக்குதலில் எவ்வளவு தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என தெரியாது - இந்திய விமானப்படை தளபதி பேட்டி

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை பற்றி தங்களால் ஏதும் கூற முடியாது என்றும், அரசாங்கம் மட்டுமே அதுகுறித்துச் சொல்ல முடியும் என்றும் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் தநோயா தெரிவித்தார்.
அதே நேரத்தில், விங் கமாண்டர் அபிநந்தன், உடற்தகுதி பரிசோதனை முடிவை பொறுத்தே அவர் மீண்டும் பணிக்கு திரும்புவரா, இல்லையா என்பது குறித்து தெரிய வரும் என அவர் தெரிவித்தார்.
கோயம்புத்தூரின் சூலூரிலுள்ள இந்திய விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய விமானப்படையின் ஏர் சீப் மார்ஷல் தநோயா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன. எந்த உயிரிழப்பும் இல்லை என்று பாகிஸ்தான் தரப்பும் கூறி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்த கேள்விகலுக்கு தநோயா பதிலளித்தார்.

"நாங்கள் திட்டமிட்ட இலக்கை சரியாக தாக்கி அழித்தோம் என்பதை உறுதிசெய்கிறோம். ஆனால், அந்த தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்பதை கணக்கிடுவது எங்களது வேலை அல்ல; அதை அரசுதான் தெரிவிக்க வேண்டும்" என்று ஏர் சீப் மார்ஷல் தநோயா கூறியுள்ளார்.
"இந்திய வெளியுறவுச் செயலர் தனது பேட்டியின்போது, இலக்கு குறித்து தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இலக்கைத் தாக்க முடிவு செய்தால், அதைச் செய்வோம். இல்லாவிட்டால் ஏன் பாகிஸ்தான் எதிர்வினையாற்றுகிறது? வெட்ட வெளியில் குண்டுகளைப்போட்டிருந்தால் அவர்கள் ஏன் எதிர்வினையாற்ற வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்திய விமானப்படையிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சாதித்து இருக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "பிரதமரின் கருத்து குறித்து என்னால் எதுவும் கூற முடியாது" என்று பதிலளித்தார்.
அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவாரா?
பாகிஸ்தான் வசமிடமிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவாரா என்று தநோயாவிடம் கேட்டபோது, "அபிநந்தனுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும், தக்க உடற்தகுதி பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே அவர் மீண்டும் பணிக்கு திரும்புவாரா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க முடியும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் உடனடியாக உடல் தகுதி பெற்றால், அதே பிரிவுக்கு மீண்டும் பணிக்குத் திரும்புவார். ஆனால், போர் விமானத்தை மீண்டும் இயக்குவாரா என்பது உடல் தகுதியைப் பொருத்தே இருக்கும் என்றார்.
ஆனால், விமானத்தில் இருந்து குதிப்பது என்பது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனக்கும் தெரியும். நானும் அதுபோல குதித்தவன்தான். ஏனென்றால், இன்னொரு முறை விமானத்தில் இருந்து குதிக்க வேண்டிய நிலை வந்தால், வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம் என தநோயா தெரிவித்தார்.
பழைய மிராஜ் விமானம் பயன்படுத்தப்பட்டதா?
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி நடந்த விமானப்படை தாக்குதலின்போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் ஓட்டி சென்ற மிராஜ்-2000 வகை விமானம் பாகிஸ்தான் நிலப்பரப்பில் விழுந்து, அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார்.
இருப்பினும், நல்லெண்ணத்தின் அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் இம்ரான் கான் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த மார்ச் 1ஆம் தேதி அபிநந்தன் வாகா-அட்டாரி எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அதையடுத்து, கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பழமையான மிராஜ்-2000 வகை விமானத்தை இந்திய விமானப்படை பயன்படுத்துவது ஏன் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஏர் சீப் மார்ஷல் தநோயா, "அபிநந்தன் பயன்படுத்திய மிராஜ்-2000 ரக போர் விமானம் பழையது அல்ல. சமீபத்திய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்திய விமானப்படையிலுள்ள அனைத்து பழைய விமானங்களும் திரும்பப்பெறப்பட்டு, அதிநவீன விமானங்களை படையில் சேர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
மிக்-21 பைசன் விமானம், திட்டமிட்ட தாக்குதல்களுக்குத்தான் பயன்படுத்தப்பட்டதாகவும், முதல் தாக்குதலுக்கு அந்த விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். எதிர்மறையான சூழ்நிலைகளின்போது, அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரஃபேல் போர் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படையிடல் சேர்க்கப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எப்-16 விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா கூறும் நிலையில், பாகிஸ்தான் அதை மறுத்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து அந்த விமானத்தை வாங்கியபோது மேற்கொண்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிவிட்டதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அமெரிக்கா- பாகிஸ்தான் இடையில் இறுதி ஒப்பந்தம் எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை, ஆனால், அவ்வாறு இருந்தால் அவர்கள் ஒப்பந்ததை மீறியிருப்பதாகத்தான் அர்த்தம். ஏனெனில், அவர்கள் ஒரு எப்-16 ரக விமானத்தை இழந்திருக்கிறார்கள்" என்றார்.
ஜம்மு & காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவப்படையினரின் வாகனத்தின் மீது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 40 துணை ராணுவப் படையினர் உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய விமானப்படை விமானங்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்களை குண்டுவீசி அழித்ததாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இந்த தாக்குதலில் எவரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசும், அந்நாட்டு ஊடகங்களும் தெரிவித்து வரும் நிலையில், இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசுத்தரப்பை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
மேலும், பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா, குஜராத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது 250 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












