You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரபேல் சாமுவேல்: ''என் சம்மதம் இல்லாமல் என்னை எப்படி பெற்றெடுக்கலாம்?'' - அதிர வைக்கும் வாலிபரின் கேள்வி
தினகரன் : ''என் சம்மதம் இல்லாமல் என்னை எப்படி பெற்றெடுக்கலாம்?'' - அதிர வைக்கும் வாலிபரின் கேள்வி
மும்பையைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ரபேல் சாமுவேல் உயிர் ஜனனத்துக்கு எதிரான கொள்கையுடையவர் என கூறப்படுகிறது. ஒரு உயிர் பிறப்பது புவிக்கு பாரம் என கூறும் இந்நபர் தனது பெற்றோர் தன்னை பெற்றெடுத்தது குற்றம் என்கிறார். இதற்காக நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாகவும் அறிவித்ததாக தினகரன் நாளிதழ் கூறுகிறது.
ரபேல் சாமுவேல் தனது பேஸ்புக் பதிவில், '' நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். ஆனால் அவர்கள் தங்கள் சுகத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும்தான் என்னை பெற்றெடுத்துள்ளனர். யாரோ ஒருவர் சுகம் அனுபவிக்க நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைத்து சம்பாதிக்க வேண்டும்? இதனால் எனது சம்மதம் இல்லாமல் என்னை பெற்றெடுத்த எனது பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்'' என குறிப்பிட்டுள்ளதாக அந்நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
'' இந்த பூமியில் இனப்பெருக்கம் என்பதே நாசிசவாதம். ஏன் குழந்தை பெற்றுக்கொள்கிறீர்கள் என யாரிடமாவது கேளுங்கள், அவர்களது பதில் ' எங்களுக்கு தேவை அதனால் பெற்றுக்கொள்கிறோம்' என்பதாகத் தான் இருக்கும்'' என பேட்டியளித்துள்ளார்.
ரபேல் சாமுவேலின் தந்தை தனது பேஸ்புக் பதிவில் மகனின் துணிச்சலை பாராட்டுவதாகவும், தனது மகனின் சம்மதம் பெற்று அவரை எப்படி பெத்தெடுக்க முடியும் என நீதிமன்றத்தில் அவர் தெளிவாக கூறினால், எனது தவறை ஒப்புக்கொள்கிறேன்'' என எழுதியுள்ளதாக அந்நாளிதழ் கூறுகிறது.
தினமணி - பாஜகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் பத்திரிகையாளர்ளை சந்தித்த சுதீஷ், விஜயகாந்த் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும், இம்மாத இறுதியில் இந்தியா திரும்புவார் என்றும் கூறினார்.
மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் நட்பு அடிப்படையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த மக்களவை தேர்தலை போலவே இதிலும் 14 தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை எனத் தெரிவிக்க அந்நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
தினத்தந்தி : திமுக, அமமுக தவிர எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்ப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்
தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் மட்டும்தான் எங்களின் எதிரி. எனவே இவர்களை தவிர மற்ற கட்சிகள் தாராளமாக எங்களுடன் வந்து கூட்டணி குறித்து பேசலாம். இதில் அ.தி.மு.க.வுக்கு ஆட்சேபனை இல்லை.
அ.தி.மு.க. தேர்தல் விண்ணப்ப மனுவை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வாங்கிச் சென்றதை, குடும்ப ஆதிக்கம் என்ற ரீதியில் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியதாக கூறுகிறீர்கள். அவர் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பணியாற்றுபவர்தான். விண்ணப்பத்தை அவர் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. விருப்ப மனுவை கட்சியில் உள்ள எவரும் வாங்கலாம் என நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
தினமலர் - கைப்பேசி, திறன்பேசி திருட்டை தடுக்கும் செயலி சென்னையில் அறிமுகம்.
சென்னையில் நடக்கும் குற்றங்களில் கைப்பேசி, திறன்பேசி பறிப்பு சம்பவங்கள் அதிகளவு நடக்கின்றன. மறுவிற்பனை கடைகளில் மொபைல் போன் வாங்கும்போது அது திருட்டு மொபைலா என்பதை கண்டறியாக டிஜிகாப் என செயலியை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி வாயிலாக தொலைந்து போன மற்றும் திருடு போன இருசக்கர வாகனங்கள் குறித்தும் அவை காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அருகில் உள்ள காவல் நிலையம், போலீசாரின் மொபைல் எண், போக்குவரத்து நெரிசல் தொடர்பான எச்சரிக்கை மற்றும் போலீசாரின் அறிவிப்புகள் உள்ளிட்டவற்றையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :