You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு: விராலிமலை ஜல்லிக்கட்டில் புதிய உலக சாதனை; இருவர் உயிரிழப்பு
ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஐந்து மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக இருந்ததாகவும், இன்று விராலிமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று இறுதிவரை 1353 மாடுகள் வாடிவாசலை கடந்து உலக சாதனையை படைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விராலிமலை ஜல்லிக்கட்டு திருவிழாவின் முதல் காளையாக அம்மன் கோயில் காளை அவிழ்த்துவிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் 1800க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500 பேர் களத்தில் இறங்க தகுதி பெற்றிருந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தற்காலிக அறுவை சிகிச்சை அரங்கம், ஸ்கேன், மற்றும் 90 மருத்துவர்கள், 90 மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
இந்தியமருத்துவ வரலாற்றிலே முதன் முறையாக விராலிமலையில் மாபெரும் ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும் இடத்திலேயே அறுவை சிகிச்சை அரங்கம் அமைத்து விராலிமலை அரசு மருத்துவமனை வரலாற்று சாதனை படைத்துள்ளது, இன்றைய நிகழ்வில் இன்னொரு சாதனையாகும்.
இருவர் உயிரிழப்பு
இந்நிலையில் விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த 35 வயதாகும் ராமு என்பவர் பலியானர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதால், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
விராலிமலையில் உலக சாதனைக்காக நிலக்கத்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வாகனங்களில் உள்ள பெரிய திரையில் திரையிடப்பட்டன.
காரை வென்ற காளை
இன்றைய ஜல்லிக்கட்டில் வாடிவாசலுக்குள் 50 வினாடி சுற்றி ராப்பூசல் முருகானந்தம் என்பவரது காளை முதலிடம் பெற்று காரை பரிசாக வென்றது.
தங்கபுராம்பட்டி விக்னேஷ் என்பவரது காளை இரண்டாம் இடம் பெற்று புல்லட்டை பரிசாக பெற்றது.
மூன்றாம் இடம் பிடித்த ஆரியூர் சிவா, நான்காம் இடம் பிடித்த பி.ஆரின் காளை, ஐந்தாம் இடம் பிடித்த எடமலைப்பட்டி தேவா ஆகியோரின் காளைகளுக்கு தலா ஒரு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்