You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேத்தியை ஆணவக்கொலை செய்த மகன், மருமகள்: தண்டனை வாங்கித் தந்த தாத்தா
- எழுதியவர், சட் சிங்
- பதவி, செய்தியாளர் (பிபிசி பஞ்சாபிக்காக)
சோனிபட்டில் உள்ள மடோனட் எனும் கிராமத்தைச் சேர்ந்த 78 வயது முதியவர் தஜ்ஜா ராம். தனது பேத்தியை கொன்ற குடும்பத்தினர் ஐந்து பேருக்கு கடந்த வியாழனன்று சோனிபட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த நிலையில் தஜ்ஜா ராம் கண்களில் வெறுமை படர்ந்திருக்கிறது.
கட்டிலில் தனியாளாக படுத்திருக்கும் தஜ்ஜா ராமைச் சுற்றி பாத்திரங்களும், உடைமைகளும் சிதறி கிடக்கின்றன. வெள்ளை குர்தாவும், வேட்டியும் அணிந்திருக்கும் தஜ்ஜா ராமிடம் கலவையான உணர்வுகள் குவிந்திருக்கின்றன. நீதிமன்றத்தின் உத்தரவு அவருக்கு சாதகமானதா அல்லது சாதகமற்றதாக எடுத்துக் கொள்வதா என்பதில் இரண்டு தரப்பிலும் அவர் தோல்வியுற்றவராகவே நிற்கிறார்.
கொஹானாவில் உள்ள அரசு கலை கல்லூரியில் இளங்கலை படித்துக்கொண்டிருந்த ஸ்வீட்டி சுறா, 2016-ம் ஆண்டு தான் விரும்பிய ஓர் ஆணுடன் துணிந்து வீட்டைவிட்டு ஓடியதால் அவளது பெற்றோர் ஸ்வீட்டியை கொன்று தங்களது வீட்டின் அருகே உள்ள மாட்டுச் சாணி கிடங்குக்குள் வைத்து எரியூட்டினர்.
ஸ்வீட்டியின் தந்தை பால்ராஜ் சுறா ஒரு விவசாயி. தனது மகள் இருப்பிடத்தை அறிந்தபின்னர் நைச்சியமாக பேசி ஜூலை 1, 2016 அன்று தனது வீட்டிற்கு வரவைத்தார். அன்றைய தினம் ஸ்வீட்டியின் மாமா பால்ராஜ், ராஜு ஆகியோரின் உதவியுடன் ஸ்வீட்டியை கொன்றார்.
ஸ்வீட்டி தாத்தா தஜ்ஜா ராமின் புகார் அடிப்படையில் காவல்துறை சம்மந்தப்பட்ட குடும்பத்தில் ஐந்து பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்தது. ஸ்வீட்டியின் அம்மா, அப்பா, இரண்டு மாமா மற்றும் தங்கை ஆகியோரின் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இரு ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு சோனிபட் நீதிமன்றம் ஐந்து பேரையும் குற்றவாளி என அறிவித்து கடந்த ஏப்ரல் 12 அன்று ஆயுள் தண்டனை விதித்தது.
பதின்பருவத்தில் இருக்கும் ஐந்து பேரப்பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தற்போது தஜ்ஜா ராமின் தோளில் விழுந்திருக்கிறது. தஜ்ஜாவின் மனைவி மூன்று தசாப்தங்களுக்கு முன்பே நிம்மோனியா காரணமாக இறந்துவிட்டார்.
2.5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் முதியோர் மாத உதவித்தொகை ரூபாய் 1800 ஆகியவற்றுடன் வாழ்ந்துவரும் தஜ்ஜா ராம் பிபிசியிடம் பேசியபோது தனது வாழ்வில் எதுவும் மீதமில்லை ஆகவே சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.
'' நானும் எனது ஐந்து பேரப் பிள்ளைகளும் இந்த வீட்டில் வசிக்கிறோம். குடும்பத்தின் இளைஞர்கள் அனைவரும் இப்போது சிறையில் இருக்கிறார்கள். இது பெருமையா அவமானமா எனக் கேட்டால் நான் இதனை எப்படிப் புரிந்து கொண்டு எவ்வாறு பதில் சொல்வது என்றே தெரியவில்லை'' என மூலையில் உள்ள ஒற்றை கட்டில் மற்றும் மெத்தையை உற்று நோக்கியவாறு கூறுகிறார் தஜ்ஜா.
ஸ்வீட்டி கொல்லப்பட்ட சம்பவம் நடந்த ஜூலை 1, 2016 தினத்தை நினைவு கூர்ந்த தஜ்ஜா, துரதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் நான் வீட்டில் இல்லை. எனது மகன்கள் ஸ்வீட்டியை கொன்று கிராமத்தில் ஒரு மணிநேரத்துக்குள் எரியூட்டினர் என்றார்.
அந்த கிராமத்தில் இருந்தவர்களும் அன்றைய தினம் ஸ்வீட்டியை அவர்களை பெற்றோர் கொன்று எரியூட்டியபோது அமைதியாக மௌனம் காத்தது அதிர்ச்சி தரும் விஷயம் எனக் கூறுகிறார் 78 வயது முதியவர் தஜ்ஜா.
''அன்றைய தினம் மாலையில்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. இரவு உணவுக்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் பயம் படர்ந்த முகத்துடன் முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மோசமான ஏதோ ஒன்று நடக்கப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்'' என்கிறார் முதியவர்.
வீட்டில் போதிய இடவசதி இல்லையென்பதால், தனது மனைவி இறந்த பின்னர் கிராம கோயிலில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும், தனது பேத்தி கொல்லப்பட்ட சேதி தெரிந்ததும் தனக்கு நெருக்கமான ஒருவர் உதவியுடன் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தந்ததாகவும் தஜ்ஜா ராம் கூறினார்.
''காவல்துறை வரும்வரை எனக்கு மிகச்சரியாக என்ன நடந்தது என்பது தெரியாது. காவல்துறை வந்துதான் ஸ்வீட்டியை எரியூட்டியதற்கான ஆதாரங்களை சேகரித்து. மிகவும் மலர்ச்சியான முகத்துடன் இருக்கும் எனது பேத்தி ஸ்வீட்டிதான் எனது குடும்பத்தில் இருந்து முதன்முதலாக உயர் கல்விக்காக வீட்டை விட்டு வெளியே சென்றவர். எனது குடும்பத்தில் முதன் முறையாக கல்லூரிக்குள் நுழைந்தது பேத்தி ஸ்வீட்டியே'' என விவரிக்கிறார் தஜ்ஜா.
குடும்பத்தினர் மற்றும் சக கிராமவாசிகள் கடுமையாக தஜ்ஜாவை விமர்சித்தனர். குடும்பத்துக்குள் தொடர்ந்து அழுத்தம் அதிகரிக்கவே சமூக வாழ்வில் இருந்து தஜ்ஜா ஒதுங்கினார். தனது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தன்னை அடைத்துக் கொண்டார்.
சம்பவம் நடந்த ஜூலை1, 2016-க்கு பிறகு சோனிபட் நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்காக தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய தனக்கு சம்மன் அனுப்பியபோது மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்ததாக தஜ்ஜா பிபிசியிடம் தெரிவித்தார்.
''சம்பவம் நடந்த முதல் தேதி முதல் எனக்குத் தெரிந்த விஷயத்தையும், எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கேட்டறிந்த விஷயங்களை மட்டுமே நான் கூறினேன். நீதிமன்றமும் காவல்துறையும் தனது பங்கை செய்தது'' என்கிறார் அவர். தனது பேத்தியை கொன்றவர்களுக்கு நீதி வாங்கித்தந்த பெருமையை ஏற்றுக்கொள்ளாத தஜ்ஜா, தனது மகன்கள் மருமகள்கள் மற்றும் ஒரு பேத்தி சிறைக்குள் அடைக்கப்படவேண்டும் என தான் விரும்பியதில்லை என பிபிசியிடம் கூறினார்.
'' எனக்கு வயதாகிவிட்டது மேலும் என்னால் சுறுசுறுப்பாக இயங்கி வாழ்க்கை நடத்த முடியாது. அடுத்த வேலை உணவு கிடைக்குமா இல்லையா என்பதே எனக்குத் தெரியாத நிலையில் எப்படி எனது ஐந்து பேரக் குழந்தைகளையும் வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறேன்'' என கவலையுடன் பேசுகிறார் தஜ்ஜா.
தொடர்ந்து பிபிசியிடம் பேசிய தஜ்ஜா, தனது வங்கி கணக்கில் இரண்டாயிரம் ரூபாயும் மற்றும் மாத உதவித் தொகையாக கிடைக்கக்கூடிய 1800 ரூபாய் மட்டுமே தனது வீட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க தன்னிடம் இருக்கும் சொத்து என்றார்.
பெரும் சோகத்தில் சிக்கியுள்ள இந்த குடும்பத்தின் வீடானது, கிராமத்தின் இதயப் பகுதியில் உள்ளது. யாரும் இந்த வீட்டுக்கு வருவது இல்லை. இவ்வீட்டின் அருகேயுள்ள ஒரு மரத்தடியில் மதியவேளையில் உட்கார்ந்திருக்கும் சில கிராம பெண்கள் இந்த வீட்டின் மீது வெறுப்பு நிறைந்த பார்வையை செலுத்துகிறார்கள்.
இவ்வீட்டைக் கடந்துச் சென்ற கிராமவாசி பிம்லா தேவி, வயது முதிர்ந்த தஜ்ஜாவுக்கு அவரது குடும்பத்தின் ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டதால் இப்போது வாழ்வாதாரத்துக்கு எந்த வழியும் இல்லை. அவர் எப்படி பேரப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறார் என்பதும் தெரியவில்லை அவர்கள் அநேகமாக அனாதையாகவுள்ளனர் என்கிறார்.
தனது சகோதரிகளுக்கு மூத்தவளான காஜல் தேவி தற்போது ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வை எதிர்கொண்டுள்ளார். அவர் தற்போது வீட்டில் இல்லை எனக் கூறினார் பதினோரு வயதான விகாஸ். தஜ்ஜாவின் மூத்த மகன் பால்ராஜின் மகனே விகாஸ். கொல்லப்பட்ட ஸ்வீட்டின் தந்தை பாலராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் வாயிற்கதவு அருகே நின்று கொண்டிருக்கும் விகாஸ் குடும்பத்தினரின் யாராவது ஒருவர் மதிய உணவுக்காக திரும்ப வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அந்தச் சிறுவனின் குடும்பத்தில் ஒருவரும் கடந்த வியாழக் கிழமை தீர்ப்பு வெளியானதில் இருந்து உணவு அருந்தவில்லை. விகாஸ் தந்தை பால்ராஜ், அம்மா சுதேஷ், மாமாக்கள் ராஜா மற்றும் சுரேஷ், மூத்த சகோதரி மீனா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பில் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த கிராமம் சோனிபட்டின் தலைமையத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. நான்காயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலோனோர் தொழில் விவசாயம். குடும்ப விருப்பத் தேர்வுக்கு மாறாக திருமணம் செய்து கொள்வது ஹரியானாவின் இக்கிராமத்தில் விலக்கப்பட்ட ஒன்றாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்