You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஞ்சாப் பெண் ஆணவக் கொலை புகார்: கனடாவில் இருந்த தாய் இந்தியாவுக்கு நாடு கடத்தல்
ஜஸ்விந்தர் சித்து இந்தியாவில் கொலை செய்யப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது தாயும், மாமாவும் விசாரணைக்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கனட நாட்டை சேர்ந்த மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள், வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலுள்ள ஒரு ரிக்ஷா ஓட்டுநரை ஜஸ்விந்தர் திருமணம் செய்ததால், அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாக இவர்கள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த இந்த கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தங்கள் மீதான குற்றச்சாட்டை இருவரும் மறுத்துள்ளனர்.
ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் மற்றும் இந்திய அதிகாரிகளால் நடத்தப்பட்ட சர்வதேச புலனாய்வை தொடர்ந்து, நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் 2012ம் ஆண்டு மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபிலுள்ள நீதிமன்றம் ஒன்று மல்கிட் கவுர் சித்துவையும், சுர்ஜித்சிங் பதேஷாவையும் வெள்ளிகிழமை காவலில் வைக்க உத்தரவிட்டது என்று காவல்துறை பிபிசி பஞ்சாபி சேவையிடம் தெரிவித்துள்ளது. முதியவர்களாக இருக்கின்ற இவர்கள் இருவரும் பல்வேறு உடல் உபாதைகளால் அல்லல்படுகின்றனர்.
"இவர்கள் தங்களின் மீதி வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென நான் விரும்பவில்லை" என்று ஜஸ்விந்தரின் கணவர் சுக்விந்தர் மிது சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்துள்ள காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கொலையை செய்ததாக இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் அடங்குகின்றனர்.
பணத்திற்காக கொலை செய்த இரண்டு பேருக்கும், அவர்களை இந்த குடும்பத்தோடு தொடர்பு ஏற்படுத்தி கொடுத்தவருமான காவல்துறை அதிகாரிக்கும் (மூன்று பேர்) ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டு, ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
ஜாஸி என்று அறியப்பட்ட ஜஸ்விந்தர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்ந்து வந்தார். இந்தியாவில் பயணம் மேற்கொண்டபோது, சுக்விந்தர் மிது சிங்கை சந்தித்தார். 1999ம் ஆண்டு அவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்ட பின்னர் ஜஸ்விந்தர் கனடா திரும்பினார்.
அவரது கணவரோடு சேர்ந்து வாழ 2000ம் ஆண்டு ஜஸ்விந்தர் இந்தியா திரும்பினார். ரகசிய திருமணத்தை அறிந்து கொண்ட அவரது குடும்பத்தினரின் பல மாத உரிமை மீறல் மற்றும் கொடுமைகளில் இருந்து அவர் தப்பி வந்ததாக கூறப்பட்டது.
ஆனால், 2000ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி இவர்கள் ஸ்கூட்டரில் செல்லும்போது கும்பல் ஒன்று திடீரென இவர்களை தாக்கியது.
சுக்விந்தர் மிது சிங் மிக மோசமாக தாக்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் சாக்கடை ஒன்றில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஜஸ்விந்தரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த அதிகாரி சுவாரான் கன்ணா பிபிசி பஞ்சாபி சேவையிடம் கருத்து தெரிவிக்கையில், "தன்னையும் தனது கணவரையும் அவரது குடும்பம் கொல்லக்கூடும் என்று ஜஸ்விந்தர் காவல்துறையினரிடம் சமர்ப்பித்திருந்த ஆணை பத்திரம் (அஃபிடவிட்) முக்கிய சான்றாகியது" என்று கூறினார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணத்திற்காக கொலை செய்தோருக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட 300 பக்க விவரங்களை திரட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு மல்கிட் கவுர் சித்துவையும், சுர்ஜித்சிங் பதேஷாயையும் நாடு கடத்த வேண்டுமென பிரிட்டிஷ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆணையிட்டார்.
2017ம் ஆண்டு அவர்கள் டெல்லிக்கு அனுப்பப்பட இருந்தனர். ஆனால், இந்திய சிறையில் அவர்கள் வன்முறை, சித்ரவதை அல்லது புறக்கணிப்பு ஆகியற்றிற்கு ஆளாகலாம் என்ற கவலையால் அதற்கு ஒரு நீதிமன்றம் தடைவிதித்தது.
கடந்த மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று, இவர்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென்பதை உறுதி செய்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்