'சபரிமலையில் பெண்கள் நுழைய ஆட்சேபம் இல்லை' - மாற்றிக் கூறிய தேவசம் போர்டு

சபரிமலையில் மாதவிடாய் வயதுள்ள பெண்கள் நுழைய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர், அந்த தேதி அறிவிக்கப்படும்.

தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மொத்தமுள்ள 65 மனுக்களையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த விசாரணையின் முக்கிய திருப்பமாக, சபரிமலை ஐயப்பன் கடவுள் திருமணமாகாதவர் என்பது, அரசியல் சாசனத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க மத அம்சம் என்று கூறி வந்த, இந்த கோயிலை நிர்வகித்து வருகின்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு, உயிரியல் கூறுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு பாகுபாடு காட்டக்கூடாது என்று அந்த அமர்விடம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், எல்லா வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய பக்தர்கள், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், சபரிமலைக்கு செல்ல முற்பட்ட பல பெண்களை தடுத்து வந்தனர்.

இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்துவத்தில் உறுதியாக இருப்பதாக கேரள மாநில அரசு கூறிவிட்டது. சபரிமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அது கூறியது.

இறுதியில், 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை சுமார் 03:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானத்தை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற இந்த இரண்டு பெண்களும் பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 50 வயதுக்கும் குறைவான பெண்கள் இருவர் சென்றதைத் தொடர்ந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் இடதுசாரி அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக தொடுக்கப்பட்ட சீராய்வு மனுக்கள் மற்றும் பிற புகார்களை விசாரணைக்கு எடுத்துகொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

சபரிமலை சென்ற பிந்து மற்றும் கனகதுர்கா: 'அவர்கள் எங்களை கொலைகூட செய்யலாம்; ஆனாலும் பயமில்லை'

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :