திருச்சியில் விண்வெளி ஆய்வு பயிற்சி மையம் - இஸ்ரோ தலைவர் தகவல்

திருச்சியில் விண்வெளி ஆய்வு மையம் - இஸ்ரோ தலைவர் தகவல்

பட மூலாதாரம், ISRO

தினத்தந்தி: திருச்சியில் விண்வெளி ஆய்வு பயிற்சி மையம் - இஸ்ரோ தலைவர் தகவல்

இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் செயற்கைக்கோள்களை உருவாக்குவது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சிவன், "விண்வெளி துறையில் இளம் விஞ்ஞானிகளையும், ஆய்வுகளையும் ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதில் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு செயற்கை கோள்களை உருவாக்குவது தொடர்பாக ஒரு மாதம் செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.

இதற்காக பெரும்பாலும் 8ம் வகுப்பு நிலையில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான செலவை இஸ்ரோ ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்துக்கு மாநில அரசுகளும், கல்வி நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

விண்வெளி துறையில் தொடக்க நிலையில் வளர்ந்து வருபவர்களை ஊக்குவிப்பதற்கான ஆய்வு மையங்கள் திருச்சி, நாக்பூர், ரூர்க்கெலா, இந்தூர் நகரங்களில் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே திரிபுரா மாநிலத்தில் இதுபோன்ற ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு மேலும் 54 செயற்கை கோள்கள் தேவைப்படுகின்றன. அவற்றை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தினமணி: "பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?"

பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"மக்களவைத் தேர்தலை எத்தனை மாதங்களில், எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை, தேர்தல் நடத்துவதற்கான பிற ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை கணக்கில் வைத்து, தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம், ஒடிஸா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

அதேபோன்று நடப்பு ஆண்டு இறுதியில் பேரவையின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

இந்து தமிழ்: "விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவரானார் ராகேஷ் அஸ்தானா"

விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவரானார் ராகேஷ் அஸ்தானா

பட மூலாதாரம், PTI

சிபிஐயின் இணை இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, விமானப் பாதுகாப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுளள்து.

"சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி மோதல் போக்கு கடந்த ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது.

இதனால், இரு உயரதிகாரிகளையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அலோக் குமார் வர்மா மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அலோக் வtர்மாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை ரத்து செய்ததுடன், அவருக்கு மீண்டும் பொறுப்பை வழங்கியது.

மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய உயர்நிலைக் குழு, அலோக் குமார் வர்மாவை, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து மாற்றியது. தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை தலைமை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். எனினும், அப்பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "எதிர்கட்சித் தலைவர்கள் பிரமாண்ட பேரணி"

மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், NURPHOTO

படக்குறிப்பு, மம்தா பானர்ஜி

எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜக அல்லாத அணியை உருவாக்கும் முனைப்பில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடக்கும் பேரணியில் முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பங்குபெற உள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவ கௌடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போன்ற பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: