You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் - ரஷ்யா உறவு குறித்து ஆதாரம் உள்ளதாக கூறிய மாடல் அழகி கைது மற்றும் பிற செய்திகள்
டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யா தலையீடு: ஆதாரம் உள்ளதாக கூறிய மாடல் அழகி கைது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்த பெலாரசை சேர்ந்த மாடல் அழகி தற்போது ரஷ்ய காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாஸ்டியா யர்ப்கா என்னும் அந்த மாடல் அழகி முன்னதாக தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். பின்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலையம் வந்த அவர் கைது செய்யப்பட்டார்.
நாஸ்டியா கைதுசெய்யப்படுவது போன்ற காணொளியை அவரது வழக்கறிஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாஸ்டியாவை போன்றிருக்கும் பெண்ணொருவரை நான்கு ஆண்கள் வலுக்கட்டாயமாக சக்கர நாற்காலி ஒன்றில் வைத்து தள்ளிச்செல்வதையும், பின்னர் சுமந்து செல்வதையும் அந்த காணொளி காட்டுகிறது.
உலகின் 2வது இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்: இலக்கை எட்டியது எப்படி?
உலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார். இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்,
டெல்லியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தபடி இருக்கும் குகேஷிடம் களைப்பின் சுவடே இல்லை. சுறுசுறுப்பாக, அதே நேரம் அமைதியாக பதில் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். சற்றுத் தள்ளியிருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் குகேஷின் தந்தை ரஜினிகாந்த், "களைப்பாக இருக்கிறது. அதே நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார்.
சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் படிக்கும் டி குகேஷுக்கு வயது தற்போது 12 வயது 7 மாதம். உலகில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியவர்களில் மிகவும் இளையவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜகின். இருந்தபோதும் இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்தான்.
தெலுங்குப் பின்னணியைக் கொண்ட டாக்டர் ரஜினிகாந்த் ஒரு காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர். இவரது மனைவி பத்மா குமாரியும் ஒரு மருத்துவர்தான். இந்தத் தம்பதியின் ஒரே மகன்தான் குகேஷ்.
10YearChallenge: 10 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியுள்ளது?
மூக ஊடகங்கள் முழுவதும் இந்த #10YearChallenge கடந்த 2 வாரங்களாக வைரலாக பரவியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
ஒன்றுமில்லை, தற்போது எடுத்த புகைப்படத்தையும், 10 ஆண்டுகளுக்கு முன்பாக 2009ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் வைத்து நீங்கள் எவ்வளவு மாறியிருக்கிறீர்கள் என்று பார்ப்பதே இந்த #10YearChallenge.
இந்த சவாலை லட்சக்கணக்கான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால் சிலரோ இந்த சவாலை உலகில் நடந்த பெரும் அளவிலான மாற்றங்களை பிரதிபலிக்க பயன்படுத்தியுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது முக்கிய பிரச்சனையாக இருந்தாலும், இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதனால் பல நாடுகளில் வசிக்கும் மக்களும், தங்கள் ஆற்றல் ஆதாரங்களை மாற்றி வருகின்றனர்.
விரிவாக படிக்க: 10YearChallenge: 10 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியுள்ளது?
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல என்றும் பல ஆண்டு காலமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு ஏற்பாடு எனச் சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ். பாரதி, இந்த பத்து சதவீத இடஒதுக்கீடு பொது நீதிக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை
மெல்பர்னில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.
மகேந்திர சிங் தோனி 87 ரன்கள் அடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவருக்கு பக்கபலமாக 57 பந்துகளில் ஏழு பௌண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார் கெதர் ஜாதவ்.
231 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றலாம் என்ற எண்ணத்தோடு இலக்கை விரட்டத் துவங்கியது இந்தியா. ரோஹித் ஷர்மா 9 ரன்களுக்கும், ஷிகர் தவான் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 62 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
விராட் கோலி ஆட்டமிழந்ததும், தோனியும் கேதர் ஜாதவும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
விரிவாக படிக்க: தோனி, சாஹல் அபாரம் : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்