You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருச்சபைகளில் பாலியல் அடிமைகளாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் - போப் ஒப்புதல் - மற்றும் பிற செய்திகள்
திருச்சபைகளில் பாலியல் அடிமையாக கன்னியாஸ்திரிகள் நடத்தப்படுகின்றனர் - போப் பிரான்சிஸ் பகிரங்க ஒப்புதல்
ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படும் பிரச்னை இருக்கிறது அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என போப் பிரான்சிஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த கொடுமைகள் தொடர்ந்து நடப்பதாகவும் அதனை நிறுத்துவதற்கான பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மதகுருக்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை தாம் அறிந்துள்ளதாக போப் பிரான்ஸ் ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.
சில மதகுருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த துஷ்பிரயோகத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து இடையே டி20 தொடர் இன்று ஆரம்பம்
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று வெலிங்டன் மைதானத்தில் துவங்குகிறது.
ஒருநாள் போட்டிகளை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணிக்கு போட்டி துவங்கும்.
இந்திய அணியை பொருத்தவரையில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்துவார். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனிக்கும் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டிம் சீஃபர்ட் களமிறங்குகிறார். கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியை வழிநடத்துவார்.
தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்ற மம்தா
கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வாபஸ் பெற்றார்.
தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை" என்றார்.
''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பானர்ஜி கூறினார்.
2100 -ல் இமயமலை பனிமலைகளில் மூன்றில் ஒரு பங்கு இருக்காது - அதிரவைக்கும் ஆய்வு
இந்து குஷ் மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ள பனிமலைகளுக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு உடனடியாக நிறுத்தப்படவில்லையினில் இந்த பெரும் மலைகளில் மூன்றில் இரண்டு பங்கு பனி மலைகள் காணாமல் போகக்கூடும்.
உலகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் கட்டுக்குள் வைத்தாலும் கூட குறைந்தது ஒரு பங்கு மலை பகுதிகள் இருக்காது என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சின்னத்தம்பியாக நான் - எனது நிலைக்கு யார் காரணம்?
தனது இருப்பிடத்தையும், உணவையும் தேடி அலைந்து கொண்டிருக்கும் முயற்சியில் மனிதர்களால் மீண்டும் மீண்டும் துரத்தி அடிக்கப்படும் ஒரு காட்டு யானைதான் இந்த சின்னதம்பி.
இந்த சின்னதம்பி யானை காட்டுப் பகுதியைவிட்டு விவசாயப் பகுதிகளில் இறங்கி விவசாயிகளின் வாழ்வாரதாரத்தை சேதம் செய்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே, சின்னதம்பி மற்றும் விநாயகன் என்ற யானையை பிடித்து காட்டுப் பகுதிக்குள் விட வனத்துறை முடிவு செய்தனர். விநாயகன் என்ற யானையை பிடித்து முதுமலை பகுதியிலும், சின்னதம்பியை பிடித்து ஆனைமலை பகுதிகளிலும் கொண்டு விட்டனர் வனத்துறையினர்.
விநாயகன் முதுமலையிலிருந்து திரும்பி வரவில்லை அது அந்த சூழலுக்கு பழகி கொண்டது.
காடுகளில் ஒடி திரிந்த சின்னதம்பி, துரதிஷ்டவசமாக விளைநிலங்களின் பயிருக்கு பழக்கப்பட்டு போனதால் மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்கே வருகிறது.
ஆனால் அதற்காக சின்னதம்பி எந்த ஒரு நபருக்கும் எந்த ஒரு தீங்கையும் இழைக்கவில்லை.
சின்னதம்பி விஷயத்தில் பல தவறான புரிதல்கள் உள்ளன என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் ஓசை காளிதாஸ்.
மேலும் படிக்க - 'சின்னதம்பியாகிய நான்' - இந்நிலைக்கு யார் காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :